நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக, வெற்றிகளை வழங்கும் விரதமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். குமரனை வழிபட்டால் குறைகள் அகலும். கார்த்தி கேயனை வழிபட்டால் கவலைகள் பறந்தோடும். கந்தப்பெருமானை வழிபட்டால் கைநிறையப் பொருள் குவியும்.
அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள் ஆவார்.
‘காவடிகள் உன்னைத் தேடி ஆடி வரும்!
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்!
சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருள்வான் கந்தவேலன்!’
என்று கந்தன்பதிகம் எடுத்துரைக்கின்றது.
அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.
அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும்.
இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்!
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
ஆதார மான பெருமான்!
என்று முருகப்பெருமானை கவியரசு கண்ணதாசன் வர்ணிப்பார். வள்ளியை மணந்ததால், வள்ளலானார் முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் செந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண் டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். பால் அபிஷேகம் செய்தால் பாவங் கள் தீரும். நல்லெண்ணெய்யால் அபிஷேகம் செய்தால் நல்லன யாவும் நடந் தேறும். விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்!
சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால், சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சிந்தனைகள் வெற்றி பெறும். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் உருவாகும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலவும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ்பரவும் வாய்ப்பு கிட்டும்.
அன்னத்தால் அபிஷேகம் செய்தால் அரசு வழி ஆதரவு கிடைக்கும்! சொர்ணத்தால் அபிஷேகம் செய்தால் சுகங் களும், வாகன யோகமும் வந்து சேரும்! பன்னீரால் அபிஷேகம் செய்தால் செல்வாக்கு உயரும். தேனால் அபிஷேகம் செய்தால் தித்திக்கும் சங்கீத ஞானம் கிட்டும்.
இல்லத்து பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடுபவர்கள் விநாயகப் பெருமான் படத்தையும் இணைத்து வைத்து அதற்கு முன்னால் ஐந்துமுக விளக்கு ஏற்றி, ஐந்து எண்ணெய் ஊற்றி, ஐந்து விதமான பழங்களை நைவேத்தியமாக்கி, ஐந்துவிதமான பூக்களை மாலையாக தொடுத்து, முருகப்பெருமானுக்கு அணிவித்து அவனுக்குப் பிடித்த மாம்பழத்தையும், கந்தரப்பத்தையும் வைத்துக் கவச பாராயணத்தை பாடி வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி செல்லுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று நிம்மதியைக் காணுங்கள்.