நயினாதீவின் வைத்திய சேவையைக் குறிப்பிடுகையில் நாட்டு வைத்திய முறைமையும், ஆயுள் வேத வைத்திய சிகிச்சை முறையுமே இருந்து வந்திருக்கின்றது. இயற்கை வைத்தியம் தீங்கற்றது, குறிப்பாக நாடிபிடித்து நோயை இனங்கண்டு வைத்தியம் செய்யும் வழக்கம் இன்றும் இருக்கின்றது. எமதூரில் குழந்தைப் பேற்றிற்கு 4ம் வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த திருமதி குழந்தை கதிரன் என்றழைக்கப்படும் அம்மையார் கைதேர்ந்தவர். ஆண் குழந்தையொன்று பிறந்துவிட்டால் ‘மூரிஉலக்கை’ எறியும் வழமையும் இருந்தது, பாம்பு போன்ற விச ஜந்துக்கள் கடித்தால் ‘பார்வை பார்த்து’ விசத்தினை இறக்குவர். உடனடிச் சிகிச்சையாக கடியுண்டவர் தனது சிறுநீரைக் குடித்தல், கடிபட்ட இடத்திற்கு மேல் கட்டுப் போடுதல், கழுவுதல் போன்ற முறை இருந்து வந்தது.

வைத்தியம் செய்யும் ஒரு பரம்பரை இருந்து வந்திருக்கின்றது. வைத்தியர் அமரர் தம்பையா அவர்களும், அவர்களது மக்கள் அனைவரும் கைதேர்ந்த வைத்தியர்களாக இன்றும் சேவை செய்து வருகின்றனர். பெயர் பெற்ற வைத்தியரான அமரர்.த.சோமசேகரமும் அவர்களது புத்திரர்களும் இப்பணியை சிறப்பாகச் செய்கின்றார்கள். ஆயுள் வேதக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது முதல் மாணாக்கராகச் சேர்க்கப்பட்டு, சிறப்புச் சித்தி பெற்று தேறிய ஆயுள்வேத வைத்தியக்கலாநிதி ஆ.இராமப்பிள்ளை ஆவார். துரதிஸ்டவசமாக அவருக்கு அரச நியமனம் கிடைக்கவில்லை. இவரைத் தொடர்ந்து எம்மூவர் பலர் ஆயுர்வேதக் கல்லூரியில் படித்து வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் சேவை செய்து வருகின்றனர். செய்யுள் முறையிலேயே நோயின் குணங்களும் அதற்கான சிகிச்சை முறையும், தொகுக்கப்பட்டிருக்கும். பரியாரியார் அமரர் கந்தையாவும் செங்கமாரி நோய்க்கு கைவந்த வைத்தியர்.

முன்னர் ஆயுள் வேத வைத்திய முறை நிறுவனமயப்படுத்தப்படவில்லை. வைத்திய கலாநிதி கௌரவ தகநாயக்கா அவர்கள் அமைச்சராக வந்தபோதே சுதேச வைததியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளுராட்சி மன்றங்களில் ஆயுள்வேத முறையை அமுல்படுத்தினார். (இவர் ஆயுள்வேத வைத்திய கலாநிதியாவார்) இதன் பயனாக நயினாதீவு உள்ளுராட்சி மன்றத்திற்கு ஆயுள்வேத வைத்தியரொருவர் நியமிக்கப்பட்டார். முதல் வைத்தியராக அமரர் த.சோமசேகரம் அவர்கள் நியதிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து எமதூர் வைத்தியர்களும் ஏனையோரும் பணி சிறக்கப் பாராட்டும் வகையில் தம் கடன் பணி செய்தோர்.

 • வைத்திய கலாநிதி அமரர்.த.சோமசேகரம் – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி அமரர்.த.மயில்வாகனம் – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி வி.மாசிலாமணி – அளவெட்டி
 • வைத்திய கலாநிதி அமரர்.சிவாவேலாயுதம் – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி திருமதி சாந்தினி சிவகுமார் – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி தி.சிவசுதன்
 • வைத்திய கலாநிதி திருமதி பூபதீஸ்வரி
 • திருமதி ஆர்.ஜெகநாதன்
 • வைத்திய கலாநிதி எஸ்.சிவபாலன்
 • வைத்திய கலாநிதி திருமதி எட்னா மரியவினிரொனி ஜஸ்ரின்யுட் – யாழ்ப்பாணம்

