புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும்.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூக்கொண்டும், பாக்கொண்டும் வழிபட்டால் பிரச்சினைகள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் பெருகிக்கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
சிவனுக்கு உகந்தது “சிவராத்திரி”. அதேபோல அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் “நவராத்திரி”யாகும். “நவம்” என்றால் “ஒன்பது” என்று பொருள். “ராத்திரி” என்றால் “இரவு” என்று பொருள்.
ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த திருநாள் தான் புரட்டாசி மாதம் 5-ம் நாள் 21.9.2017 அன்று நவராத்திரி விழா ஆரம்பமாகிறது [இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் இன்று 20 ஆம்திகதி புதன்கிழமை என்றும் திருக்கணித பஞ்சாங்கம் நாளை 21 ஆம் திகதி வியாழக்கிழமை என இரு வேறு தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது].
அன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 28.9.2017 அன்று துர்க்காஷ்டமி, 29.9.2017 அன்று சரஸ்வதி பூஜை, 30.9.2017 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப் பெறும்.
வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொழுமண்டபத்தை அமைத்து அங்கு பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
சந்திர குப்பத்தை தனியாக வைக்காமல் சக்தி கும்பத்தை மண்குடத்தில் வைத்து சுற்றிவர மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்பவளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக் கொலு அலங்கரிக்கப்படுகிறது.
5, 7 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை.
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர்.
புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.
நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.
விஜய தசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்த பின்நாட்படிப்பு நாட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வது முறையாகும்.
கொலு :
நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது.
இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
ராமர் இருந்த விரதம் :
சீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது ராமரை சந்தித்து, இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம், அதனை அடைய பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்கிறார்.
நாரதரின் வழிகாட்டுதலின் படி மிகவும் சிரத்தையுடன் விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ‘ தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள்.
ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்றுரைத்தார்.
நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள்:
இந்த விரதத்தை திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.
நவாராத்திரி கோலம்:
நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. கண்டிப்பாக அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும்.
சுண்ணாம்பு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்தும் போடலாம்.
விஜய தசமி :
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாள் வெற்றித் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய அரக்கர்களை பராசக்தி அழித்த நாள்.
ராவணனை ராமர் வென்ற நாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்களின் ஆயுதங்களையும் துர்க்கையையும் வழிபட்ட நாள்.
விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே ‘விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது.
நவராத்திரி பூஜையின்போது சொல்லப்படும் நவராத்திரி நாமாவளி!
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
1. துர்க்கா தேவி
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
2. லட்சுமி ஸ்ரீதேவி
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
3. சரஸ்வதி தேவி
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்:
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.