நயினாதீவு 5ஆம் வட்டாரத்தில் நடுவகாடு என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக இவ்வாலயம் அமைந்துள்ளது. சுணல் சுவாமியார் என்று அழைக்கப்பட்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை என்பவர் இக்கோயிலை ஸ்தாபித்தார். நாற்புறமும் சுற்றுமதில்களுடன் விளங்கும் இவ்வாலயக் கருவறைக்குள் ‘வேல்’ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத் தல விருட்சம் அரசமரமாகும். வருடந்தோறும் வரும் கந்தசட்டி நாட்களில் அலங்காரத் திருவிழா நடைபெறும். இங்கு நடைபெறும் சூரன்போர் விழாவும், திருக்கல்யாண விழாவும் தனிச்சிறப்புடையவை. ஆடிவேல் விழா திருவோரை நட்சத்திரத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. இக்கோயிலை மேலும் வளம்படுத்தும் நோக்கில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.