காப்பு
கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் – அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்கு காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும்அரன்றான் ஈன்றருளும் மைந்தா – முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என் கதைக்கு நீஎன்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக்
காதலாற் கூப்புவர் தம் கை.

ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனதில் எப்பொழுதும்
கொண்டக்கால் வாராது கூற்று.

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

சப்பாணி
எள்ளு பொரி தேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும்,வாழைப்பழமும், பலாப்பழமும்,
வெள்ளைப்பாலும், மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி,
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே,
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்,
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவீ
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் எனனும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சிந்தத் தனில்நீ இருந்து திருவருள் செய்திடு வாயே.

அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை இருந்த சீர்சால் முனிவன்
கந்த மும்மதக் கரி முகன் கதைதனைச்
செந்தமிழ் வகையால்தெளிவு றச் செப்பினன்
அன்னதிற் பிறவில் அரி ல்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.

கதை
மந்திர கிரியில் வடபால் ஆங்குஓர்
இந்துதவழ் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும்
தடநிழற் பள்ளியு ந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடும் நாளில்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவன்அடி வணங்கிப்
பரனே சிவனே பல்லுயிர்க்கும் உயிரே
அரனே மறையவர்க்கு அருள்புரிந்து அருளென
அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில் லைஎன்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்குஅருள் செய்கென
எமைஆ ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதமை என்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்
பேதாய் நீபோய்ப் பிறஎன மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடும் மானிடப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் அவட்குநீ பிள்ளை யாகச்
சென்றுஅவன் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை என்று
விடைகொடுத்து அருள விலங்கல்மா மகளும்
பெடைமயிற் சாயற் பெண்மக வுஆகித்
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
பாவையூஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையூம் பயின்ற இயல்பினள் ஆகி
ஐயாண்டு அடைந்தபின் அன்னையூம் அத்தனும்
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை
மானுட மறையோர் க்கு வதுவை செய்திடக்
கான்அமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையோன் யான்என
மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்துஅவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யான்எனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைப்ப
மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல்வதச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர்சூழ
அணிமலர்க் குழல்உமை அருந்தவம் புரிதலும்
அரிவை தன்அருந்தவம் அறிவோம் யாம்என
இருவரும் அறியா இமையவர் பெருமான்
மான்இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையிற்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறுங் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்இடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவம்இங்கு இயற்றுவது என்றலுங்
கொன்றைவார் சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும்
மாட்டினில் ஏறி மான்மழு தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையூஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சை கொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீர் செய்தவம் நகைதரும் நுமக்கெனப்
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செலுமலர்க் குழலியை
வாடுதல் ஒழிகென மனம்மிகத் தேற்றிச்
சிந்துர வாள்நுதற் சேடியர் சிலர் போய்த்
தந்தைதாய் இருவர் தாளிணை வணங்கி
வாவிக் கரையில் வந்துஒரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினன் என்றலுந்
தோடுஅலர் கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்க என
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள்என
மைமலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன்என்று அந்தணன் உரைத்தலும்
பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர் கென
சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன்
அவனையான் சென்றுஇங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை மடந்தையூஞ் சீறின ளாகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லைஎன்று இசைப்ப
மனையிடை வந்த மாமுனி தன்னை
இணைஅடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையூந் தாயூந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல் பாவம்என்று அஞ்சி
ஆயிழை தானும் அவன்எதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன்என்று எண்ணி
ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாதபூசனைகள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன்கத லிப்பழஞ் சீப்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுது செய்வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயூம்
கற்பூரத் தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின்
ஒள்ளிய தட்டில் உவந்துமுன் வைத்துச்
சிவன்எனப் பாவனை செய்து நினைந்து
தவமுறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேன்அமர் குழலி திருமுகம் நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையூங் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவூவும் மலர்க்கரத்து இலங்கக்
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக்
கரந்ததன் உருவங் காட்டிமுன் நிற்ப
மரகத மேனி தலைமகள் தானும்
விரைவொடுஅங் குஅவன்அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர் கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண் கணத்தில்உள் ளவரும்
மணிக்ருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்
மன்றல்அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல்வந்து இலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறுந் திருவிளக்கு ஏற்றிப்
பத்திப் படர் முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கமுகுங் கதலியூம் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோ டித்து
நலமிகு கைவலோர் நஞ்சுஅணி மிடற்றனைக்
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே
எம்பிரா னையூம் இளங்கொடி தன்னையூம்
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடல்என விளங்குங் காவணந் தன்னிற்
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்துஉட னிருத்திப்
பறைஒலி யோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவைதன் உடனே
