அளவையூர் அருட்கவி சி.விநாசித்தம்பி புலவர் அவர்கள் எழுதிய “ஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை” எனும் நூற்றியெட்டு (108) பதிகப்பாமாலை.


ஓம்‌ சிவசக்தி

ஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை 

– காப்பு – 
ஜங்க ரத்தனின்‌ அன்னைநா கேஸ்வரி
சங்க ரன்வலம்‌ தழுவிய சாம்பவி
துங்க மாகடல்‌ சூழ்நயி னாநகர்‌
தங்கு மாயவன்‌ தங்கையைப்‌ போற்றுவாம்‌.

திருவளர்‌ கைலை உமையே போற்றி
சிவநயி னாபரமேஸ்‌ வரியே போற்றி
பிரணவ நாதனின்‌ அன்னையே போற்றி
பேரம்‌ பலச்சிவ காமியே போற்றி

சந்திர மெளலிச்‌ சடையாய்‌ போற்றி
தரளப்‌ புன்னகை வதனியே போற்றி
செந்துவர்ப்‌ பரிமள வாயினாய்‌ போற்றி
திருநீ றொளிர்பசும்‌ மேனியாய்‌ போற்றி

குங்கும சந்தன நுதலினாய்‌ போற்றி
குண்டலம்‌ திகளும்‌ காதினாய்‌ போற்றி
தங்கரத்‌ தினவளைக்‌ கையினாய்‌ போற்றி
தபனமா ணிக்கமூக்‌ குத்தியாய்‌ போற்றி

சிவனணி மங்கலக்‌ கன்னியே போற்றி
சிற்பர சுடர்க்கணை யாழியாய்‌ போற்றி
துவளொட்‌ டியாணத்‌ திடையாய்‌ போற்றி
சொற்பதங்‌ கடந்தபூந்‌ துகிலாய்‌ போற்றி

பராபர தனக்கச்‌ சடையாய்‌ போற்றி
பண்ணெழு சிலம்பொலி பதத்தாய்‌ போற்றி
சராசரம்‌ குளிரருட்‌  கண்ணினாய்‌ போற்றி
தண்ணிய வேயுறு தோளினாய்‌ போற்றி

நளினமும்‌ கலசமும்‌ ஏந்தினாய்‌ போற்றி
நலமுயர்‌ பாசாங்‌ குசத்தாய்‌ போற்றி
களிமிகு கருப்புவில்‌ பிடித்தாய்‌. போற்றி
கவினுரு வளர்விரல்‌ நகத்தாய்‌ போற்றி

ஓங்கா ரஓசை ஒலியே போற்றி
ஒம்‌ஐம்‌ ஹ்ரீம்ஸ்ரீம்‌ உருவே போற்றி
நீங்காத ஸ்ரீசக்‌ கரத்தாய்‌ போற்றி
நிலைபெறும்‌ ஐந்தொழில்‌ புரிவாய்‌ போற்றி

மொழியுமைம்‌ பத்தோர்‌ எழுத்தே போற்றி
முற்படு குண்டலி சத்தியே போற்றி
சுழலும்‌ மூலமார்‌ ஸாசினி போற்றி
சுவாதிட்‌ டான காகினி போற்றி

மணிபூ ரகத்து லாகனி போற்றி
மருவிய அநாகத ராகினி போற்றி
அணிதரு விசுத்தி டாகினி போற்றி
ஆக்ஞா சக்கர ஹாகினி போற்றி

துவாத சாந்தநீள்‌ வெளியே போற்றி
துரியா தீதச்‌ சுடரே போற்றி
திவாகர சகஸ்ரபீ டத்தாய்‌ போற்றி
சிந்தனைக்‌ கடங்காச்‌ சிகரமே போற்றி

பதினா றாறுதத்‌ துவமே போற்றி
பயிலும்‌ தத்துவத்‌ தெளிவே போற்றி
சதுர்மறை உச்சியின்‌ ஞாயிறே போற்றி
சாற்றிடும்‌ ஆகம ரூபியே போற்றி

வழங்குமெண்‌ ணெண்ணா சனத்தாய்‌ போற்றி
மணித்தீ வமர்புவ னேஸ்வரி போற்றி
முழங்குகண்‌ ணகிக்கருள்‌ தந்தாய்‌ போற்றி
முகுந்தன்‌ அழைப்பேற்‌ றிருந்தாய்‌ போற்றி

நயனார் பூசனை நயந்தாய்‌ போற்றி
நன்மா நாய்கர்க்‌ கருளினாய்‌ போற்றி
சுயம்புவாய்த்‌ தோன்றிய சோதியே போற்றி
தொழுமர வத்தினுள்‌ மிளிர்வாய்‌ போற்றி

ஆலமர்‌ பொந்தினுள்‌ அமர்ந்தாய்‌ போற்றி
அமரரின்‌ பூசனைக்‌ கிசைந்தாய்‌ போற்றி
ஆலயம்‌ வளர்நிதி கொடுத்தாய்‌ போற்றி
ஆதிகோ முகிநீ ராடினாய்‌ போற்றி

