நயினை மண் ஈன்றெடுத்த நாகமணிப் புலவர் நயினைக்கு பெருமை சேர்த்த ஒரு வரகவியாவர். கதிரேசபிள்ளை தங்கமுத்து தம்பதியினரின் மகனாக விக்கிரம ஆண்டு மார்கழித் திங்கள் 10ம் நாள் (25.12.1880) வந்துதித்தார். அவருக்கு நாகமணி என்று பெயர் சூட்டினர் பெற்றோர். ஐந்து வயதாகியதும் வித்தியாரம்பம் செய்யப் பெற்று வீரகத்திப்பிள்ளை ஆசியரால் நடத்தப்பட்ட திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கற்று வந்தார். அதன் பின் தில்லையம்பல வித்தியாசாலைக்குச் சென்று அங்கிருந்த சோமசுந்தர ஐயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்று வந்தார்.

விவசாயத்தில் ஈடுபட்ட தகப்பனாருக்கு உதவியாகவிருந்தார். அந்நேரங்களில் தகப்பனாரும் அவருக்கு கல்விப் போதனை செய்து வந்தார். நாகமணி தாமாகவே பாரதம், இராமாயணம், நடனம் முதலிய இலக்கியங்களையும் நிகண்டு முதலியவற்றையும் கற்று வந்தார். ஓய்வு கிடைக்கும் போது தந்தையாரின் ஆட்டு மந்தைகளையும் மேய்த்து வந்தார். ஆடுகளின் தொகைகளை கவிதை மூலம் நினைவுபடுத்தி வந்தார். ‘கறுத்தான்’ இரண்டொடு சுட்டியொராறு’ எனப் பாடியிருந்தார். ‘தில்லையன்’ எனும் ஆட்டுக்குட்டி இறந்த போது மனம் மிக வருந்தி அதனைத் தகனம் செய்து 31ம் நாள் சரம கவியும் பாடினார். நன்மைபெறு ஐய வருடம் அதனிலே தை மாதம் நாள்தேதி பதினைந்திலே’ எனத் தொடங்கும் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் தொடங்கி “புனையரவு மதியுமணி கயிலைநாதனின் பொன்னடியை மேவினானே”என முடித்திருந்தார்.

இதனைப்பாடிய சிலேடைப் பாடல்கள் பல இன்று எமக்குக் கிடைக்கவில்லை. இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் இவர் பாடல்களை வாய்மொழியாகக் கூறியதைக் கேட்டுள்ளோம். வாலிப வயதில் வர்த்தக துறையில் ஈடுபட்டு வந்த இவர் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரின் கணக்குப் பிள்ளையாகப் பணியாற்றும்படி கேட்கப்பட்டார். செட்டியாருக்கும் நல்ல தமிழறிவு படித்தவர்கள்;அவர்களுடைய தொடர்பும் இவரது தமிழறிவை வளர்க்க உதவியது. அவர்களுடன் சேர்ந்து இந்தியா சென்று வரும் காலங்களில் பல தமிழர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரது திறமையை கண்ட வல்லிபுரம் என்பவர் தனது வீட்டில் இயங்கிய நகைக்கடையின் நிர்வாகியாக புலவரை நியமித்தார். நயினாதீவு நாராயணபிள்ளை சின்னம்மா அவர்களைத் திருமணம் செய்து அவருடன் யாழ்ப்பாணம் வந்த போது வழி நடையிலிருந்து பாடினார். வல்லிபுரம் அவர்கள் தனது மனைவியின் நினைவாக யாழ்நகர் மத்தியில் கங்காசத்திரத்தை மேல்மாடியுடன் கட்டி முடித்தார். நயினாதீவிலிருந்து யாழ் வரும் வழியில் கண்காட்சிகளைக் கூறி சத்திரத்தை வந்தடைந்த செய்திகளை அழகுற பாடியுள்ளார். அச்சிந்தில் சத்திரத்தை வந்தடைந்த செய்திகளை அழகுற பாடியுள்ளார். அச்சிந்து ‘சத்திரத்தைப் பார்ப்போம் பெண்ணே – எட்டி’ எனத் தொடங்குகிறது. பல கண்ணிகளைக் கொண்ட இந் நூல் முழுவதையும் தமிழறிஞர் குலசபாநாதன் அவர்கள் ஸ்ரீ லங்கா என்னும் சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஈழநாட்டுப்புலவர் சரித்திரம் எழுதியதோடு 19ம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் நயினை நாகமணிப்புலவரும் ஒருவர் எனக்குறிப்பிட்டுள்ளார்.

