தியாகர் ஐயா…

25-02-1938 ….. 07-07-2022

ஆன்மீகமும் ஆளுமையுமாய் நிறைந்து பொலிந்திருக்கும் மணிபல்லவத்தீவு தன்மடியில் எண்ணற்றபெரும்மனிதரை எமக்காய்த் தந்திருக்கின்றது.ஒவ்வொரு
தனிமனிதரின் ஆளுமையின் வீச்சுகள் எங்கள் தீவின் எங்கெனும் இன்றும் ஒலித்தவண்ணமே இருக்கின்றது. என் வயதெல்லைக்குள் நான் கண்டுவியந்த  எத்தனையோ சொந்தங்களில் தியாகர் ஐயா அவர்களை என்னால் வியக்காமல் கடந்து செல்ல முடியாது. இன்றும்கூட அதிகாலைப்பொழுதில் அம்பாள் கோயில் மணியோசை கேட்கும் போது அவரின் குரலொலியும் சேர்ந்தே என் செவியில் ஒலிக்கின்றது. அத்தனை கனதியாய் என்னை ஆர்கசித்து நின்ற பெரும் மனிதர் அவர்.
உறவுமுறைக்குள் அவர் உரிமையுள்ள சொந்தமாக இருந்தாலும் நான் அவரை ஒருபோதும் அப்படி அழைத்ததில்லை. மிகச் சொற்பகாலமே நான் அங்கே வாழ்ந்த காலமும் அதற்குக் காரணமாக இருந்தது. எப்போதுமே அவரை நான் ஐயா என்றே அழைத்திருக்கிறேன். ஒரு தீட்ஷண்யமான பார்வையுடன் அவர் என்னை “யார் நீங்க ” என்று விசாரித்த காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். இடது கன்னத்தில் தனது வலதுகையை வைத்தபடி பழைய உறவுகளை ஞாபகப்படுத்துவார். நான் தெரிந்தவரை எங்கள் ஊரின் அத்தனை மனிதர்களையும் ஞாபகம் வைத்திருந்த அற்புதமான மனிதர் அவர்.
1990 களின் காலத்தில் அவரை அருகில் சந்தித்து பழகும் சந்தர்ப்பங்கள் நிறைய நிகழ்ந்தது. அன்றைய காலத்தில் தீவுப் பகுதிக்கான போக்குவரத்து, உணவு விநியோகம் முற்றிலுமாக தடையாகிப் போயிருந்த சூழல் அது. அப்போது அவர் தீவுப்பகுதிக்கான உதவி அரசாங்க அதிபராக இருந்தார். அன்றைய கால நாட்களில் நயினாதீவு மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை கடற்படையினரே வழங்கி வந்தனர். இதற்கு அரச அனுமதியை பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் அவர் பெற்றிருந்தார் என்பதை, அன்று அவருடன் பணியாற்றிய பல மனிதர்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூருவதை கேட்கின்றேன்.
ஆரம்பத்தில் அவர் நீர்ப்பாசனத் திணைக்களத்திலும் பின்னர் அவர் சுமார் 39 வருடங்கள் அரசாங்கப் பணியிலும் அதனோடு சமகாலத்தில் நாகபூசணி அம்பாள் ஆலய மரபுவழி அறங்காவல் சபைத் தலைவராக சுமார் மூன்று தசாப்தங்கள் உன்னதமான சேவையை ஆற்றியிருந்தார். அவரது காலத்திலேயே நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கிழக்குப் பெரும் கோபுரம் கட்டியமைக்கப்பட்டது. ஒருமுறை இது தொடர்பாக அவரிடத்தில் பேசியபோது மிகுந்த தன்னடக்கத்துடன் இது அப்ப இருந்த நிர்வாகத்துக்குத்தான் பெருமை என்று கூறினார். இதை அவருக்கு மிக அருகிருந்துகேட்டபோது உண்மையிலே நான் வியந்து போனேன். தற்பெருமை கொள்ளாத அந்த மனிதரின் நல்ல உள்ளத்தை நினைத்துப் பார்க்கின்றேன். என் வாழ்நாளில் நற்பண்புகள் நிறைந்த மனிதர்களோடும் நான் வாழ்ந்தேன் என்பதில் நிறைவடைகின்றேன்.