நாகசா பந்தீர்த்‌ தணிந்தாய்‌ போற்றி
நாகர்தா லாட்டத்‌ துயில்வாய்‌ போற்றி
நாகதோ ஷத்தை யகற்றுவாய்‌ போற்றி
நாவில்‌ கலைவளம்‌ இயற்றுவாய்‌ போற்றி

மணிமே கலைதுயர்‌ நீக்கினாய்‌ போற்றி
வருமிந்‌ திரன்பழி போக்கினாய்‌ போற்றி
அணிதவ சித்தரை வளர்த்தாய்‌ போற்றி
அமுத சுரபியை அளித்தாய்‌ போற்றி

மால்புகழ்‌ சிற்பரத்‌ தங்கையே பே௱ற்றி
வடக்கா டாடிய மங்கையே போற்றி
கோல்கொடுத்‌ தானொரு பாதியே போற்றி
கோள்நா ளியக்கும்‌ சோதியே போற்றி

கும்பிடு மமரரைக்‌ காத்தாய்‌ போற்றி
கூர்வடி வேலனை அணைத்தாய்‌ போற்றி
சும்பன்‌ நிசும்பனை வதைத்தாய்‌ போற்றி
தொடர்சண்‌ டமுண்டரைச்‌ சிதைத்தாய்‌ போற்றி

பண்டா சுரசங்‌ காரியே போற்றி
பரமகா மேசரின்‌ லலிதையே போற்றி
திண்டோள்‌ மகிஷனைத்‌ துணித்தாய்‌ போற்றி
தென்திசை மறலியை உதைத்தாய்‌ போற்றி

அம்புலி காட்டிய அபிராமி போற்றி
* அகுல சகஸ்ரா ரத்தாய்‌ போற்றி
கொம்பனைக்‌ காவலன்‌ ஆக்கினாய்‌ போற்றி
கோகுல வண்ணனைச்‌ சபித்தாய்‌ போற்றி

பால்கொடுத்‌ தருட்பாட்‌ டுவந்தாய்‌ போற்றி
பண்தா ளத்தொலி கொடுத்தாய்‌ போற்றி
நாலெட்‌ டறங்கள்‌ புரிந்தாய்‌ போற்றி
நவிலெண்‌ ணெண்கலை யருளினாய்‌ போற்றி

தக்கனின்‌ வேள்வி தடிந்தாய்‌ போற்றி
சைவ நீதிகள்‌ மொழிந்தாய்‌ போற்றி
மிக்க மலைமகள்‌ ஆனாய்‌ போற்றி
வியன்தமிழ்‌ ஆட்சி நடத்தினாய்‌ போற்றி

பாடிப்‌ பரவுவார்‌ மனத்தாய்‌ போற்றி
பனிமலர்‌ சூடுவார்‌ சிரத்தாய்‌ போற்றி
நாடும்‌ வரமெலாம்‌ சுரப்பாய்‌ போற்றி
நமனணு காமல்‌ தடுப்பாய்‌ போற்றி

இல்லறச்‌ செல்வம்‌ நல்குவாய்‌ போற்றி
இனியசந்‌ தானமும்‌ தருவாய்‌ போற்றி
நல்லறி வின்பமும்‌ காட்டுவாய்‌ போற்றி
ஞானமும்‌ யோகமும்‌ கூட்டுவாய்‌ போற்றி

நோய்மிடி வஞ்சனை ஓட்டுவாய்‌ போற்றி
நுண்சிவ சிந்தனை ஊட்டுவாய்‌ போற்றி
வாய்மனம்‌ செயல்பழி தீர்ப்பாய்‌ போற்றி
மலரடி, யிணைநிழல்‌ சேர்ப்பாய்‌ போற்றி

எங்கும்‌ நிறைந்த இறைவியே போற்றி
இலிங்க சதாசிவ மனோன்மணி போற்றி
சிங்கம்‌ மேவிய துர்க்கையே போற்றி
செங்கம லாசனத்‌ திருமகள்‌ போற்றி

படிக நிறத்துப்‌ பாரதி போற்றி
பாஸ்கர காயத்‌ திரியே போற்றி
திடமிகு சாவித்‌ திரியே போற்றி
சிவாம்ச நாகபூ ஷணியே போற்றி

பொன்னிறை நயினைநாக பூஷணித்தாயே நின்றன்‌
சொன்னய நாமம்பாடித்‌ தோத்திரம்‌ செய்தோம்‌௮ம்மா
பின்னமில்‌ லாதவாழ்வும்‌ பெருநெறி பயிலும்மாண்பும்‌
அன்னையே அருள்வாயம்மா அடைச்கலமுனக்கே போற்றி

நாற்பயன்‌

அன்னையாம் நயினைமேவும்‌ அருள்நாக பூஷணித்தாய்‌
பொன்னடித்‌ தோத்திரங்கள்‌ புந்திவைத்‌ தோதினோர்கள்‌
முன்னிய வரங்கள்பெற்று முற்பவ வினைகளோய்ந்து
நன்னெறிக்‌ கதிகள்பொங்கி நலமிக வாழுவாரே

 – அருட்கவி சி. விநாசித்தம்பி

* (அகுலாயை நம)

கோப்பு வடிவில் பதிவிறக்க  அழுத்துங்கள்  – Download