கடவுளுக்கானதல்ல.. இதுவே கடவுள்.
பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர்.
பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.
உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.
ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் பெருகிவிடாத மரம். சராசரியாக 35 மீட்டர் உயரம்வரை வளரும், இந்த மரத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும். நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம். நம் நாட்டைத் தவிர்த்த பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.
அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.
இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
இந்த பூவை கையில் வைத்துக்கொண்டு லிங்க பகுதியை உற்று நோக்க நோக்க நம்மை தியானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் மிக மிக விசேஷமான மலர் இதையே கடவுளாக வணங்கலாம் .
இருபத்தோரு மாத்ருகா ரிஷிகள் தன்னுடைய தவ ஆற்றலைக் இந்த நாகலிங்க பூவிற்கு கொடுத்ததாக ஐதீகம். எனவே பூவை வைத்து பூஜை செய்து முடித்த பின்னர் 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அதை சூட்சும வடிவில் 21 மாத்ருகா ரிஷிகள் பெற்று செல்வதாக சிவ புராணம் கூறுகிறது.