நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும் மிகப் பெரிய பயம் எது? என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, ஆன்மீகம் கூறும் இந்த சிறிய கதையை முதலில் பார்த்துவிடுவோம். அதன் பின்பு உங்களது மனதில் எந்தவிதமான பயத்திற்குமே இடம் கிடையாது. எந்தவிதமான பயமும் இல்லாத வாழ்க்கை நமக்கு ஆரோக்கியத்தை தேடித்தரும். மனநிம்மதியை தேடித்தரும். எவர் ஒருவர் வாழ்வில் பயம் இல்லையோ, அவர் தன்னுடைய வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்ந்து விடலாம் என்பது முன்னோர்களின் கூற்று.
கதைக்கு செல்வோமா! ஒரு அழகான குருவியை எமதர்மராஜா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். யமதர்ம ராஜாவின் பார்வை ஒரு உயிரின் மேல் பட்டால் என்ன நடக்கும்! கட்டாயம் மரணம்தான். இந்த சம்பவத்தை பார்த்த கருட பகவானுக்கு பயம் வந்துவிட்டது. அந்த குருவிக்கு கெட்ட நேரம் இருப்பதை உணர்ந்த கருட பகவான், குருவியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் குருவியை தூக்கிக் கொண்டுபோய் பல மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு பொந்தில் மறைத்து வைத்தார். ஆனால் அங்கிருந்த ஒரு பாம்பு, உடனேயே அந்தக் குருவியை விழுங்கிவிட்டது.
காப்பாற்ற வேண்டும் என்ற நினைத்த குருவியை நானே கொன்று விட்டேனே! என்ற கவலையில் கருட பகவான், ‘குருவி இருந்த பழைய இடத்திற்கே வந்து, எமதர்மராஜாவை சந்தித்தார்.’ எமதர்மராஜா கருடரையும் உற்றுப் பார்த்தார்.
யமதர்ம ராஜாவிடம் கருடர் கூறியது இதுதான்! ‘நான் விஷ்ணு பகவானின் வாகனமாக இருப்பவன். அவரை முதுகில் சுமந்து செல்லும் என்னை உன்னால் எதுவும் செய்துவிட முடியாது.’
இதைக்கேட்ட எமதர்மராஜா ‘கருடரே! நீங்கள் என்னை தவறாக புரிந்து இருக்கிறீர்கள். அந்தக் குருவியை நான் உற்றுநோக்க காரணம், ‘சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அந்தப்பக்கம் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இந்த குருவியானது இறக்க நேரிடும், என்று’ விதியால் எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது! என்பதைத்தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இதைக்கேட்ட கருடபகவான் திகைப்பில் ஆழ்ந்தார். ஒருவருக்கு விதிப்படி மரணம் எப்போது நிகழுமோ அப்போது கட்டாயமாக நிகழத்தான் போகிறது! என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த கதை.
இப்போது புரிந்திருக்கும் அல்லவா? வாழ்க்கையில் மிகப் பெரிய பயம் எது என்று? மரணம்தான். இதற்காக எதற்கும் பயப்படாமல் திமிரோடு நடக்கவேண்டும் என்பது அர்த்தமில்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் தேவை. ஆனால், நாம் பிறக்கும்போதே நமக்கு எப்போது மரணம் நிகழ வேண்டும் என்பதை நம் தலையில் எழுதப்பட்டிருக்கும். ஆண்டவனாலும் நம் விதியை மாற்ற முடியாது.
இப்போது உலகம் இருக்கும் சூழ்நிலையில், எது நடக்கிறதோ அது நம் நன்மைக்காகத்தான் என்று நினைத்துக்கொண்டு, மன அமைதியோடு வாழ, என்ன வழியோ அதை தான் நாம் பின்பற்ற வேண்டும். எப்போது நமக்கு மரணம் வந்து விடுமோ! என்ற பயத்தை விட்டுவிட்டு, நாம் வாழ்கின்ற வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் எப்படி வாழலாம் என்று நினைத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
‘துணிந்து நிற்ப்பவர்களுக்கு துக்கம் இல்லை’. ‘எந்த நோயும் என்னை தாக்காது என்று சொல்லி வெளியில் சுற்ற சென்று விடாதீர்கள்’. துணிச்சலோடு இருந்தால் எந்தத் துன்பத்தில் இருந்தும், மீண்டு வந்து விடலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். எதைக் கண்டும் அஞ்சாமல், எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற மன தைரியத்தோடு வாழ்வதுதான் வாழ்க்கை. ‘இதுவும் கடந்து போகும்’.