“வேதசிவாகம பிரதிஷ்டா சக்கரவர்த்தி” சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் அவர்கள் (1920.06.18——2020.06.18)
“வாழ்க அந்தணர் வானவர் ஆன்இனம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரண் நாமமே
சூழ்க யைகமும் துயர் தீர்க்கவே”
அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீடம் எனப்போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் பிரதம குருமணியாக விளங்கியவர் சிவசாயுஜ்ய சிவஸ்ரீ முத்துக்குருக்கள் பரமசாமிக்குருக்கள் அவர்கள். இவர் ஆலயத்தின் பிரதம முகாமையாளர்களில் ஒருவராக விளங்கி பின்னாளில் ஆலய பிரதம குருவாக நியமிக்கப்பட்ட வடகோவை சிவஸ்ரீ பரமசாமிக்குருக்கள் வைரவநாதக்குருக்கள் அவர்களது மரபிலே முத்துக்குருக்கள் – பாலாம்பிகை அம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1920.06.18ஆம் திகதி அன்று கோப்பாயில் அவதரித்தார்கள்.
குருமணி அவர்கள், தான் செய்கின்ற கிரியைகள் அனைத்துமே ஒழுங்காக நடைபெறவேண்டும் என்ற நோக்குடன் அனைத்தையுமே சரியாக ஆற்றி எந்தச் சந்தர்பத்திலும் அனைத்துக் கிரியைகளையும் சீராகவும் சிறப்பாகவும் முழுமைபெறச் செய்வதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருந்தார்.எங்கள் குருமணி அவர்கள் ஈழத்தின் பலபாகங்களிலுமுள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களின் மஹாகும்பாபிஷேகங்களை தலைமைதாங்கி நிகழ்த்தியிருக்கிறார்கள்.
அத்துடன் பல ஆலயங்களின் மஹோற்சவங்களைப் பிரதம குருவா நிறைவேற்றி இருக்கிறார்கள். இவருடன் இணைந்து கிரியைகளில் ஈடுபட்டு இவரைத் தமது குருவாகக்கொண்டு தமது பணியில் நிறைவு காணுகின்ற சிவாச்சாரியார்கள் பலர் உள்ளார்கள் என்றால் மிகையில்லை எனலாம்.
இவற்றுடன் ஆலயக்கிரியைகள் வீட்டுக் கிரியைகள் மற்றும் ஆலயஅமைப்புத் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்களுக்கு ஆதாரபூர்வமான விளக்கங்களை வழங்கக் கூடிய அறிவையும் ஆற்றலையும் அனுபவத்தையும் குருமணி அவர்கள் தன்னகத்தேகொண்டிருந்தார்கள்.
தன்னுடைய ஆழ்ந்த அறிவின் அனுபவத்தின் வெளிப்பாடாக “சிவார்ச்சன சந்திரிகா தீபிகை” , “அம்பிகை வழிபாடு”ஆகிய நூல்களை ஆக்கம் செய்து வெளியட்டுள்ளார்.
இவர் வேத சிவாகமங்களில் கொண்டிருந்த புலமையின் காரணமாகவும் கிரியைகளை ஆற்றுகின்ற சிறப்பின் காரணமாகவும் “சிவாகம கலாநிதி,” “வேதாகம கிரியா வினோதன்”, “பிரதிஷ்டா கிரியா கலாபமணி”,
“வேத சிவாகம பிரதிஷ்டா சக்கரவர்த்தி” போன்ற சிறப்புப் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வரலாற்றுப் புகழ்மிக்க எமது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் 1975ஆம ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை மூன்று தசாப்தங்களாக மஹோற்சவ குருமணியாக விளங்கியவர்.
அன்னையினுடை மஹோற்சவத்தை ஆரம்பித்து நிறைவேற்றி முடிக்கும் வரை ஆலய வீதியிலே அம்பிகையின் உருவமாக இவரை நாம் கண்டிருக்கின்றோம்.
மஹோற்சவத்தின் முதல் நாள் கொடி ஏற்றுவதற்கு முன் மூலஸ்த்தானம் சென்று தீபாராதனை செய்து அம்பிகையை வணங்கி கொடிமரத்தின் முன்பாக வந்து தான் அணிந்திருக்கும் கண்டசரங்கள் அனைத்தையும் கழற்றி அம்பிகை பாதத்தில் சமர்பித்து கண்ணீர் மல்க வீழந்து வணங்கி எழுகின்றபோது அங்கு கூடிநிற்கின்ற பல்லாயிரக்கணக்கான அடியவர் உள்ளங்களிலும் பக்தி மேலிட்டு மெய் சிலிர்த்து நிற்பதைக் காணமுடியும்.