ஓதநீர் வேலைசூழ் உஞ்சைஅம் பதிபுக
ஏரார் வழியின் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீஎன
வரும்கருங் குழலாள் மற்றும்உண் டோஎனத்
திருந்துஇழை மடந்தை திரும்பினள் பார்க்கக்
களிறும் பிடியூம் கலந்துவிளை யாடல்கண்டு
ஒளிர் மணி பூணாள் உரவோன் உடனே
இவ்வகை யார் விளை யாடுவோம் ஈங்கென
அவ்வகை அரனும் அதற்குஉடன் பட்டு
மதகரி உரித்தோன் மதகரி யாக
மதர் விழி உமைபிடி வடிவம தாகிக்
கூடிய கலவியிற் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியூடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்விவேத ஆகமஞ் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக் கையொடு
ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயூந்
தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டுங்
கோடிசூரியர் போற் குலவிடு மேனியூம்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்
கற்றைச் சடையூங் கனகநீள் முடியூந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியூமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
மங்கை மனமிய மகிழ்ந்துஉடன் நோக்கி
விண்ணு ளோர் களும் விரிந்தநான் முகனும்
மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள்சுரந்து அருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி அருந்தி
ஏரணி ஆலின்கீழ் இனிதிரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியூந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வானவ ராலும் மானுட ராலுங்
கான் அமர் கொடிய கடுவிலங் காலும்
கருவிக ளாலுங் கால னாலும்
ஒருவகை யாலும் உயிர் அழி யாமல்
திரம்பெற மாதவஞ் செய்துமுன் னாளில்
வரம்பெறு கின்ற வலிமையி னாலே
ஐமுகச் சீயமொத்து அடற்படை சூழக்
கைமுகம் படைத் கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனை மாமுகத்து அவூவுணனொடு அவன்தன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா என்று விடைகொடுத்து அருள
ஆங்குஅவன் தன்னோடு அமர் பல உடற்றிப்
பாங்குறும் அவன்படை பற்றுஅறக் கொன்றபின்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
கார் முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றை வெண் மருப்பை ஒடித்துஅவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்து அவன் வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்தமூ டிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்தவெண் மருப்புஅங்கு இமைநொடி அளவிற்
செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்துஆங்கு உயர் படை சூழ
வாகையூம் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிற் கயல்கமுகு ஏறுந்
திருச்செங் காட்டிற் சிவனைஅர்ச் சித்துக்
கணபதீச் சரம்எனுங் காரண நாமம்
பணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமனம் மகிழ
இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர் முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந் தருவர்
யாவரும் வந்துஇவண் ஏவல்செய் திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகர்க்கு உரிய விரதம் என்றுஎண்ணி
மனாதிகள் கழித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள்
ஒப்பரும் விரதத்து உறும்ஒரு சதுர்த்தியில்
நோற்றுநற் பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றிசெய் திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவரும் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமும்
தாழ்துளைக் கையுந் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங்
கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத் தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும்எய் துவரென்று அசனிபோற் சபித்தான்
விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுள்இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கள் மதிவளர்பக்கஞ்
சதயத் தொட்ட சட்டிநல் விரதமென்று
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத் துதித்த
தருமனும் இளைய தம்பியர் நால்வருந்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி
எண்ணிய விரதம் இடையூறு இன்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாக்கவுஞ்
செருவினில் எதிர்த்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்
எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளத்துதள் உற்றான்
அக்குநீ றணியூம் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியற்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புயம் உடையோன்
சர்வ ஆபரணமுந் தரிக்கப் பட்டவன்
உறுமதிக் குழவிபோல் ஒருமருப்பு உடையோன்
ஒருகையில் தந்தமும் ஒருகையிற் பாசமும்
ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்திசெய் வதனாற் சித்திவி நாயகன்
என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தருந்திரு நாமம் படைத்தோன்
புரவலர் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்
வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும்
உத்தியோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்குஅவன் தன்னை அருச்சனை புரிந்தால்
தீங்குஉறாது எல்லாஞ் செயம்உண் டாகும்
கரதலம் ஐந்துடைக் கணபதிக்கு உரிய
விரதம்ஒன் றுஉளதுஅதை விரும்பினோற் றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத்து உண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தம்மையூம் வென்றிட லாம்எனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு
நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும்
விரித்து எமக்கு உரைத்திட வேண்டும் என்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துஉரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணா;ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பக்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்றன்
ஒள்ளிய அருள்திரு உருஉண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலும் தகுமால்
புசைசெய் திடும்இடம் புனிதமது ஆக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச்
சிந்தையின் நினைந்து தியானம் பண்ணி
ஆவா கனம்முதல் அர்க்கிய பாத்தியம்
வாகா ராச மனம்வரை கொடுத்து
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும்மந் திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன்இரு பத்தொரு விதமாப்
புத்திர புட்பம் பலபல கொணர்ந்தே
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவரன் பாசஅங் குசகரன்
ஏக தந்தன் ஈசுரன் புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வகா ரியமுந் தந்துஅருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி என்னும்நா மங்களால்
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்
தீதகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும்முன் வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும்மந் திரத்தால்
நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்றநா னான்குஉப சாரமும்
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தனம் முத்துத் தானந் தக்கிணை
அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகு விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்தவத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம்என நவில்தரு மரபால்
இம்முறை பூசனை யாவர்செய் தாலும்
எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர்
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன்இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணி
புரம்ஒரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி
விருத்திரா சுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன் தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர் தருங் கணவனைப் பரிவுடன் அடைந்தாள்
தண்ஆர் மதிமுகத் தாள்தம யந்தி
அன்னாள் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவும் நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேர் அறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான்
பகிரதன் என்னும் பார்த்திவன் இவனை
மகிதலந் தன்னில் மலர்க்ககொடுஅர்ச் சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்டதே வதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்குமணி என்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான்
கொண்டுபோம் அளவிற் குஞ்சர முகவனை
வண்டுபாண் மிழற்றா மலர்கொடுஅர்ச் சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம்
புகர் முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விழைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால்
அப்படி நீவிரும் அவனைஅர்ச் சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்துகட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைந்தவை செகத்தினிற் செயங்கொண்டு
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்
ஈங்குஇது நிற்க இவ்விர தத்துஇயல்
ஓங்கிய காதைமற்று ஒன்றுஉரை செய்வாம்
கஞ்சநான் முகன்தருங் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையூம் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்
ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீஇரங்கு எமக்குஎன நெடுங்கரங் கூப்பி
இரசத கிரி உறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர் விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர் விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத் தருவோம் போமின் நீர் என
அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமர வேல்விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும்
ஓடிய வானோர் ஒருங்குஉடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யுந் துயரம் எல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை எரித்த கடவுள்என்று அஞ்சிப்
பாவகன் பயமுறப் பயம்உனக்கு ஏதென
உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்றம்அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந்
தானும்அச் சபையில் தரியாது ஏகி
எமைஆ ளுடைய உமையா ளுடனே
அமையா இன்பத்து அமற்ந்துஇனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
தெள்ளித்திற் பரமனுந் தேயுவைக் கண்டே
அறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீள்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர் கையிற் கொடுப்ப
நீதி யோடு நின்றுகை யேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்கஒண் ணாமல்
தரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத்
தரும்புனற் கங்கையும் தாங்க ஒண்ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண்ஆ றிரண்டுங் கரம்ஈ ராறும்
தூண்எனத் திரண்ட தோள் ஈராறும்
மாண்அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
ஆறுமுகக் கடவுள்அங்கு அவதரித் திடலும்
மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி
அறுமீன் களைப்பால் அளித்திர் என்று அனுப்ப
ஆங்கவர் முலைஉண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளா;ச்சி உற்றிடு நாளில்
விமலனும் உமையும் விடையு கைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகுஅலர் குழல்உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்
தேர் வதம் படைக்குச் சேனா பதியெனக்
காவல் கொண்டு அளிக்கக் கதிர் முடி சூட்டி
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசைஎலாஞ் செல்லுந் தேரும்ஒன்று உதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடுஎன்று அனுப்ப
இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
குருகுப் பேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியில் அமர்ந்துஇனிது இருந்தான்
சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை இழந்தது கண்டே
அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி
மருமலர்க் கடம்பன்எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென
இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல் கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்திமுன் நிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குற்றமென் முலையாள் கூறிய சமயம்
புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ்உமை யான்வென் றேன்என
எம்பெரு மானும் யான்வென் றேன்என
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவரும் சாட்சி இவனைக் கேட்ப
மாமனை வதைத்த மாலமுகம் நோக்கிக்
காமனை எரித்தோன் கண்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றாள் என்றுந்
தோற்ற நாயகன் வென்றான் என்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன்அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்கு உருத்து
நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி உரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி உரைத்த புன்மையி னாலே
கனல்என வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள்வீற்று இருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகில்நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணைவிழி இழந்தே
ஆண்டுஅரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
வளர் மருப்பு ஒன்றுடை வள்ளல்வீற்று இருக்குங்
கிளர் சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால்
திரிகடக் கரி யின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்
கம்பமா முகத்துக் கடவுள்தன் பெருமையை
அம்புவி யோருக்கு அறிவிப் போம்என
உம்பர் உலகத்து ஓரெழு கன்னியர்
தம்பநூல் ஏணியில்தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் நாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி
இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டஒரு மனமாய்
வேதத்து ஆதியூம் பூமியில் எழுத்தும்
ஆதிவி நாயகற்கு ஆன எழுத்தும்
மூன்றுஎழுத் ததனால் மொழிந்தமத் திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினாறு உபசா ரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றநாள் ஐங்கர மாமுகன் பிறந்த
அற்றைநாட் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும்அத் தினத்தில் தெளி புனல் ஆடி
வாரண முகத்தோன் வருபெருங் கோயில்
சீர் பெற மெழுகித் திருவிளக்கு ஏற்றிக்
குலவு பொற் கலைகள் கொடுவி தானித்து
மலர் பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞசனம் ஆட்டிப்
