மணிபல்லவம் என்று சிறப்பித்துக் கூறப்படும் பெருமைமிக்க இப்பதியிலே நம்பினோருக்கு நாடியவரமளிக்கும் நாகபூஷணியம்மன் கோயில் கொண்டேழுந்தருளியுள்ளாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் விசேடம் பெற்ற இத்தலத்திலே அம்மன் அருளினால் அறிஞர்கள், ஆத்மிகவாதிகள், பாவலர்கள், தொண்டர்கள் பலர் தோன்றியுள்ளனர். இந் நயினையம்பதியில் வித்துவான் குமாரசாமி, சின்னத்தம்பி நாகமுத்து தம்பதியினருக்கு சிரேஷ்ட புத்திரனாக 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவதரித்தார். இவர் ஐந்து வயதிலேயே தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பிலே வளந்தவர். தாயாரின் உறுதியான மனமும், ஊக்கமும், கேள்விஞானமும் இவர்களின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. இவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும்போதே தாயார் மகாபாரதம், இராமாயணக் கதைகளைக் கூறுவார். விடுகதைகள், சிலேடைப் பாடல்கள் கூறுவார். இவையே இவர்கள் தமிழில் உயர்வுபெற்றுச் சிறந்து விளங்க வழிகோலியது.

இவர் தனது கல்வியை நயினாதீவு நாகபூஷணி வித்தியாசாலையில் ஆரம்பித்துப் பின்னர் திருநெல்வேலி சைவத்தமிழ்ப் பாடசாலையில் சிரேஷ்ட தராதரம் வரை பயின்று சிறந்த பெறுபேற்றைப் பெற்று பலராலும் போற்றப்பட்டார். பின்னர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயின்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிபரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.
ஆசிரியப் பயிற்சி முடிந்து வெளியேறியதும் முதன் முதலில் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பதில் ஆசிரியராக கடமையாற்றினார். 1949 இல் நிரந்தர நியமனம்  பெற்று  கொழும்பு  கிராண்ட்பாஸ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றினார்.  அதன்பின் மகாவத்த சிங்கள வித்தியாலயத்தில் இரண்டு வருடம் கடமையாற்றினார். இக்காலத்தில் தமிழ்பிரிவுப் பாடசாலை ஒன்றை சிங்களப் பாடசாலையிலே உருவாக்கி பாலர்வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனித்துத் தானே கல்வியை திறம்பட போதித்து சிங்கள அதிபரின் நன்றியையும் பாராட்டையும் பெற்றார்.இக்காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வித்துவான் டிப்ளோமாப் பயிற்சி நெறியை த் தொடர்ந்து 1953 இல் வித்துவான் டிப்ளோமாப் பட்டதைப் பெற்றார். அதன் பின் முள்ளியவளை மகாவித்தியாலயத்திலும், நெல்லியடி மகாவித்தியாலயத்திலும் சேவையாற்றிப் பின் சொந்த மண்ணுக்கு வந்து தனது கடமையைச் செய்தார். நயினாதீவில் ஆசிரியப் பணி புரிந்தார் . ஒரு வருடம் பாட நூற் சபையில் பணியாற்றினார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் கடமையாற்றிப் பின்னர் கோப்பாய் அரசினர் மகளிர் கலாசாலையில் 1971-1975 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் விவசாயத்தில் நாட்டம் கொண்டு வவுனியா மகாவித்தியாலயத்துக்கு உப அதிபராக கடமையேற்றார்.  திரும்பவும் 1979 இல் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகப் கடமை புரிந்து பின்னர் 1983 இல் ஒய்வு பெற்றார்.
1983 இல் ஒய்வு பெற்ற பின்னர் 1988 – 1992 வரை புனித சம்பத்திரியார் கல்லூரியில் தமிழ்த்துறையில் கடமையாற்றி உத்தமத் தமிழ் வித்தகப் பெருமகன் என விளங்கி கல்விப் பணிசெய்தார். ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத் தனாதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றினார். தமிழ், சமஸ்கிருதம்,  ஆங்கிலம்,  சிங்களம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சோதிடத்திலும், கணிதத்திலும் விற்பன்னர் . நல்லூர் கம்பன் கழகத்தோடு இணைந்து வழக்காடு மன்றம், பட்டிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றில் பங்குபற்றி கம்பனது தமிழ் தொண்டை வளர்த்தெடுக்க உதவினார். பண்டித வகுப்புகளை நடாத்தி தமிழ் வளர்ச்சிக்கு உரமிட்டார். பதவியில் ஒய்வு பெற்றாலும் தனது பணிகளில் ஓய்வு பெறாது இறுதிமூச்சு வரைக்கும் தமிழையும் சைவத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார். நயினை நாகபூஷணியம்மன் ஆலய அறங்காவலராகவிருந்து ஆலய மேம்பாட்டுக்காக செயற்பட்டார். நயினை ப.நோ.கூ.சங்கம் அமைவுற உழைத்து நீண்ட காலம் அதன் செயலாளராக விளங்கினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன தமிழ்சேவையில் சைவ நற்சிந்தனை, ஞானக் களஞ்சியம், நடைமுறை வாழ்கைத் தத்துவம் போன்ற நிகழ்சிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிக் கொணந்தார்.
ஆத்திசூடி,  கொன்றைவேந்தன்,  வாக்குண்டாம், நல்வழி ஆகிய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். நவராத்திரி தோத்திரப் பாமாலை என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார். குழந்தைப் பாடல்களை இயற்றி வெளியிட்டார். குசேலர் சரிதம், அரிச்சந்திரன், இலக்கண நூல் ஆகியவை எழுதி முற்றுப் பெறும் நிலையில் திடீரென மாரடைப்பினால் காலமானார்.வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் தான் அவரின் உடை. வேகநடை, புன்னகை தவழும் முகம்,  கருணை பொழியும் கண்கள்,  கள்ளம் கபடமற்ற மனம், மன்னிக்கும் தன்மை,  இவரின் எளிமையான வாழ்வும்,  உயர்வான உலகியல் நோக்கும் மானுடத்தின் உயர் விழுமியங்களின் கூட்டுருவாகத் தரிசனம் தந்தவர் எனலாம். நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் திகழ்ந்தவர்.
“சாகிற் தமிழ் படித்துச் சாகவேண்டும் – நம்
சாம்பல் தமிழ் வளர்த்து வேகவேண்டும்”
என்ற வாக்கிற்கமைய கடைசி நிமிடத்திலும் தமிழ்க் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த கையோடேயே அதையும் கொண்டுசென்ற செயற்பாட்டை எண்ணிப்பார்க்க முடியாது. இவரது ஆற்றேழுக்கான அழகு தமிழ் ஆற்றலை எண்ணும்போது மையோ மறிகடலோ, மழைமுகிலோ ஐயோ இவன் அறிவேன்பதோர் அழியா அழகே என்று கூறத்தோன்றும்.
ஆக்கியவர் :நயினை எஸ் . சோமேஸ்வரபிள்ளை