“ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளின் திரு” – குறள்
சிவபூமி எனப் போற்றிப் புகழப்படுவது எமது ஈழமணித்திருநாடு. இங்கு வடபால் அமைந்த தீவுக் கூட்டங்களில் தீபதிலகமாகத் திகழ்வது மணிபல்லவத் தீவாகும் (LEYDON ISLAND). இத்தீவு சர்வமத சன்னதியாகவும், சமயகலாச்சார விழுமியங்களின் வெளிப்பாட்டு மையமாகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
நாகர்களின் வழிபாட்டுச் சின்னமான நாகதரிசனமும் பெளத்தர்களின் “போதிமாதவனின் வருகையினை ஒதிநிற்கும்” தாதுகோபுரமும் சிறப்பம்சம் பெறுகிறது. அநுபூதிச் செல்வர்களின் தரிசனத்தினால் புதுப் பொலிவு பெறுகிறது.
இத்தீவின் வரலாற்றினை ஆராயும்போது இங்கு ஆதிக்குடிகளாக நாகர்களும், அவர்களின் வழித்தோன்றல்களாக பிராமணக் குடிகளும் இருந்திருக்கின்றனர். பிராமணத்தீவு என்றொரு பெயரும் நயினாதீவிற்குண்டு. சைவப் பாரம்பரியங்கள் நிறைந்த ஆசாரசீலர்கள் வாழ்ந்த வரலாறுகளுமுண்டு. இங்குள்ள மக்கள் இயல்பாகவே சகல கலைகளிலும் புலமை மிக்கவர்கள். தாய்மொழியில் பற்றும் இறைபக்தியும் கொண்ட மக்கள். ஆதியில் புராண இதிகாச கதைகளை செவி வழியாகக் கேட்டு தமது ஒழுக்கமுறையான வாழ்வை வளம்படுத்திக் கொண்டனர். திண்ணைப் பள்ளிக் கூடங்களும் இவர்களுக்குக் கைகொடுத்தது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1881 – 1900) அமெரிக்க கிறீஸ்தவ திருச்சபையினர் நயினாதீவின் மத்தியில் தேவாலயத்தையும் மடத்தையும் நிறுவினர். இதில் எம்மவர்கள் சிலர் கிறீஸ்தவர்களாக மாறி ஆங்கிலம் கற்றனர். ஆனாலும் இது நீடிக்கவில்லை. வைராக்கியம் மிக்க ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற தீவிரமான சைவசமயத்தினரின் எதிர்ப்பினால் குடாநாடெங்கிலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. இவற்றுள் ஒன்றே நயினாதீவு தில்லையம்பல வித்தியாசாலையாகும். இதன் நிறுவுனர் பெரியார் சின்னக்குட்டியாவர். இதற்கான காணியைத் திரு மு. செல்லப்பா அவர்கள் மனமுவந்தளித்தார். வித்துவ சிரோன்மணி கணேச ஐயர் அவர்களை வருவித்து தமிழ் இலக்கணம், இலக்கியம் என்பனவற்றை நம்முன்னோர் கற்றறிந்து கொண்டமையை நினைக்கும்போது பெருமைப்பட வேண்டும்.
1926 ஆம் ஆண்டு இவ் வித்தியாலயம் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது.

கல்வியின் பொற்காலம் (GOLDEN JUBLEE OF EDUCATION)

இவ்வாறு வளர்ந்து வந்த நயினையின் கல்வி வரலாற்றில் 1928 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருவாளர் சண்முகம் நாகநாதர் கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராக நயினாதீவு நாகபூஷணி வித்தியாசாலையில் கடமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். நொத்தாரிசாகவிருந்த இவரது பாட்டனாரின் தொழிலைச் செய்து வந்த ஆசிரியருக்கு அத் தொழிலில் நாட்டமிருக்கவில்லை. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானில் நனி சிறந்தனவே” என்ற பாரதியின் வாக்குக்கமைய தன்னாட்டினையும் மக்களையும் நேசித்தார். பாடசாலையை விட்டு விலகி கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கடைகளில் நின்ற சிறுவர்களை அழைத்து வந்து கற்பித்து பண்டிதர்களாகவும், வித்துவான்களாகவும், வட்டாரக் கல்வி அதிகாரிகளாகவும் ஏன்? அரசாங்க அதிபர்களாகவும் ஆக்கிய பெருமைக்குரியவர். இவர்களில் உறவினர்களும் அடங்குவர்.
இவரது பணி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இளவயதிலே தூயவாழ்வை அநுசரித்து வாழ்ந்தவர். எம்மூர் போக்குவரத்து துன்பங்களும், துயரங்களும், சிரமங்களும் நிறைந்த பயணங்களாகவே இருந்தது. ஊர்காவற்றுறை மார்க்கமான பயணமே முன்னர் இருந்தது. அக்காலத்தில் கூட்டுறவுப் பரிசோதகராக கடமையாற்றிய ஆர். எஸ். எஸ். குக் என்பவருடன் சேர்ந்து தீவுப்பகுதி மோட்டார் வள்ளச் சேவையைக் கூட்டுறவு முறையில் அமைத்த பெருமையும் இவரையே சாரும்.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை பொதுச் சொத்தாக்கிய பெருமை பெற்ற ஐவருள் இவரும் ஒருவர். அறங்காவலர் சபையில் பல்லாண்டுகள் உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் பல. “நயினாதீவு யாத்திரீகர் தொண்டர் சபை” இவரினால் ஆரம்பிக்கப்பட்டதேயாகும்.”நேசனை காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல் ஆசானை எவ்விடத்தும்” என்பது பெரியோர் வாக்கு. “எழுத்தறிவித்தவன் இறைவன்” எனக் குருவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்தனர். அவ்வாறான உயர்நிலையைப் பேணிக்காப்பவரே உண்மையான குருவாகும். “உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்று அவற்றால் தெள்ளி வடித்தறிந்த பொருள் சிவன்கழலிற் செறி”வென்ற பேருண்மையை என்றும் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.
தலைமை ஆசிரியராகியமையினால் மட்டும் பெரிய உபாத்தியாயர் அல்லர். செயலால் பெரியவர். சிந்தனையால் பெரியவர். இறைவழி நின்ற பெரியவர். எல்லோருக்கும் பெரியவர். முன்னுதாரண புருஷர். இல்லற ஞானி. சிவதொண்டன் நிலையத்தில் யோகர் சுவாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். நயினாதீவு ஸ்ரீ முத்துக்குமார சாமியாரை ஞான குருவாகக் கொண்டவர். இன்று மன்பதை உலகும் மாணவர் உலகும் அமுதரற்ற இறையடி சேர்ந்துவிட்டார்

வாழ்க அவர் திரு நாமம்.