நயினாதீவு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதுடன் அழிந்து போன குமரிக்கண்ட வரலாற்றோடு மிகவும் கூடிய தொடர்பு கொண்டு இருந்த ஒரு இடம் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்டது . குமரிக்கண்டத்தில் மக்களின் நோய்களை பல சித்தர்கர்கள் சித்த வைத்திய முறைகள் மூலம் தீர்த்தார்கள் . இவர்களின் அகத்தியர் ,புலஸ்தியர் ,மரீசி போன்றவர்கள் புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள் என்று புராணங்கள் வாயிலாக அறிகின்றோம் .இந்த மரீசியின் மகன் காசிபன் வழியில் வந்த ஆதிசேடன் வாசுகி போன்றவர்களே நாகலோகத்து அரசர்கள் என்று வரலாறுகள் சொல்கின்றது.அந்த நாகலோகத்தின் ஒரு மிக சிறிய பகுதி எமது நயினாதீவு என்பது மிகவும் பெருமைக்கு உரிய விடயம் .இந்த நாகலோகத்தவர்களிடம் தான் கொடிய பாம்புகளின் விசத்தை முறிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை வைத்திய முறைகள் இருந்தன என்று வரலாறுகள் சொல்கின்றன . புராதன புராணங்கள் இவற்றை கூறி இருந்தாலும் ,இராமாயணத்தில் இந்திரஜித்துவின் சக்திமிக்க நாக பாணத்தால் இலக்குவன் மூர்சை அடைந்து மயக்கம் உற்று இருக்கும் பொழுது ,இராமர் பக்கம் சேர்ந்து நின்ற வீபூசணன் சொல்கின்றான் .இந்த விசத்தை முறிவு செய்யும் வைத்திய முறையை அறிந்தவர் சுசேனர் (அவர் அன்றைய நாக லோகத்தின் பகுதியாக கருதப்பட்ட இன்றைய குறிப்பாக எமது பகுதியில் தான் இருக்கின்றார் ) அவரை அழைத்துவந்தால் தான் காப்பற்றலாம் என்று (அதாவது இங்கு எமது பகுதி என்று குறிப்பிட்டது நமது கிராமத்தை மட்டும் அல்ல நமது கிராமத்தோடு சேர்ந்த வடபகுதியாக இருக்கலாம் ) உடனடியாக அனுமன் புறப்பட்டு வந்து விடயத்தை சொல்லாமலே கட்டாயப்படுத்தி அவரை அழைத்து செல்கின்றான் .அவர் குறிப்பிட்ட படியே இமய மலைக்கு சென்று மிருத்திய சஞ்சீவினி மூலிகை பெற்று வந்து அவரிடம் கொடுக்க அவர் இலக்குவனை காப்பாற்றுகின்றார் . அன்றில் இருந்து இன்றுவரை விஷ ஜந்துகளிடம் இருந்து உயிர்காக்கும் அந்த அறிய சேவையை பலர் செய்து வருகின்றார்கள் .அவர்களில் நமது கிராமத்தில் வாழ்ந்த வாழ்கின்ற சிலரும் இந்த சேவையை ஆற்றி வருகின்றார்கள் .

இவர்களில் ஒருவர் சாத்திரியார் சுந்தர ஐயாதுரையர் .இவர் இந்த பணியை இவரது மூதாதையரிடம் இருந்து கற்று பன்னேடும்காலமாக செய்து வந்து தன் வம்சத்துக்கும் கற்பித்து விட்டு சென்றிருக்கின்றார் .சில குறிப்புக்களும் ஏடுகளில் எழுதிவைத்து இருக்கின்றார் .இவர்கள் விஷ ஜந்துகளின் வாய் பற்கள் தீண்டிய இடத்தில் ,வேப்பம் இலையால் தடவி வீபூதி ,மற்றும் இவர்களாலேயே தயாரிக்கப்பட்ட ஒரு மூலிகை திரவியத்தை தடவி எங்கோ தீண்டிய விஷம் என்ன என்று இருந்த இடத்தில இருந்து கண்டு பிடிப்பார் .அதன் தாக்கத்தை அறிந்து அதற்குரிய மூலிகைகளை எடுத்து உரலில் அல்லது அம்மியில் வைத்து அரைத்து பூசி அவர்கள் உயிரை காப்பாற்றுவார் .நோய்யாளர்களின் வீட்டு சூழல் பாம்பு அல்லது விசஜந்து தீண்டியதாக கருதப்படும் இடம் என்பனவற்றை அறிந்து .இனி அவ்வாறான விசங்கள் அந்த இடத்துக்கு வராமல் இருக்க அந்த இடங்களில் நட வேண்டிய மூலிகைகள் பெயர்களை அவர்களுக்கு சொல்லி அவை எங்கு கிடைக்கும் என்ற விபரத்தையும் சொல்லிவிடுவார் .

