இலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொற்றை தடுக்கும் முகமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் அர்ச்சகர்கள் தவிர்ந்த பக்தர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேதாரகௌரி விரதம் நோற்கப்பட்டு வருவதோடு, எதிர்வரும் 14.11.2020 தீபாவளித் தினத்தன்று நிறைவடையவுள்ளது.

பொதுவாக வரலக்ஷ்மி விரதம், கேதார கௌரி விரதம், காரடையா நோன்பு போன்றவை வீடுகளில் செய்யப்படும் விரத வழிபாடுகளே ஆயினும், இலங்கையில் அவை ஆலய வழிபாடுகளாகவே பெரிதும் இருந்து வருகின்றன.

முக்கியமாக கேதாரகௌரி விரதம் அனுசரிக்கும் பல்லாயிரம் அடியவர்கள் இலங்கையில் உள்ளனர். அவர்கள் குறித்த விரத வழிபாடுகளை ஆலயங்களில் சிவாச்சார்யர்களின் வழிகாட்டலிலேயே மேற்கொள்கின்றனர்.

ஆனால் இம்முறை ஆலய வழிபாடு சாத்தியமாகாத நிலையில் கேதார விரதத்தை வீட்டில் அனுசரிக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அவர்கள் எவ்வாறு தீபாவளி அன்று இல்லத்தில் கேதாரேஸ்வர பூஜை செய்யலாம் என விபரிப்பதே இப்பதிவின் நோக்கமாகும். ( ஏற்கனவே சிவபூஜை செய்பவர்களுக்கான பதிவன்று. புதிதாக அன்று செய்பவர்களுக்குரிய எளிய பதிவே இதுவாகும்)

முதலில் தூய்மையாகி, பூஜை செய்யும் இடத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூஜைக்குரிய பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள். 21 வெற்றிலை, பாக்கு, பழம், அதிரசம் (அரியதரம்) போன்ற நெய்வேதனங்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு கும்பங்களை வைத்து வலது பக்கம் சிவபெருமானையும் இடது பக்கம் பார்வதியையும் கும்பங்களில் எழுந்தருள செய்து வழிபடலாம்.

இல்லாவிடில் ஒரு கும்பம் வைத்து அதில் அம்பிகையையும் புற்று மண்ணில் லிங்கம் அமைத்து அதில் பரமேஸ்வரனையும் வழிபடலாம்.

அந்த வாய்ப்பும் இல்லாதவர்கள் சிவன்- அம்மன் படத்தை வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.


மும்முறை தலையில் குட்டி பிள்ளையாரை வணங்கி சங்கல்பம் செய்து கொண்டு தூய நீரால் சுத்தப்படுத்திக் கொண்டு தீபம் ஏற்றி துதிகளை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

மஞ்சளில் அல்லது ஏதோ ஒரு வகையில் பிள்ளையாரை வழிபடல் வேண்டும்.

இருபத்தொரு முடிச்சிட்ட நோன்பு நூலை லிங்கத்தின் மேல் அல்லது கும்பங்களின் மேல் அல்லது படத்தில் சாற்றி வழிபடலாம்.

சிவ பெருமானுக்கு உகந்த அஷ்டோத்திரசத நாமாவளி, லிங்காஷ்டகம் போன்ற சம்ஸ்கிருத தோத்திரங்களையும் திருமுறை, காப்பு பாடல் போன்றவற்றையும் பாடலாம்.

காப்பு நூலில் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் (கிரந்தியையும்)
1. சிவாய நம:
2. வாஹாய நம:
3. மஹாதேவாய நம:
4. வ்ருஷபத்வஜாய நம:
5. கௌரீசாய நம:
6. ருத்ராய நம:
7. பசுபதயே நம:
8. பீமாய நம:
9. திரியம்பகாய நம:
10. நீல லோஹிதாய நம:
11. ஹராய நம:
12. ஸ்மர ஹராய நம:
13. பவாய நம:
14. சம்பவே நம:
15. சர்வாய நம:
16. சதாசிவாய நம:
17. ஈஸ்வராய நம:
18. உக்ராய நம:
19. ஸ்ரீ கண்டாய நம:
20. நீல கண்டாய நம:
21. கேதாரேஸ்வராய நம:
என்ற இருபத்தொரு நாமங்களால் 21 பூக்கள்/ வில்வத்தால் அர்ச்சனை செய்தல் வேண்டும்.

பின்பு இறைவன் – இறைவிக்கு தூபம், தீபம் காட்டி நெய்வேதனம் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறைவாக காப்பை எடுத்து,

” ஆயுஸ்ய வித்யாம்ச ததா சுகம் ச
ஸௌபாக்ய ம்ருத்திம் குரு தேவ தேவ/
ஸம்ஸார கோராம்புநிதௌ நிமக்நம்
மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே//”

என்ற சுலோகத்தை சொல்லி பிரார்த்திக்க வேண்டும்..

பின்னர் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த சுமங்கலிப்பெண் கையால் அல்லது கணவன் கையால் நூலை இடது கையில் பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும்.

நிறைவாக, பூஜைக்கான தக்ஷணையை அருகிலுள்ள குருவிடம் அல்லது அந்தணரிடம் சமர்ப்பிக்கலாம். அதுவும் இயலாத போது கோயில் உண்டியலில் சேர்ப்பிக்க வேண்டும். (உடனே சாத்தியமில்லாத போது எடுத்து வைத்து பின் சேர்ப்பிக்கலாம்)

இது ஓரளவு சுலபமாக பூஜையை வீட்டில் செய்யும் முறைமை ஆகும். இதற்கும் வசதியற்றவர்கள் திருமுறைகளை பாடி வழிபாடு செய்வதும் ஏற்கத்தக்கதே.

கேதாரகௌரியுடன் வந்தருளும் கேதார நாயகர்- அர்த்த நாரீஸ்வர இறை அருளால் நோயும் துயரும் அகலட்டும். இன்பமே பெருகட்டும் என பிரார்த்திப்போம்.

– பிரமஸ்ரீ. தியாக. மயூரகிரிக்குருக்கள்