வாழ்தல் என்பது மூச்சுக்காற்றை விடுவது மட்டும் தான் என்பது பலரது எண்ணம். அதுவல்ல வாழ்தல்.
“உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே”
என்ற திருமூலரின் வாக்குப்படி அகத்தில் உள்ள கோவில் கொண்டுள்ள இறைவரை அகப்பூசை செய்வது சிறந்ததாகும். பூசலார் தன் மனத்தில் கட்டிய அகக் கோவிலில் தான் இறைவன் எழுந்தருளினார். எனவே இறைவன் வழிபட்டு வாழ அகப்பூசையே சிறந்தது.
அனுபூதிமான்கள் தங்கள் அகத்தில் கண்ட அனுபூதி உண்மை முற்றிலும் அனுஸ்டானத்திற்கு உரியது. இது வெறும் மேடை பேச்சிற்கோ, உபன்யாசத்திற்கோ மட்டும் அல்ல. மனத்தில் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையில் செயல்படுத்துவதாகும்.
வாழ்தல் என்றால் மூச்சுக்காற்றை சுவாசிப்பது என்பதல்ல. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றோடு மட்டும் தன்னை இணைத்துக் கொண்டு இருப்பதை அல்லது தக்க வைத்துக் கொள்வது பற்றி மட்டுமே உயிர் வாழ்தல் என்று எண்ணுவது தவறு. இதுவும், இதுமட்டுமல்லாமல் ஒலியுடன் உங்களை இணைத்துக் கொள்வது உயிர் வாழுவதும் வாழ்தல்தான்.
அத்துடன் ஒளியுடன் உங்களை இணைததுக் கொண்டு வாழ்வதும் இருக்கின்றது. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுபவை அத்யாத்மிக வாழ்க்கையும் லெளகீக வாழ்க்கையும் ஆகும். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இரணடும் இரண்டு துருவங்கள் என எண்ணுவது சமயத்தைச் சரியாக அனுபவிக்காதவர்களின் தவறான கூற்றாகும்.
அத்யாத்மிக வாழ்க்கை என்பது உள்வழிப் பயணம் அதாவது தியான வாழ்க்கை. லெளகீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை. இது வெளி வாழ்க்கை.
சமயம் என்பது மனிதனைச் சமைத்து நெறிப்படுத்துவது. அதாவது, இவ்வுலகத்தில் வாழும் ஒருவன் இப்படித்தான் வாழ வேண்டும் என வழிகாட்டுவது.
அகத்தில் இதனை அனுஷ்டிக்க அனஷ்டிக்க ஒருவருடைய புற வாழ்க்கை நெறிபடுகிறது. நடைமுறை வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும், வெவ்வேறானவை அல்ல, உள்ளே எதுவாக உங்களை எண்ணிக் கொள்கிறீர்களோ வெளியில் நீங்கள் அதுவாகவே இருக்கின்றீர்கள். நம் புற வாழ்க்கை என்பது, நம்முடைய அக வாழ்க்கையின் வெளிப்பாடே. ஒரு நாள் முழுவதும் நாம் எதைப்பற்றி நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். சமயவாதிகளும் தத்துவ வாதிகளும் உளவியல் அறிஞர்களின் கருத்துவும் இதுவே.
உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் நீங்கள் காணும் இந்த உலகம். நீங்கள் புறத்தே பார்க்கின்றவை அனைத்துமே உங்கள் அகத்தில் உங்கள் மனதில் எண்ணத்தில் தோன்றிய பின்னர்தான் இந்த வடிவம் எடுத்து வந்துள்ளீர்கள்.
சூட்சுமம் என்பது அத்யாத்மிகம் என்ற உள்ளொளிப்பயணம்,ஸ்தூலம் என்பது லெளகீகம் என்ற வெளிப்பொருள் சார்ந்த வாழ்க்கை. அதாவது குடும்ப வாழ்க்கை. அகத்தின் பிரதியே புறம் ஆகும். ஸ்தூலம் அதன் பிரதிபலிப்பே. உங்களால் நடைமுறையில் கடைபிடிக்க முடியாத ஒன்றை தவஞானிகள் – அனுபூதிமார்கள் – உங்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் வாழ்வில் கடைபிடித்த தங்களுடைய அனுபவங்களைத்தான் உங்களுக்கு விட்டு சென்றுள்ளார்கள்.
இந்த பாதை பழையதுதான், ஆனால் பயணம் புதியது பயணிக்கும் நாம் புதியவர்கள். இது பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணித்த பாதைதான். இதனை நமது வாழ்க்கைக்குள் எடுத்து செல்ல செல்ல நமது வாழ்க்கை உயர் தகுதியைப் பெறும்.
எம்மையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்