இங்கே இன்னொரு முக்கியமான காலச் சம்பவத்தையும் பதிவிட விரும்புகிறேன். நயினாதீவின் பூர்வீக குடிமக்களில் ஒன்றான வள்ளுவர்குல சமுதாய மக்களுக்கென காணிகள் கொள்வனவு செய்யும் திட்டம் அம்பாள் கோயில் நிர்வாகத்தின் செயற்திட்டத்திற்கு வந்தது. இதன்போது பல்வேறு கடுமையான எதிர்ப்புகள், வாதங்கள் மோதி நின்றன. ஆயினும் கடைசிவரை தனது கொள்கையில் மாறாது நின்று, அந்த மக்களுக்கான சேவையில் அவர் வெற்றிபெற்றிருந்தார். இதுபற்றிய சம்பவத்தை காலம்சென்ற செங்கோன் திரு.நா. சிவராசசிங்கம் அவர்கள் கூறும்போது… தியாகர் அவர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இது சாத்தியமாகச் சந்தர்ப்பமே இல்லை என்று சிலாகித்துச் சொல்லியிருந்தார். உண்மையிலேயே இதை அறிந்தபோது நான் வியந்து போனேன். தனிப்பட்ட முரண்பாடுகளை கடந்து எமது சமூகத்துக்கான காலத்தின் தேவையில் ஒன்றிணைதல் என்பது எமது மண்ணுக்கே உரிய உயர்ந்த பண்பாகும் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கென்று தனி வரம் நான் கேட்டதில்லை என்று அவர் பாடும் பாடலே இப்போதும் என்னுள் அசைந்து செல்கின்றது.
காண்கின்ற போதிலெல்லாம் திருநீறு அணிந்தபடி ஒருக்களித்து நிற்கும் ஒற்றைவரிப் புன்னகையோடு அவர் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். ஆயிரம் பிறைகண்ட அந்த அற்புதமான மனிதரை நினைத்துப் பார்க்கின்றேன். அவரைப்பற்றி விசாரிக்கும் போது பலரிடத்தில் ஒரு சொற்பதமே விழித்து வந்தது. “தியாகர் என்றால் கோயில்… கோயில் என்றால் தியாகர் “. இது அவர் நேசித்துப் பூசித்து நின்ற நாகபூசணி அம்பாளின் கொடையாகுமெனில் வியப்பேதுமில்லை. கடைசியாக நான் அவரை 2019 ம் ஆண்டில் சந்தித்தேன். மகளார் தாட்சாயினியின் (ஈழநாடு பாரா அண்ணர் ) வேண்டுதல் ஒன்றிற்கான சங்காபிஷேக அர்ச்சனையில் அவர் மாமியுடன் (துணைவியார் ) தம்பதி சமேதராக வந்திருந்து வாழ்த்திச் சென்றார். கோயிலின் உள்ளேயும் வெளியேயுமாக பலமணிநேரம் எமக்கு அருகிலேயே இருந்தார். இப்போதும் அந்தக் கிழக்கு வீதியின் கற்பூரத் தட்டு நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரது பக்திமயமான தோற்றமே பசுமையாய் நினைவில் எழுகின்றது.
இன்றளவும் நான் வாசித்து நிற்கின்ற பெரும்பாலானவர்களின் அம்பாள் கோயில்சார்ந்த படைப்புகள் அவரது காலத்திலேயே அச்சுப் பதிப்பிற்கு வந்திருக்கின்றன. அது மிகச்சிறிய பதிப்பாக இருந்தாலும், பாரிய அளவிலான புத்தகமாக இருந்தாலும் அவரது பெயர் அங்கே இருக்கின்றதை நான் காண்கின்றேன். எந்த மண்ணை அவர் இறுதிவரை நேசித்து நின்றாரோ, எந்த மண்ணை அவரது ஆளுமையால் வசீகரித்து நின்றாரோ, எந்த இறையை அவர் உள்ளமெல்லாம் வணங்கி நின்றாரோ, அதே மண்ணிலேயே அன்னையின் உயர் திருவிழாவின் பொழுதிலேயே தன் புகழுடலைவிட்டு மறைந்தும் போனார்.
என்றும் அழியாது நிற்கும் அவரது நினைவுகளோடு நானும் ஒருவனாய்… !!!
“தாயேயாகி வளர்த்தனை போற்றி”
நன்றிகள்