நயினை ஆதீன குரு பரம்பரையில் ஐயாத்துரை குருக்களின் மூத்தமகனாய் 1912 ஆம் ஆண்டு 9 ஆம் மாசம் 4 ஆம் திகதி நயினை மண்ணில் பிறந்தார். “வடமொழியும் தென்மொழியும் மறைகள் நான்கும் ஆதினான்காண்” என்றவாறு அம்பாளின் திருவருள் சக்தி குருக்கள் அவர்கள் வாழ்வில் வழி நடத்திச் சென்றது என்பதுதான் உண்மை. மடை திறந்த வெள்ளம் போல் அவர் வாயில் இருந்து வருகின்ற மந்திர உச்சாடனம் அதற்கேற்ப கண்ணீர் என்ற குரல்வளம், கிரிகை முறைகள் என்பன அம்பாளால் அவருக்கு என்றே வழங்கப்பட்ட பெறுதற்கரிய பெருங்கொடை. “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எலாம்” என்ற உயர்ந்த தத்துவத்தை உள்ளடக்கியதாக இவரின் குருபணி உலகமெலாம் பரவி விளங்கியது. கோவில்களில் நடைபெறுகின்ற பாலஸ்தாபனம், மகாகும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை விலை பேசாது சைவப் பணியாக “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்றவாறு குருப்பணியை நிறைவாகச் செய்த நயினைக் குருமணி.
இலங்கையில் இனக்கலவரம் 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது நயினாதீவிலுள்ள பெளத்த விகாரையும் சேதத்திற்குள்ளானது. இதன் காரணத்தால் இராணுவம் வந்து பல அழிவுகளைச் செய்தது. பெளத்த விகாரைக்கும் அம்பாள் ஆலயத்திற்கும் இடையிலுள்ள வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டன. பல பொதுமக்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நயினை அம்பாளின் கட்டுத்தேருக்கான அடிப்பாகம், சப்பறம் என்பன எரியூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்தன. 1957 ஆம் ஆண்டு புதிதாக வெள்ளோட்டம் விடப்பட்டு நிறுத்தப் பட்டிருந்தது தற்போதைய சித்திரத்தேர். அம்பாளின் உடைமைகள் எரியூட்டப்படுவதை அறிந்த குருக்கள் அவர்கள் தன்னை இராணுவம் சுட்டாலும் பறுவாயில்லை என்ற உணர்வோடு ஓடோடி வந்து அழுதவாறு கைகூப்பி வணங்கி தேரை எரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்திடம் மன்றாடி வேண்டி நின்றார். அம்பாளின் திருத்தேரை அன்று அழிவிலிருந்து குருக்கள் ஊடாக அம்பாள் தடுத்தாள். 1986 ஆம் ஆண்டு பிள்ளையார் தேர், சுப்பிரமணியர் தேர். திருமஞ்சம் என்பன எரிக்கப்பட்டன. அம்பாளின் சித்திரத்தேர் எரியூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1958 ஆம் ஆண்டு நிகழ்விற்குப் பின் குருக்களின் புகழ் ஓங்கி நின்றது.
நல்லைக் கந்தனின் மகோற்சவ குருவாகவும் சில வருடங்கள் பணியாற்றியுள்ளார். நயினை நல்லூர் திருத்தலப் பஜனைப் பாதயாத்திரை 1964 ஆம் ஆண்டு ஆரம்பித்த தினத்தன்று இந்திய ரிஷிகேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கெங்கா தீர்த்தத்தால் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளிற்கு அபிஷேகம் செய்து “இத்திருத்தலப் பஜனைப் பாதயாத்திரை காலம் எல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று அருள் ஆசி வழங்கி ஆரம்பித்து வைத்தவர்கள் குருமணி அவர்கள் தான். குருக்கள் அவர்களின் ஆசிக்கமைய கடந்த 48 ஆண்டுகளாக இப்பஜனைப் பாதயாத்திரை கடந்த கால யுத்தச் சூழ்நிலையிலும் தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இலங்கை வானொலி என்ற பெயருடன் செயல்பட்டு வந்த இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று பெயர் மாற்றப்பட்ட ஆரம்ப நிகழ்வுப் பூசையை நிகழ்த்தி அருள் ஆசி வழங்கியவர் நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் தான்.
தென் இந்திய சொற்பொழிவாளர்களிற்கு இணையாக அன்று இலங்கையில் பேச்சுத் துறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் திறமை மிக்கவராய் திகழ்ந்தவர் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள். தென் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் அம்மையாரை அழைத்து சொற்பொழிவாற்ற வைப்பதில் உந்து சக்தியாக நின்று ஊக்குவித்தவர் நயினைக் குருமணி அவர்கள் தான். அம்மையார் அவர்களும் குருக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறுவதில்லை.
“அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடு என்றார் தூய்மழை பாடும் வாயார்” என்ற சேக்கிழார் பெருமானின் பெரிய புராண வாசகத்திற்கமைய வடமொழியிலும் தென்தமிழிலும் பூசை செய்வதில் தனக்குவமையில்லாத குருவாகத் திகழ்ந்தவர். “வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆகினான் கான்” என்று அப்பர் அடிகள் சொன்னவாறு குருவடிவாகி குவலயம் தன்னில் வாழ்ந்து அருள் வழி காட்டிய அருள்குரு அமரர் நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் அவர்கள். அவர் மண்ணில் பிறந்ததை நினைவு கூறுவது ஈழத்து சைவ சமயத்தவர்களின் கடமையாகும்.