நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான்.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.
ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வெற்றி தரும் விஜயதசமி
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.
மகிஷனை வென்ற துர்க்கை
தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றினார் பிரம்மன். அவரிடம், அழிவில்லாத வரத்தைக் கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மன் மறுக்கவே, பெண்ணால்தான் அழிவு வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.
பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மகிஷன் அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்தான். வரம் கிடைத்ததும் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவர்கள் விஷ்ணுவிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.
விஷ்ணுவோ, ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் ஆபத்து என்ற நிலை இருக்கிறது. எனவே பராசக்தியிடம் போய் வேண்டுங்கள்’ என்று அனுப்பிவைத்தார். இதையடுத்து அனைவரும் பராசக்தியை நோக்கி தவம் இருந்தனர். அவர்களுக்கு அன்னை காட்சி கொடுத்தாள். அவளிடம் தேவர்கள் தங்கள் துன்பத்தைக் கூறியதுடன், அவர்களுக்கு உதவும் பொருட்டு, அசுரனுடன் போருக்கு தயாரானாள் அம்பிகை.
சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.
போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.
எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது.
இந்த நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.