இவ்வாறே வசந்த மண்டபத்தில் அம்பிகையின் நாமங்களை உச்சரித்து மலர் கொண்டு பூஜித்து “ஸ்ரீ நாகராஜேஸ்வரி” என அன்னையை ஓங்கி அழைத்து தீப ஆராதனை செய்கின்ற போது அனைத்து அடியவர்களதும் உள்ளத்திலும் அம்பாள் உறைந்து அவர் குறைகளைத் தீர்ப்பது போன்ற உணர்வினை
எம் அனைவராலும் அப்பொழுதில் உணர முடியும்.
“சித்திகள் எட்டொடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சித்தித்தூய்மையும்யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதகமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே”
என்ற திருமந்திரப் பாடலில் குறிப்பிடப்படுவது போல் அட்டமா சித்திகளும் கைவரப்பெற்ற யோகியாக மந்திரங்களைத் தியானிப்பதால் விளைந்த ஞானியாக எமது குருமணி அவர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தீவகத்திற்குமான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த காலம் தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் அற்ற சூழல் அம்பிகையின் திருவிழாக்காலம் நாளைய தினம் கொடியேற்றம் இன்று கிராமசாந்தி குருமணியின் வருகைக்காக ஆலய வீதியிலே அன்றைய அறங்காவலர்கள் உட்பட பலர் காத்திருந்தார்களாம். பொழுதும் சாய்ந்து செல்கிறது.குருக்கள் வருவாரோ என்ற ஐயம் அங்கிருந்த அனைவர் மனதிலும் எழுகின்றது அப்பொழுது ஆலய வீதியிலே நாகபாம்பொன்று காட்சி கொடுத்து மறைந்ததாகவும் அதன் சிறிது நேரத்தில் அம்பிகையின் பால முகப்பில் கடற்படைப் படகொன்று அணைய அதில் இருந்து அம்பிகையின் உருவமாக குருமணியவர்கள் இறங்கி நடந்து வந்ததாக ஆலய அன்றைய தலைவர் சிவத்திரு கா. ஆ.தியாகராசா ஐயா அவர்களும் இன்னும் சிலரும் இன்றும் கூறக் கேட்டிருக்கின்றேன்.
இவ்வாறு மிக இடர்மிகுந்த அக் காலப்பகுதியிலும் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையூடாக கடற்பயணங்களை மேற்கொண்டு அம்பிகையின் கருமங்களை நிறைவேற்றவேண்டும் என்ற நினைப்பிலும்
விருப்பிலும் வாழ்ந்தவர் எங்கள் குருமணி அவர்கள்.இதற்குரிய ஆசியையும் அருளையும் ஆற்றலையும் அம்பிகை இவருக்கு வழங்கியிருந்தாள் என்பதையும் நாம் உணர்ந்துகொண்டோம்.
“அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாமவள் என்பர்
அறிவார் கரும மவளிச்சை என்பர்
அறிவார் பரனு மவளிடத்தானே”
என்ற திருமூலர் வாக்கிற்கிணங்க எல்லாம் அவளென்றே அம்பாளை நினைந்து நயினைத் தாயவளின் பாதங்களைப் பூஜித்துப் பற்றி நின்ற எங்கள் குருமணி சிவஸ்ரீ வை.மு பரமசாமிக்கருக்கள் அவர்கள் 2009.10.16ஆம் திகதி அன்று தன் உலகியல் வாழ்வினை நீக்கி அம்பாளின் பாதங்களில் நித்திய சுகம்
எய்தினார்.
18.06.2020 இவரது நூறாவது அகவைத் தினம் என்பதுடன் 20.06.2020 அன்று அம்பிகையின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது என்பதும் சிறப்புக்குரியது.
– நடராசா மயூரன் –
தகவல்கள் உதவி :
குருமணி அவர்களின் பவளவிழா மலர்,
எமது தந்தையார் அமரர் மு. நா. நடராசா
அவர்களின் குறிப்புக்கள்,
திருமூலர் திருமந்திரம்.