‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம்.
விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் இலயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள்.
உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.
உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.
விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு. இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது… இப்படி விரதங்கள் பல விதம்.
நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம்.
இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.
செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது.