இவர் 18.08.1937 அன்று நயினாதீவிற் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை அவ்வூர் மகாவித்தியாலத்திலும் பயின்றார். இவர் கொழும்பு, வத்தளை, உணுப்பிட்டி எனுமிடத்திலிருந்த நல்லம்மா பாடசாலையில் இரண்டு ஆண்டுகள் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். ஆயினும் 1960 இல் எழுதுவினைஞர் சேவையில் இணைந்து இவரது மும்மொழி ஆற்றல் காரணமாக முப்பது ஆண்டு காலம் அரசாங்க அச்சகத்தில் தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவருடைய கலை இலக்கிய முயற்சிகள் அவர் பாடசாலைக் கல்வியை மேற்கொண்ட காலத்திலே ஆரம்பித்திருக்கின்றது. இவர் தனது கவிதைகளை மாணவர் மன்றங்களில் வாசித்ததையும், அவற்றின் சிறப்பினைனயும் இனங்கண்ட பண்டிதை.திருமதி புனிதவதி அவர்கள் அந்த மாணவர் மன்றத்தில் ‘பரராசசிங்கக் கவிஞன்’ என்பதன் சுருக்கமான ‘பசிக்கவி’ எனும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார். இவர் அரசாங்க சேவையில் இருந்த காலத்திலும், ஓய்வு பெற்ற பின்னரும் பாரம்பரியக் கலைகளான கரகம், காவடி, கிராமிய நடனம் மற்றும் வில்லுப்பாட்டு முதலான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளதுடன் கவியரங்குகளை தலைமை தாங்கி நடாத்தியும் உள்ளார்.
இவருடைய கவிதைகள் நூலுருவாக்கம் பெறாத போதிலும் இவர் எழுதிய பக்திப் பாடல்களான ‘பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா திருவூஞ்சற்பா’ நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் பஜனைப் பாடல்கள் என்பன நூலுருப் பெற்றுள்ளன. இவரது கவிதைகளும், பாடல்களும் சிறுசஞ்சிகைகளிலும், தினசரிகளிலும் வெளிவந்துள்ளன.
இவர் இந்து சன்மார்க்க சங்கம், விவேகானந்த சபை, திவ்விய ஜீவன் சங்கம், நயினாதீவு கலாசாரப் பேரவை முதலான நிறுவனங்களிலும் நயினாதீவிலுள்ள பல ஆலயங்களிலும் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.
இவர் இவ்வாறாக தனது ஊருக்கும் மக்களுக்கும் ஆற்றிய சமய சமூக கலை இலக்கிய சேவைகளைப் பாராட்டி வேலணைப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கலைவாருதி எனும் பட்டத்தினை வழங்கி கௌரவித்திருக்கின்றது.