நயினாதீவின் சரித்திர வரலாறுகளை முன்னோக்கிப் பார்க்கின்ற போது, இச் சனசமூக நிலையம் நயினாதீவில், 2ம் வட்டாரத்தில் முதன் முதலில் 1933ம் ஆண்டில் ஸ்ரீ நாகபூசணி வித்தியாசாலையின் தென்கிழக்குத் திசையில் பிரதான வீதியில் இயங்கி ஆரம்பித்தது. நெடுநாட்களாக நூல் நிலையத்திற்கென அமைக்கப்பட்ட அதன் கட்டிடத்தில் தனது சேவையை சிறப்பாக ஆற்றி வருகின்றது. இப்பகுதியில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பெரியார்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், அரச சேவையாளர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் போன்ற அன்புள்ளங் கொண்டவர்களால் இச்சனசமூக நிலையம் வளர்ச்சியும், உயர்ச்சியும் பெற்று வந்துள்ளது. இவர்களது நல்லாசிகளும், நன்னோக்கமும் இதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றது. இளம் சிறார்களின் கல்வி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும்பணியை 1963ம் ஆண்டு பாலர் பாடசாலையை நிறுவி அதன் மூலம் செய்து வருகின்றது. நயினாதீவு 3ம் வட்டாரத்தில் வசித்து வந்த பிரபல வர்த்தகர் அமரர்.திரு.திருமதி.இ.செல்லையா அவர்களது ஞாபகார்த்தமாக ‘செல்லர் பாலர்கழகம்’ என்ற பெயரில் 1963ம் ஆண்டு சனசமூக வளாகத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய மகாவித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய திரு.நா.க.சண்முகநாதபிள்ளை அவர்களின் பெருமுயற்சியால் செல்லர் பாலர்கழகம் புனரமைப்புச் செய்யப்பட்டது.
பல்லாண்டு காலமாக பாலர் பாடசாலையை நல்லாசிரியர்களின் செயற்பாட்டுடன் நடாத்தி வருகின்றது. சமய அறிவுப் பரீட்சைகளை நடாத்தி தெர்ப்பொற்சவத்தினத்தன்று ஆலயத்தின் கலை அரங்கில் கலை நிகழ்ச்சிகளையும், பெரியார்களின் அருளுரைகளையும் நடாத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறந்த பரிசில்களையும் வங்கி சேமிப்புத் திட்டத்தையும் வழங்கி வருகின்றது. இப்பணி தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றது. உள்ளக மட்டம், பிரதேச மட்டம், தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இச்சனசமூக நிலையத்தின் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார்கள். உள்ளக மட்ட சனசமூக நிலையங்கள் மத்தியில் கிறிக்கெற் போட்டிகளை நடாத்தி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணங்களையும் வெற்றிக் கேடயங்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. விளையாட்டுத்துறையில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி நயினை மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றது. நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகன் கோயில் கும்பாபிசேக தினத்தில் அடியார்களுக்கு உணவளிக்கும் அன்னதானத் தொண்டினையும் செய்து வந்துள்ளது. பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள், நிலையங்களின் விளையாட்டுப் போட்டிகள் என்பனவற்றிற்கு சகல வழிகளிலும் (இடவசதி உட்பட) ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்து வருகின்றது.
‘நாட்டைக் காப்பது நம் கடமை’ என்ற தாரக மந்திரத்தை நிலை நிறுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்று சகல வழிகளிலும் உயர்ச்சி பெற்று வருகின்றது. சிரமதானம், நிழல் மரங்கள் நாட்டுதல், பொது வைபவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், நன்னீர்க் கிணறுகள் அமைத்தல் போன்ற நற்பணிகளையும் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.