விஷ ஜந்துகளில் தீண்டிய பாதகமான துன்பங்களில் இருந்து காப்பாற்றிய மற்றவர் குட்டியாபிள்ளை.இவர் இன்று இருக்கும் வீரகத்தி விநாயகர் ஆலயத்துக்கு பக்கத்தில் இருந்தவர் .இவரும்,இவரது மனைவியும் விசஜந்துகள் தீண்டிய பல உயிர்களை காப்பாற்றியவர்கள் .இவர்களும் ,வேப்பம் இலையையும் ,வீபூதியையும் இவர்களாலேயே தயாரிக்கபட்ட மூலிகை திரவியங்களையும் கொண்டே விஷ ஜந்துக்களை அடையாளம் கண்டு பார்வை பார்த்து அவர்கள் துன்பங்களை போக்கினார்கள் .ஊரில் பலருக்கு வீபூதியின் மகிமைகள் பற்றி சொல்லி கொடுத்ததில் அதன் பயன்பாட்டை விளக்கி பலரை தினமும் பூச வைத்து பல துன்பங்கள் நோய்நொடிகளில் இருந்து காப்பாற்றியதில் இவர்களது சேவை அளப்பரியது . குட்டியாபிள்ளை ஆச்சி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இவரது மனைவி பார்வை பார்க்கும் பொழுது வீபூதியை பூசி திருமுறைகளையும் ஓதியவாறு பாம்பின் பல்லு பட்டு இருக்கும் இடத்தை கண்ணை மூடி தடவி பார்த்து சொல்வாவாம் என்ன விஷம் கடித்து இருக்கு என்று, இவவிடம் செல்பவர்கள் பின்னர் பாம்பை கண்டாலே தேவாரம் பாட தொடங்கிவிடுவார்களாம் .

பாம்பு மற்றும் விஷங்கள் கடித்தவர்களை என்ன விஷம் கடித்தது என்று பார்வை பார்த்து அதற்குரிய வைத்தியம் செய்து காப்பாற்றிய ,இன்னுமொருவராக அறியப்படுபவர் காசிப்பிள்ளை ஆறுமுகம். இவரும் வேப்பம் இலையையும் வீபூதியையும் கொண்டே விஷத்தை அறியும் கலையை அறிந்து இருந்தார் .என்ன விஷம் தீண்டியது என்பதை அறிந்து அதற்கேற்ப அரைக்கப்பட்ட மூலிகை திரவியங்களை அந்த இடங்களில் பூசி பாதிக்கப்பட்டவர்களின் நோய்களை தீர்த்து வந்தார்.விஷங்கள் கடித்த உடன் செய்ய வேண்டிய முன்மாதிரியான விடயங்களையும் விழிப்புணர்வு கருத்துக்களையும் மக்களுக்கு அறிவுரையாக கூறிவந்தார் என்றும் அறியப்படுகின்றது .

இன்று நவீன வசதிகள் வந்து விஞ்ஞான ரீதியான மருத்துவ முறைகள் விஷ முறிவு ஊசிகள் என்பனவற்றை பாவித்தாலும் பாரம்பரிய முறைகளில் எம்முன்றோர்கள் செய்த வைத்தியத்துடன் ஒப்பிடும் பொழுது அன்று நாம் பெற்ற பலன் நிறைவானதாகவே கருதப்படுகின்றது .

ஊர் மக்கள் நலன்களில் அக்கறை கொண்டு வைத்தியம் செய்தவர்கள் வரிசையில் அடுத்து தொங்கல் என்று சொல்லபடுகின்ற நோய் தீர்த்த வைத்தியர்கள் பற்றி பார்ப்போம் .தொங்கல் என்று சொல்ல படுகின்ற நோயானது உடனடியாக கண்டு பிடித்து வைத்தியம் செய்யாதவிடத்து உயிராபத்தை கூட விளைவிக்கும் நோயாகும் .மற்றும் இந்த நோய் ஏற்படுபவருக்கு அடி வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டு மிகவும் சோர்மானமான உடல் நிலைக்கு அவரை தள்ளிவிடும் .

