வித்துவான் சி. குமாரசாமி அவர்களால் பாடப்பெற்றது.

போற்றி என்று அனுதினமும்
புரிந்து நால்வே தமுந்துதிக்கத்
தோற்று முலகத் துயிரனைத்தும்
துன்ப மகன்று நிறைவு பெற
ஏற்று நயினை அமர்ந்தருளி
இலங்கு நாக பூசணியே
சாற்று மடியார்க் கேதுதுயர்
தாயே சிறிது நீ நினைந்தால்

அன்னையாகி யெவ்வுயிர்க்கும்
அருளு முணவும் படைத்தளித்துச்
சொன்ன அன்னபூரணியாய்த்
துலங்கு நயினை தனிலமர்வாய்
இன்னங் குறைக ளேமக்குண்டோ
ஏதிங் கவலம் எங்களுக்கு
உன்ன வுன்ன உளமினிக்கும்
உமையே சிறிது நீ நினைந்தால்

நினைந்தால் நீயுன் திருவடியை
நினைந்து நினைந்து உருகுதற்கும்
புனைந்து புனைந்து ஏத்துதற்கும்
புகழ்ந்து புகழ்ந்து பாடுதற்கும்
நனைந்து நனைந்துன் திருவருளில்
நாயேன் என்றும் திளைப்பதற்கும்
வனைந்து வனைந்துன் திருத்தொண்டில்
வாழ அடியேற் கருள் காட்டாய்.

கண்ணொளி இழந்தோர் மற்றும்
கர்ம நோய் உற்றார் வாழ்வில்
புண்ணுளப் பட்டோர் நொந்தே
புலம்பிடப் புணர்வாழ் வீயும்
திண்மையும் திருத்த லத்தின்
செம்மையும் தேரும் கால
வண்மையும் வளமும் வாய்ந்த
மணி திகழ் நாகம் மாளே.

அம்மா உனையான் அடைவதெப்போ ஆதரவு
இம்மா நிலத்தினிலே ஏதம்மா – அம்மாநின்
சீரடியைச் சேவிக்கச் சித்தத் சிறப்புற்றேன்
காரணியே கண்ணே கனி.

Download [ PDF ]