இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.
ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.
அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது.
வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788 இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இவ்வாலயத்தில் 1951, 1963, 1983, 1998, 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களில் 1958, 1986 ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது.
இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது.
இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ்டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் 1.4.1998 முதல் நடைபெறுகின்றது.
வன்னியும் வேம்பும் இவ்வாலயத்தின் தல விருட்சங்களாக விளங்குகின்றது.
1986 ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டு பேர் கொண்ட அறங்காவலர் சபையினர் இவ்வாலயத்தை பரிபாலனஞ் செய்து வருகின்றனர்.
[nggallery id=2]