இலங்கையின் வட பால் அமைந்துள்ள சப்த தீவுகளின் நடுநாயகமாகத் திகழ்வது, நாக பூஷணித் தாயின் அருள் சுரக்கும் நயினையம்பதி. கடலலையின் அரவணைப்பில் கண்வளர்ந்து அருளன்னையின் ஆலயமணி ஓசையில் புலர்ந்து உலகில் தனக்கென தனியொரு வதிவிடப் பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குவது அம் மணித்தீவு. “மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது” என்பதற்கேற்ப சிறிய தீவாக இருப்பினும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள் இங்கு வாழ்ந்துள்ளமையால் கல்வி மேம்பாட்டிலும் சிறப்புண்டு. “கண்ணுடையார் என்போர் கற்றோர்” என்று கூறுவார் வள்ளுவப்பெருந்தகை. கல்வியானது அறியாமையைப் போக்கி அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை வளர்த்து ஒழுக்கசீலர்களான மக்களை உருவாக்கவல்லது. அத்தகைய கல்வியிலும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் நயினை மக்கள் மேம்பட்டு, மற்றையோர் வியக்கும் வகையில் உள்ளனரென்றால் அதற்கு அடிப்படையாக அமைந்த இக்கிராமத்தின் நீண்ட கல்விப் பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் அதற்காக அற்பணிப்புடன் பணியாற்றியவர்களையும் நோக்குவதில் பெருமையடைகின்றோம்.
நயினையில் வாழ்ந்த பழம் குடிமக்கள் தமிழர்களாகவும் சைவ சமயத்தவர்களாகவும் வாழ்ந்ததால் தாய்மொழிப்பற்றும் இறைநம்பிக்கையும் உடையவர்களாக இருந்தனர். அவர்களது பிரதானமான தொழில் விவசாயமாகும். இவர்கள் தமது ஓய்வு நேரங்களில் கல்வி அறிவையும் வளர்த்து வந்தனர். நாற்று நடுதல், ஏற்றம் இறைத்தல், களை பிடுங்குதல் போன்ற வேலைகளில் இசையோடு கூடிய பாடல்களைப் பாடினர். இப்பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி மகிழ்ந்தனர். இப்படியாக செவிவழிக் கல்வி அக்காலத்தில் வளர்ந்தது. வீடுகளில் பாரதம், இராமாயணம் போன்ற நூல்களை வாசிக்கத் தெரிந்த ஒருவர் வாசிக்க அயலவர்கள் கூடியிருந்து கேட்பர். எழுத வாசிக்கத் தெரியாத நயினை முதியவர்கள் பலர் பாரதம், இராமாயணச் செய்யுள்களை பிழையின்றி மனனம் செய்து வைத்துள்ளமையை இன்றும் நாம் காணலாம்.
நயினைக் கல்வியில் அடுத்தபடியாக அமைவது திண்ணைப் பள்ளிக் கூடங்களும், புராண படனக் கலாசாரமுமாகும். பாடசாலைகள் ஏதுமற்ற காலத்தில் இப்பகுதி அறிவறிந்த பெரியோர்கள், தம் வீட்டுத் திண்ணையில் தம்மிடம் வரும் பிள்ளைகளுக்கு கல்வி போதித்தனர். வேதனம் ஏதுமின்றி எழுத்தறிவத்தலைப் புண்ணியமாகக் கருதிப் பணியாற்றி வந்தனர். இத்தொண்டு புரிந்தவர்களில் முக்கியமானவர்கள் திருவாளர்கள் வேலாயுதர், வே.வைரமுத்து (தம்பிப்பரியாரியார்), க.வீரகத்தியர், சிவகுரு ஆறுமகம், கந்தப்பண்டாரம், சின்னத்தம்பி என்போர் நினைவுகூரத்தக்கவர்கள். அவர்கள் தொண்டு வாழ்க. குருகுலக்கல்வி முறையிலான கல்வி நல்ல பண்பாட்டுடன் வளர்ந்தது. ஆசிரியர் வீடு சென்று ஆசிரியருக்குரிய பணிவிடைகளைச் செய்து உடனுறைந்து கற்பதே குருகுலக்கல்வி முறை. இக்கல்விமுறையினால் இலக்கணம், இலக்கியம், கணிதம் என்பன பற்றிய விளக்கமான அறிவு மாணவர்களுக்கு ஏற்பட்டது.
நயினையில் ஆலயங்கள் பலவற்றில் அக்காலங்களில் கந்தபுராணம் , வாதவூரடிகள் புராணம் என்பன படித்து பயன் சொல்லும் மரபு இருந்தது. அதன் மூலம் கல்வி அறிவையும், இலக்கிய ரசனையையும், இறைபக்தியையும் வளர்த்த பெருமை இக்கிராமத்து மூதறிஞர்களையே சாரும்.
நயினாதீவிலே பின்வரும் பாடசாலைகள் மாணவர்களுக்கு கல்வி அமுதை ஊட்டி வருகின்றன.