கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9-ம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.
விநாயகர் பெயர் காரணம்
‘வி” என்றால் ‘இதற்கு மேல் இல்லை” எனப் பொருள். ‘நாயகர்” என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
கணபதி – ‘க” என்பது ஞானத்தைக் குறிக்கிறது. ‘ண” என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. ‘பதி” என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.
விநாயகர் வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்தத் தத்துவம்.
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை செய்வது சிறப்பு.
விநாயகரைப் பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்குக் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு பச்சரிசி மாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம். மேலும், ஆலயத்தில் நடைபெறும் ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுத்து உதவுவது சிறப்பு.
விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி வரலாறு!
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்’ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நன்மை ?
மேஷம் – மஞ்சள் பொடி
ரிஷபம் – சானப்பொடி
மிதுனம் – எலுமிச்சை சாறு
கடகம் – பச்சரிசி மாவு
சிம்மம் – பஞ்சாமிருதம்
கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி
துலாம் – தேன்
விருச்சிகம் – இளநீர்
தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்
மகரம் – சந்தனம்
கும்பம் – பஞ்சாமிருதம்
மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்
விநாயகர் அகவல்