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்தூர் நிரோட்டயமக அந்தாதியை பாராட்டிய தென்னிந்தியச் செட்டிமார் இத்தகைய ஒரு நூலை உங்கள் ஈழத்தில் யாராவது இயற்றியது உண்டா எனக் கேட்டதைச் சவாலாகவே ஏற்றுக்கொண்டு நயினை அம்பிகையைத் துதித்து மூன்று நாட்களில் இந்நூலைப் புலவர்கள் இயற்றினார்.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வித்துல சிரோமணி சி.கணேசையர் புலவர்களின் இலக்கிய நூலுணர்வையும் வடமொழியாற்றலையும் சொல்லாட்சியையும் கவித்துவ ஆற்றலையும் ஒருங்கே எடுத்துரைப்பதாக இந்நூல் விளங்குகின்றது என்று கூறியதோடு பெருவிளங்கு கலைகளெலாம் தெரியக் கற்றோன் பெரிதுகவி இயற்கையினிற் பாடும் நாவான்’ என்றும் பாராட்டியுள்ளார். இந்நூல் வே.க.த. சுப்பிரமணியம் (தாமோதரம்பிள்ளை) அவர்களால் 1930ம் ஆண்டு நாவலர் அச்சகத்தில் பதிக்கப்பெற்று 10 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நூலுக்கு திருப்பனந்தாள், இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் கவிஞர் ம.வே.பசுபதி அவர்கள் புத்துரையும் பொழிப்புரையும் எழுதியுள்ளார். நயினைமான்மியம் என்ற நூலில் இப்பாடல்களும் பொழிப்புரையும் இணைக்கப்பட்டுள்ளன. நயினையின் பெருமையைக் கூறும் நூலாக நயினைமான்மியம் என்னும் ஒரு காவியத்தையும் புலவர் படைத்துள்ளார். நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் மீது காதல் கொண்டு அவரது பாதார விந்தங்களைச் சென்றடைவதாக வர்ணிக்கப்படுகின்றது. இந்நூல் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட பாடல்களைக் கொண்டது. புராண இதிகாசங்களையும் காவியங்களையும் வரலாற்று ஆதாரங்களையும் துணையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இப்பாடல்களுள் கிட்டத்தட்ட 600 பாடல்கள்களைத் தொகுத்து 2005ம் ஆண்டு நயினை மான்மியம் என்னும் பெயரில் திரு.ப.க.பரமலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது இந்நூலின் இணைப்பாக நீரோட்டயமக அந்தாதி, வழிநடைச் சிந்து என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன. முழுப்பாடல்களையும் உரையுடனும் பொழிப்புரையுடனும் வெளியிடும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. பண்டிதர், வித்துவான். ச.செல்லத்துரை அவர்கள் எழுதிவரும் உரை அநேகமாக நிறைவடையும் நிலையிலுள்ளது.

இயற்கையாகவே கவிபாடும் திறன் பெற்றிருந்தமையால் ‘வரகவி’ எனறழகைக்கப்பட்டார். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் நயினாதீவின் கிராமபிதாவாக, கிராமசபைத்தலைவராக. கிராமக்கோட்டு நீதிவானாகவும் பணியாற்றினார். இப்பதவிகள் மூலம் நயினாதீவு மக்களுக்கு அரிய சேவைகளைச் செய்தமையால் மக்கள் இவர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். 53வது வயதிலே ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதகமலங்களைச் சென்றடைந்த புலவரின் புகழ் தமிழ் கூறும் உலகில் என்றும் நின்று நிலைக்கும்.

வாழ்க நாகமணிப்புலவரின் திருநாமம்.

ஆக்கம் :ப. க. மகாதேவா J.P