யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் சமுத்திரத்தின் மத்தியில் கடைச்சங்க புலவர்களால் மணிபல்லவம், மணித்தீவு என்றழைக்கப்பெற்றதும் நயினாதீவென இப்பொழுது எல்லோராலும் அழைக்கப்படுவது நயினாதீவு. என்றென்றும் கருணை பொழிந்து அருளாட்சி புரியும் அன்னை நாகேஸ்வரி எழுந்தருளியிருப்பதால் புண்ணியத்தீவாகவும் புத்தபகாவான் தமது புனிதபாதங்களைப் பதித்ததால் புனித தீவாகவும் போற்றி புகழப்படுகின்றது. அமிழ்தினும் இனிய தமிழையும், எல்லா மதத்திற்கும், தொன்மையான சைவசமயத்தையும் தாலாட்டி வளர்க்கும் தொட்டிலாக இச்சிறு தீவு அன்றும், இன்றும் இருந்து வருகின்றது.

இப்பாரம்பரிய பெருமை மிக்க புண்ணிய பூமியிலே நயினை நாகம்பாள் ஆதீனகர்த்தா. பரமலிங்கம் கந்தசாமி, வரகவி நாகமணிப்புலவரின் மகள் நாகரெத்தினம் ஆகிய இவ்விருவரும் செய்த தவப்பயனாக 1925ம் ஆண்டு சித்திரைத்திங்கள் 17ம் நாள் அமரர் குகதாசன் அவர்கள் அருமருந்தன்ன மைந்தனாக இம்மண்ணிற் பிறந்தார்.இவர் தம் ஆரம்பக்கல்வியை நயினை ஸ்ரீ நாகபூஷனி வித்தியாலயத்தில் கற்று தனது இடைவிடா முயற்சியால் ஆசிரிய பரீட்சையில் சித்தி பெற்று பயிற்சி பெற்ற ஆசிரியனாக பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலிருந்து வெளியேறினார். அன்று முதல் நல்லாசானாக இலக்கிய, இலக்கண வித்தகராவிருந்து கல்வித்துறையில் நிகழ்த்திய சாதனைகள் கல்வியுலகம் திகைக்குமளவிற்குப்பலவாம். எப்பரீட்சையிலும் முந்திநிற்கும் திறன்படைத்து சிறப்புக்கள் பல பெற்றார்.

பண்டிதர் பரீட்சையில் தங்கப்பதக்கம் பெற்று சித்தி பெற்றதுடன், வித்துவான் பரீட்சையிலும் சிறப்புறத் தேறியதன் மூலம், பண்டிதருள் வித்துவானாக தன்னை ஆக்கிக்கொண்டவர். கலைமாணிப் பட்டதாரி கல்வி டிப்ளோமா, முறைக்கல்வி டிப்ளோமா என்று பட்டங்கள் பல சேர்த்து வல்லமை மிக்க எழுத்தாளனாகவும்,கருத்து நிறை கவிஞனாகவும், ஆற்றல்மிக்க பேச்சாளனாகவும் சிந்திக்கவைக்கும் நகச்சுவையாளனாகவும் பேராற்றல் மிக்க கல்வி அதிகாரியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியமையால் கல்வி உலகம் இவரைத்தம் வழிகாட்டியாகவும் தம் ஆசானாகவும் போற்றிப்புகழ்ந்தது. இவர் எழுதிய திருக்குறளில் நவரசங்கள் என்ற கட்டுரை இலங்கைத்தமிழ் மறைக்கழகம் உலகளாவிய ரீதியில் நடாத்திய திருக்குறள் கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. தமிழ் கூறும் நல்லுலகிற்கும் இவரது பெயரையுதிறனையும், திருக்குறளிலிருந்த ஆழ்ந்த அறிவையும் எடுத்தியம்பலாயிற்று. இது போன்ற ஆக்கங்கள் பலவற்றிற்கு பரிசுகள் பல பெற்று தழிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாததாகும்.

அமரர் குகதாசன் அவர்கள் திருமணப்பருவம் எய்தியவேளை உயர் வேளான்குடியில் பிறந்த நயினை முத்துச்சாமியார் வழியில் தோன்றிய பொலிசார் என்று அழைக்கப்பெற்ற அமரர் ஆறுமுகம் சின்னக்குட்டி அவர்களும் இவர்தம் துனைவியார் தங்கமுத்து அவர்களும் தமது அன்பு மகளார் பார்வதியை திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர். கல்வி கரையில் என்பதை உணர்ந்த அமரர் மனைவியாரது சங்கீத அறிவை மேலும் வளர்க்க எண்ணி அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் சங்கீத பூஷணம் பட்டம் பெற வைத்தனர்.

அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் சமயப் பணிகளில் பங்கு கொண்டு பொது நிறுவனங்கள், ஆலயங்கள் மூலம் ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.அம்பாள் ஆலயத்தின் நிறைவேற்று அலுவலாகவும் பணிபுரிந்து அப்பணியைத்திறம்படச்செய்து பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.

அமரர் அவர்கள் ஒரு சிறந்த சிந்தனையாளன், நல்ல பண்பாளன், மற்றவர் மனம் நோகப்பேசாதவர். இளமைக்காலத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வியைத்தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டு கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றார். இவரின் பேரன் நாகமணிப்புலவரது கவிதைகள் நூலுருப்பெறவில்லை என்று மனம் வருந்தி அவற்றை நூலுருவாக்க வேண்டும் என்ன முயற்சிகளை மேற்கொண்ட வேளையில் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் நாள் இவ்வுலகை விட்ட மறைந்து விட்டார். இயற்கை விதியை வெல்வார் இறைவனைத்தவிர யாருளார்.

ஆக்கம் :திரு. ந. உருத்திரலிங்கம்

[AdSense-B]