பிடாரி அம்மன் கோயில், நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் தென்மேற்கேயுள்ள தில்லைவெளி என்னும் கடற்கரையோரத்தில் கிழக்க நோக்கியதாக அமைந்துள்ளது. சிறுகோயிலாக விளங்கும் இவ்வாலயக் கருவறைக்குள் கடல் வழியாக மிதந்து வந்த பிடாரி அம்பாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்துள் அமைந்துள்ள பேச்சி அம்மன் உருவமும் கருவறைக்குள் காணப்படுகிறது. பூசரசு மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் இவ்வாலயத்தைப் பேச்சி அம்மன் ஆலயம் எனவும் அழைப்பர். வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பொங்கல் மற்றும் மடைபரவி வேள்வி நடைபெறும். சுமார் 300 ஆண்டுகள் பழமையுடைய இக்கோயிலில் ஆரம்ப காலத்தில் ஆடு வெட்டிப் பலியிட்டு வேள்வி நடைபெற்றது. 1943 ஆம் ஆண்டின் பின்னர் இத்தகைய பலியிடும் வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக நீத்துப் பூசணிக்காயை வெட்டிப் பலியிடும் வழக்கம் இருந்து வருகின்றது. தீராத நோய்களைத் தீர்த்தருளும் தெய்வம் என்ற நம்பிக்கையில் அடியார்கள் தமது நேர்த்திக் கடனுக்காக ஆடுகளையும் சேவற்கோழிகளையும் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். இவ்வாலய முன் மண்டபத்தூண்களில் அஷ்டகாளி மாதாக்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட நயினை ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதானசபை வேள்வித்தினத்தன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றது. நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினர் ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித் தினத்தில் சமய அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் கலை, நிகழ்ச்சிகளும் கடந்த 21 ஆண்டுகளாய்ச் செய்து வருகின்றனர்.