பொற்கலை நல்நூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச்
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருந்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன் கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ்இரு வாட்சி
தாமரை முல்லை தளைஅவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்புசெவ் வந்தி
வாய்ந்தநல் எருக்கு மலர் க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர் கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித்
தூபதீ பங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல்எள் ளுருண்டை
முப்பழந் தேங்காய் முதிர் மொளிக் கரும்பு
சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும்நோற் பேனேன
ஆங்குஅவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடுஇவ் விரதம் பரிந்துநோற் பித்தார்
அண்டர் நா யகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
உஞ்ஞைமா நகர்புகுந்து உமையொடு விமலன்
கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யான்இடுஞ் சாபம் நீங்கியது ஏனென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத்
தந்துஅருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுமை அடைந்த வன்தாழ் நீக்கி
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
நானோ வந்து நகையா னதுஎனத்
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ்சூர் அறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருந்திநோற் பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின்
குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன்
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்துகண் டனனே
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனத்
தண்நறுங் குழல்உமை சாபம்இட் டதுவும்
அக்குநீறு அணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயக விரதம்நோற்று அதன்பின்
சுடர் க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி உருவம் விட்டுநீங் கியதும்
பரிவுகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
கவுரி அன்று அடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்
காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து
தடமுலைத் திலோத்தமை தனைமணம் புணர்ந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
பரிவொடுஇவ் விரதம் பாரகந் தன்னில்
விரைகமழ் நறுந்தார் விக்கிரமா தித்தன்
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்
மற்றவன் காதன் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி
மெத்ததஅன் புடன்இவ் விரதம்நோற் பேனென
அந்தந் தன்னில் அணியிழை செறித்துச்
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு
வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை இருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி ஒருத்தி
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி
இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
குழைதவிழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
செப்பமுடனே திருந்திழை நோற்றிடக்
கரி முகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம்அவட்கு அருளக்
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிர மானஉடை மணிகட்டித்
தண்டையுஞ் சிலம்புந் தாளினின்று ஒலிப்பக்
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கும் மன்னவன் தன்னிடங்
கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற்
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென எழுந்து துணைவியை நோக்கி;க்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்
ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு
இமைப்பொழுது இவள்இங்கு இருக்கலா காதுஎன
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலியகல் லாய்விட
அணியிழை தன்னை அவனும் அகற்ற
உழவர்தம் மனையில் உற்றுஅவள் இருப்ப
வளர் பயிர் அழிந்து வளம்பல குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்
தூசுதூய் தாக்குந் தொழிலோர் மனைபுகத்
தூசுகள் எல்லாந் துணிந்துவே றாகத்
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு
ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய்
சாலவும் பாவிநீ தான்யார் என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர்
அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப
அவ்வை செல்லும் அங்கங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குற்றினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் அகமதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார் க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லுவிக் கிரம சூரியன் மனையெனச்
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச்
சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி எடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரைமெழுக் கிட்டு
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்
புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின்று ஆட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்துஅவள் கிடப்பக்
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே அகமதிற் சென்று
புத்தகம் எடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்துமுன் அறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக்
கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
அப்பமும் அவலும் மாம்பழ பண்டமுஞ்
செப்பம தாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை
வித்தக மாக விளங்குஇழை நோற்றுக்
கற்பக நம்பி கருணைபெற்றதன் பின்
சக்கர வாள சைனியத் தோடு
விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையூந் தண்ணீர் விரும்பி
எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசற்கு அருளெனச்
செப்பிய அன்னை திருமொழிப் படியே
உண்நீர்க் கரகமும் ஒருபணி காரமும்
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்
அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந்
தானது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண்இது
குணமுடை இவள்உன் குலமனை யாடடி
இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற
மங்iயை நோக்கி மனமிக மகிழ்ந்து
திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர் பதம் உதவினன்
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச்
சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.

நூற்பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் – உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பணைக்கை முக்கண் புகார்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் – சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை – உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர் க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
சாலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் – மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.