ஆங்கில வைத்திய முறையானது பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளை வைத்து, நோயை இனங்கண்டு மருத்துவர்களால் கொடுக்கப்படும் மருந்துகளும் சிகிச்சைகளுமாகும். இதில் பக்க விளைவுகளும் இருக்கத் தான் செய்யும் நயினாதீவைப் பொறுத்த வரையில் 1940  ஆம் ஆண்டிற்குப் பின் தான் ஆங்கில வைத்திய முறை நிலை கொண்டிருக்க வேண்டும். தனியார் வீட்டில் (தலைமை வாத்தியார் அமரர் ச.நா.கந்தையா அவர்களின் 1ம் வட்டாரத்திலுள்ள வீடு) வைத்தியர் சின்னையா அவர்கள் வைத்திய சேவையைச் செய்து வந்தார். பெரிய வெட்டுக் காயங்களுக்கு தையல் போடும் வைத்திய வசதிகள் இருக்கவில்லை. இவரின் வருகைக்குப் பின்னே தையல் போடும் முறை காலங்கடந்து எம்மூர் மக்களுக்குக் கிடைத்தது. இதனால் வீணாண குருதிப் பெருக்கும், பெரிய தழும்பு போன்ற அடையாளங்களும் இறப்பும் தவிர்க்கப்பட்டது.

எமக்கென ஒரு வைத்தியசாலை வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றம் வரை சென்று அதன் பயனாக 1952 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சராக இருந்த சேனாதிபதி சேர் ஜோன் கொத்தலாவலை அவர்களால் எமதூர் வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா இனிதே நடைபெற்றது. 1954 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 1ம் திகதி பிரதம மந்திரியாகவிருந்த அதிகௌரவ சேனாதிபதி சேர் ஜோன் கொத்தலாவலை அவர்கள் உலங்குவானூர்தி மூலம் வந்திறங்கி வைத்தியசாலையை இனிதே திறந்து வைத்தார். முதல் வைத்தியராக வைத்திய கலாநிதி அமரர் பொ.நடராசா அவர்கள் கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் மனங்கொள்ளத் தக்க வகையில் சேவையாற்றினார். இவரைத் தொடர்ந்து பின்வரும் வைத்தியதிகாரிகள் சேவையாற்றினார்கள்

 • வைத்திய கலாநிதி பொ.நடராசா – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி எஸ்.அப்பாத்துரை
 • வைத்திய கலாநிதி எஸ்.வினாயகமூர்த்தி – கரவெட்டி
 • வைத்திய கலாநிதி சு.கதிரேசு (இருமுறை – நயினாதீவு)
 • வைத்திய கலாநிதி எஸ்.பழனிவேலு – அனலைதீவு
 • வைத்திய கலாநிதி அ.செந்தில்குமாரன் – திருநெல்வேலி
 • வைத்திய கலாநிதி எஸ்.தர்மலிங்கம்
 • வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீராகவன் – இமையானன்
 • வைத்திய கலாநிதி செல்வி சேனாதிராசா – காரைநகர்
 • வைத்திய கலாநிதி எஸ்.தர்மசீலன் – கோண்டாவில்
 • வைத்திய கலாநிதி ஆ.கருணாகரன் – குப்பிளான்
 • வைத்திய கலாநிதி எஸ்.சத்தியசீலன் – யாழ்ப்பாணம்
 • வைத்திய கலாநிதி தியாகர் திருநாவுக்கரசு – (இருமுறை – நயினாதீவு)
 • வைத்திய கலாநிதி செல்வி அருணா பத்மநாதன் – நயினாதீவு
 • வைத்திய கலாநிதி அமரர் அ.சங்கரப்பிள்ளை – காரைநகர்
 • வைத்திய கலாநிதி எஸ்.இரட்னசபாபதி – புங்குடுதீவு
 • வைத்திய கலாநிதி எஸ்.டயஸ் – காலி
 • வைத்திய கலாநிதி ரெறனஸ் புஸ்பராசா – அச்சுவேலி
 • வைத்திய கலாநிதி மெடோனா செல்வரெத்தினம்
 • வைத்திய கலாநிதி அபிராமி ஆனந்தராசா – பருத்தித்துறை

எமது வைத்தியசாலையைப் பொறுத்தவரை தாதியர் ஒருவரும் இங்கில்லை. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது எம் அனைவரதும் முக்கிய பொறுப்பாகும்.