நயினாதீவு 7 ஆம், வட்டாரத்தில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டு நயினாதீவில் வாழ்ந்த முடிநாதர் மரபில் தோன்றிய தையலியாசி எனும் பெண் வேதாரணியம் சென்று அங்கிருந்து ஒரு விநாயகரை நயினாதீவுக்குக் கொண்டு வந்தார். இவ்விநாயகர் சிலை நம்பிபுலம், நடுவகாடு, மூத்தனார் கோயில், பிள்ளையார் புலர் ஆகிய இடங்களில் வைத்து வழிபடப்பட்டு வந்தது. இச்சிலையே சுமார் 300 வருடங்களுக்கு முன் செம்மணத்தம்புலத்தில் நிலையான ஓர் ஆலயம் அமைந்து வழிபாடற்றப்பட்டு வருகின்றது. அதன் பின் 1918 ஆம் ஆண்டு புதிய விநாயகர் சிலை ஸ்தாபிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டில் இருந்து அலங்காரத் திருவிழா நடைபெற்று வருகிறது. 1952 ஆம் ஆண்டு தொடக்கம் மகோற்சவ விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகின்றது. 1972 இல் அழகிய சித்திரைத் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆலய சுற்றுப் பிரகாரத்தில் 32 விநாயகருக்கு படிமங்களைக் கண்டு தரிசிக்கலாம்.

இவ்வாலயத்தில் 1918, 1947, 1968, 1982, 1999 ஆகிய ஆண்டுகளில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது. எளிமையான வர்ணங்கள் பூசப்பட்டுள்ள ஓர் அழகிய ஆலயமாக இக்கோயில் திகழ்கின்றது. மருதமரம் இவ்வாலயத்தின் தல விருட்சமாக கருதப்படுகிறது. நயினாதீவுச் சுவாமிகள் இப் பழைய மரத்தின் கீழ் அமர்ந்தே பல ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

[nggallery id=4]