சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர்.  கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே.

சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இத்தீவின் மறுபெயர்களாவன, நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் என்பனவாம். ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர்.

நாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயன என அழைக்கப்பட்டிருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது.

இத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வட கீழ் திசையில் நாகபூசணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டுவித்தாரெனவும் மதுரை வைசியர்களிடமிருந்து பெற்ற ஏடுகள் கூறுகின்றன. மாநாய்கன் என்னும் வைசியரே நயினார் பட்டரென்ற அந்தணரையும், கண்ணப்பன் என்ற வேளாளரையும் நயினாதீவுக்கு கொண்டு வந்தார். அக்காலத்தில் நாகதீவெனவே வழங்கப்பட்டது. நயினார்பட்டார் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தன் ஞாபகத்தைப் பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார். காலப்போக்கில் நயினார்பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரினதும் செல்வாக்கும் விருத்தியடைய ‘நாக’ என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று. இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாகபூசணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன. நயினார்பட்டரின் 20 ஆம் தலைமுறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூசணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினார்தீவு என்ற சொல்லில் ‘ர்’ விடப்பட்டு நயினாதீவு ஆகியது.

பூந்தோட்டம்

பூந்தோட்டமென்பது புராதன பெயராகும். இந்தியாவிற் சிதம்பரத்தைத் தில்லையெனவும் அழைப்பர். அங்கேயுள்ள ஆலயங்களுக்குத் தேவையான பூக்களைப் பெறுவதற்காக நயினாதீவுத் தில்லை வெளியில் ஒரு பெரிய பூந்தோட்டமமைக்கப்பட்டு பூக்கள் சிதம்பரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. தில்லைக் கோயிலிற்குத் தேவையான பூந்தோட்டமாகையாற் தில்லைப் பூந்தோட்டமென அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தியாவிலே பூக்கள் கிடைத்தமையால் இத்தோட்டம் கைவிடப்பட்டு பூமரங்கள் அழிந்து, பரந்த சமவெளியாகியபடியால் தில்லைவெளியென அழைக்கப்படுகிறது. இப்பகுதி தற்போது பிடாரி கோயில் இருக்கின்ற பகுதியாகும். தில்லை வெளி என்னும் காணி தோம்பேட்டில் 200 பரப்புடையதாகக் காணப்படுகிறது. சிதம்பரக் கோயிலின் முற்கால ஏடுகளில் இவ்விபரங்கள் காணப்பட்டதாக அறியக் கிடக்கின்றது. தற்போது நுவரெலியாவில் உற்பத்தியாகின்ற பூக்கள் யாழ்ப்பாணம் வரையும் வருவது போல, முற்காலத்தில் இங்கிருந்து பூக்கள் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

நாகதீபம்

இச்சொல் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிப்பிடுவதாகக் கூறுவார் சிலர். தீபம் என்ற சொல் தீவு எனும் பொருளுமுடையது. யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தீவு அல்ல. அது நான்கு பக்கமும் கடலாற் சூழப்படவில்லை. ஆகவே, நாகதீவே நாக தீபமாகும். நாகதீப – இச்சொல் சிங்களச் சொல்லாக இருக்கலாம். யாழ்ப்பாணம் ‘யாப்பனய’ என்பது போல நாகதீபம் ‘நாகதீப’ என அழைக்கப்பட்டுள்ளது.

நாவலந்தீவு, சம்புத்தீவு, நரித்தீவு

சம்பு என்ற சொல், சிவன், நாவல், நாவலந்தீவு, நரி என்பவற்றைக் குறிக்கும். நாவலந்தீவு என்ற சொல்லுக்கு  தமிழ் லெக்ஸிகன் அகராதியில் 2229 ஆம் பக்கத்தில் ஏழு தீவுகளில் உப்புக் கடல் சூழ்ந்த தீவு எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. சம்பு என்ற சொல் நரியையும் குறிப்பதனால் சிலர் நரித்தீவு எனச் சம்புத்தீவு என்ற பெயருக்கு மாறான கருத்துக் கொண்டிருக்கலாம்.

மணிபல்லவம்

கலைக்களஞ்சியம் தொகுதி 8 இல் ‘மணி’ என்ற சொல் நாகரத்தினத்தையே குறிக்கின்றது. நாகரத்தினத்தை வாங்க வந்த வைசியர்களினால் இப்பெயர்கள் அழைக்கப்பட்டதாக மதுரை வைசியர்களது பழைய ஏடுகள் கூறுகின்றன.

பிராமணத்தீவு

கி.பி 1658 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்ட நயினாதீவு குடிசன மதிப்பு பின்வருமாறு:

பிரிவு தொகை
பார்ப்பார் – புரோகித வேலை செய்வோர் 02
பார்ப்பார் – புரோகிதர் அல்லாதவர் 65
வேளாளர் 40
பரதவர் 15
கொல்லர் & தச்சர் 03
அம்பட்டர் 03
வண்ணார் 02
தோப்பேறிய நளவர் 13
பறையர் 07
மொத்த தொகை 150
ஆகவே, பிராமணக்குடிகள் 67, குடிமக்களில் பெரும்பான்மையோரின் பெயராற் பிராமணத்தீவு என அழைக்கப்பட்டது.

நாகேஸ்வரம்

முற்காலத்தில் நயினாதீவில் இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒரே ஆலயத்தில் வேற வேறாக இருந்தன. அப்பனும் அம்மையும் கோயில் கொண்டருளி இருந்த ஆலயமே நாகேஸ்வரமென அழைக்கப்பட்டது. அவ்வாலயப் பேரே ஊர்ப் பெயராக வழங்கி வந்திருக்கின்றது.