இந்த வயிற்றில் வரும் நோய்களை தங்கள் பக்குவ கை வைத்தியத்தால் கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு சொல்லி வைத்தியம் செய்து குணமாக்கியவர்களில் முதன்மையானவர் சின்னகுட்டி வீரபத்திரன் .சிவநெறி செல்வரான இவர் ஆலயங்களுக்கு தொண்டு செய்தும் மாலை கட்டி கொடுக்கும் திருத்தொண்டையும் இளமையில் இருந்து செய்து வந்ததால் இவரை எல்லோரும் அன்பாக பண்டரப்பா என்று அழைப்பார்கள் .இவரின் வம்சத்தினர் பாரம்பரிய சகல கிரியைகளும் தெரிந்த சிவநெறி தொண்டர்களாக விளங்குகின்றார்கள் .பண்டாரப்பா மிகவும் சிவ பக்தி உடையவர் .செய்யும் செயலில் தூய்மையானவர் .மற்றவர்கள் மனம் கோணாமல் பேசுபவர் என்று கூறுகின்றார்கள் . இந்த மருத்துவ சேவையையும் ஒரு தொண்டாக செய்துவந்ததாக கூறுகின்றார்கள் .அதாவது தொங்கல் நோய் என்பது கண்டு பிடித்து விட்டால் அதற்கான வைத்திய முறை இவர்கள் கை பக்குவதாலேயே அனேகமாக குணம் அடைந்து விடும் என்று கூறுகின்றார்கள் .கண்டு பிடிக்கும் வரை நோய்வாய்ப்பட்ட குழந்தை அல்லது சிறுவன் சிறுமி படும் வேதனை சொல்லில் வர்ணிக்கமுடியாது என்றே கூறுகின்றார்கள் .சில நாட்கள் தொடர்சியாக ஏற்படும் வயிற்று நோவுடனான வயிற்றோட்டம் ஏற்பட்டால் இந்த நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகின்றது .தொடர்ந்தும் நிற்காமல் பிள்ளைக்கு வருத்தமாக இருந்தால் பெற்றவர் இவரை நாடுவார்கள் .இவர் அந்த பிள்ளையின் அடி வயிற்றில் வீபூதியை பூசி ஒருவித எண்ணையையும் தேய்த்து உருவி உருவி பார்த்துவிட்டு பிள்ளைக்கு தொங்கல் ஏற்பட்டு உள்ளது .அதாவது உண்ட உணவில் உள்ள தும்பு தன்மை உடைய பொருள் அல்லது நார்த்தன்மை உடைய பொருள் அடிவயிற்றில் அகப்பட்டு உள்ளது .காலை மாலை என 3 முறை தன்னிடம் வந்தால் சரியாகி விடும் என்று கூறுவார் .அவ்வாறே மூன்று முறையும் வீபூதி போட்டு உருவி விட பிள்ளையின் நோய் குணமாகி விடும் .இந்த நோய்க்கு ஆங்கில வைத்தியம் அன்று பெரிதும் வெற்றி அளித்ததாக இல்லை .

பண்டாரப்பாவுக்கு பிற்பட்ட காலத்தில் பண்டாரப்பாவின் வாரிசுகள் அந்த கலையை கற்று வைத்தியம் செய்துவந்ததாக அறியமுடியவில்லை .ஆனால் இந்த வைத்தியமுறையை பழகி இந்த தொங்கல் நோயை கண்டு பிடித்து பிற்காலங்களில் வைத்தியம் செய்து வந்தவர் கனகன் .இவரும் வீபூதியை கொண்டே இந்த நோயை கண்டு பிடித்து வைத்தியம் செய்தார் .இவரது இயற் பெயரும் தெரியாது .இவர் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஒரு இனிய மனிதர் .இவர் இந்த சேவையை பல காலமாக செய்து வருகின்றார் .சில கலைகள் ,பாரம்பரிய வைத்திய முறைகள் கூட கைபக்குவ முறையிலேயே கற்பிக்கப்பட்டு வருவதால் அவர்களாக கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் நிலைக்குமே ஒழிய எழுத்துவடிவில் புதிதாக வருபவர்கள் வாசித்து செய்வது என்பது இலகுவான விடயம் அல்ல .

