அறிவுத் தென்றலை நயினைக்கு தவழ்ந்து வரச் செய்து அதன் சுகந்த மணத்தை அனைவரும் நுகர்ந்து இன்புற்று மகிழவென்றே நற்பணிகள் பல புரிந்து வரும் நிலையங்களாக ‘சனசமூக நிலையங்கள்’ இன்று விளங்குகின்றது. கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு போன்ற சகல துறைகளிலும் நயினாதீவு சனசமூக நிலையங்கள் ஏனைய கிராமங்களுடன் போட்டி போடுமளவிற்கு முன்னிலையில் நிற்கின்றது.

நயினாதீவின் பல்வேறு சிறப்புக்களை ஒருங்கே தொகுக்கின்ற போது முக்கியமாக நயினாதீவு சனசமூக நிலையங்களின் பணிகளையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அந்த வகையில் நயினாதீவு சனசமூக நிலையம், ஸ்ரீ கணேச சனசமூக நிலையம், ஞானவைரவர் சனசமூக நிலையம், மணிபல்லவ சனசமூக நிலையம், அண்ணா சனசமூக நிலையம், பிடாரி அம்பாள் சனசமூக நிலையம், அம்பிகா சனசமூக நிலையம், இஸ்லாமிய சனசமூக நிலையம் ஆகிய ஒன்பது சனசமூக நிலையங்கள் கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளில் நற்சேவையாற்றி வருகின்றது. எமது ஊரினது விளையாட்டுத்துறை வளர்ச்சி பிரதேச, தேசிய தரங்களுக்கு நிகராக விளங்கியது எனக் கூறுவதில் சந்தேகமில்லை. இவற்றிற்கு சான்றாக சனசமூக நிலையங்கள் செயற்படுகின்றன. ஆரம்பகாலத்தில் முறையான விளையாட்டுத் திடல் இல்லாத காரணத்தால் விளையாட்டுக்கள் சிறப்பாக நடாத்தப்படவில்லை. 1960 க்குப் பிற்காலப்பகுதியில் சனசமூக நிலையங்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்காக நடாத்த ஆரம்பித்தது. சனசமூக நிலையங்கள் கல்வி, கலை, கலாச்சாரம் போன்ற வளர்ச்சிகளுக்கு 1976 க்குப் பின்னர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சனசமூக நிலையங்களுக்கு சென்று மக்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களை வாசித்து தமது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக விளையாட்டுப் போட்டிகள், சமய அறிவுப் பரீட்சைகள் போன்றவற்றை நடாத்தி பரிசில்களையும் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.