இலங்கையில் பௌத்த சமயத்தின் புராதன புனித வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக நயினாதீவு, 2 ஆம் வட்டாரத்திலுள்ள நாகதீப விகாரை விளங்குகின்றது. புத்தபகவானின் இரண்டாவது இலங்கைப் பயணம் இடம்பெற்ற புனித பூமியாக நயினாதீவு (மணிநாகதீவு) கருதப்படுகின்றது. புத்தபகவான் புத்தர் நிலை எய்திய ஐந்தாம் ஆண்டில் குளோதர, மகோதர என்றும் இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும்போரை விலக்க, மணிநாகதீபத்திற்கு விஜயம் செய்தார் என்று கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் பௌத்த கோயில் இருந்த ‘சந்தனை’ என்னும் காணியில் 1950 ஆம் ஆண்டில் பௌத்தமடம் ஒன்று அமைக்கப்பட்டது.
வணக்கத்திற்குரிய றன்தோபே சோமசிறி திஸ்ஸ அவர்கள் நயினாதீவின் பிரதானவீதி ஓரத்தில் ஒரு காணியை வாங்கி தற்போதுள்ள கோயிலை 1939 – 40 இல் அமைத்தார். அதன்பின்னர் 1946 ஆம் ஆண்டளவில் வணக்கத்திற்குரிய பிராக்மணவத்தே பண்டித தர்மகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்கள் இக்கோயிலுக்கு வந்தார். 1947 ஆம் ஆண்டில் விகாரை கட்டப்பட்டது 1954 ஆம் ஆண்டில் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது வணக்கத்திற்குரிய நவதகல பதுமகிர்த்தி திஸநாயக்கதேரோ அவர்கள் இவ்விகாரையை பரிபாலித்து வருகின்றார். நாள்தோறும் பலர் வந்து வழிபடும் பௌத்த வணக்கத்தலமாக இவ்விகாரை விளங்குகின்றது. பழைய பௌத்த விகாரை நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் காணப்படுகிறது.
[nggallery id=7]