அடுத்து செங்கமாரி ,மங்கமாரி ,என்று சொல்லப்படுகின்ற ஒரு கடுமையான காய்ச்சலோடு கூடிய நோயை கண்டுபிடித்து அந்த நோய்க்கு ,வைத்தியம் செய்தவர் மாதி என்ற பெயர் கொண்ட ஒரு வயோதிப தாய் .இவர் நோய்களை கண்டு பிடித்து நோயாளர் வீடுகளுக்கும் சென்று தான் அறிந்த மூலிகைகளை கொண்டு அவர்கள் நோய்களை குணப்படுத்தியதாக அறியப்படுகின்றது .இன்னொரு முக்கியமான விடயம் இவரை பற்றி குறிப்பிடவேண்டும் நயினாதீவில் வைத்தியசாலை உருவாகுவதற்கு முன்னம் அங்கு பிறந்த பல குழந்தைகள் பிறப்பதற்கு உதவியாக மகபேற்று நிபுணராக இருந்து குழந்தைகளை பெறுவித்து .தாய்மாரையும் குழந்தைகளையும் பராமரித்தவர் இந்த மாதி என்ற பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு உதவியாளராக வள்ளி என்று இன்னொரு இவர் உறவுக்கார பெண்ணும் உதவியதாக கருதப்படுகின்றது .இவர்கள் வம்சத்தினர் தேவார திருமுறைகளை ஓதுவதிலும் வீபூதியை நெற்றியில் மூன்று குறியாக பூசுவதிலும் சமய நல் ஒழுக்கங்களிலும் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

அடுத்து எதிர்பாராமல் ஏற்படும் சுளுக்கு. இது பொதுவாக விளையாட்டுகளின் போதும், எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துக்களின் போதும் அனேகமாக ஏற்படும் .இந்த சுளுக்கு ஏற்பட்டவுடன் அதனை சரியாக கண்டு பிடித்து அதற்கேற்ப வைத்தியம் செய்யாவிட்டால் பாதிக்கபட்டவருக்கு பின்விளைவுகளும் வலியும் மிகவும் அதிகமாக இருக்கும் .

இந்த சுளுக்கு என்ற வலியோடு கூடி உடல் உபாதையை கண்டு பிடித்து அதற்கு வைத்தியம் செய்ததாக அறியப்படுபவர்களில் ஒருவர் ஐயாகுட்டி .அநேகமாக நாள்தோறும் மாலையில் இவர் வீட்டில் ஒருவராவது உளுக்கு பார்க்க வந்து இருப்பார்கள் என்று கூறும் அளவுக்கு இவரது கைப்பக்குவம் ஊரில் பிரசித்தி பெற்று இருந்ததாம் .சிலர் நினைக்கலாம் உளுக்கு என்பது சும்மா கையால் நோவு பட்ட இடத்தை போட்டு உருவி எடுத்து விடுவது தானே என்று. உண்மையில் அப்படி இல்லை கைப்பக்குவம் கொண்டு எவ்வாறு செய்யவேண்டும் என்று அந்த கலையை நன்கு உணர்ந்த ஒருவரால் தான் அந்த இடத்தை  சரியாக கண்டு பிடித்து வைத்தியம் செய்யமுடியும் .தெரியாத ஒருவர் கைவைத்தால் தவறான இடத்தில உருவி விட்டால் ஏற்பட்ட சுளுக்கைவிட/ வலியை விட வலி அதிகரிக்கும் என்று அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றார்கள் .

உளுக்கு பார்பவர்களில் கைதேர்ந்த இன்னொருவர் கணபதிப்பிள்ளை தில்லைவனம் .இவர் நயினாதீவு தெற்கு பகுதியில் விழுந்து முறிந்து நெளிந்து வளைந்தவர்கள் பலரை தனது பக்குவ கைகளால் உளுக்கு பார்த்து நிமிர்த்தியவர் .கால் நிலத்தில் வைக்க முடியாமல் பெற்றவர்கள் ,சொந்தங்கள் தூக்கி கொண்டு இவர் வீட்டுக்கு வருபவர்கள் போகும் பொழுது கால் ஊன்றி நடந்து போவதையும் சில நாட்களில் ஓடி போவதையும் பலர் பார்த்து இருக்கின்றார்கள் .இவர்கள் நல் எண்ணையையும் ஏனைய எண்ணை வகைகளையும் கொண்டே உளுக்கு பார்க்கும் சேவையை செய்தார்கள் .

இங்கு முக்கியமாக ஒரு விடயத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் இவர்கள் அனைவரும் இந்த வைத்தியங்களை ஒரு சேவையாகவே செய்து வந்தார்கள்.நோயாளர்களிடமிருந்தோஅல்லது அவர்கள் குடும்பங்களிடமோ எதையும் எதிர்பார்பதில்லை . இதற்குரிய எண்ணைகள், பாவனை மூலிகைகள், வீபூதி என்பனவற்றை தாமே தயாரித்து தமது செலவிலேயே மற்றவர்களுக்கு வைத்தியம் செய்தும் இருக்கின்றார்கள் .இவ்வாறான மகத்தான சேவையாளர்கள் இன்று உலகில் அருகிவிட்டார்கள் என்பது வருத்தத்திற்குரியது.

எமுத்துருவாக்கம்: சிவமேனகை