சீர் பூத்த நயினைநகர் நடுவூள் மேவிச்
சிறந்த அருள்மொழி காளியம்மன் பேரில்
பேர் பூத்த திருவூசற் – பதிகம் பாடப்
பேழை வயிருடனிலங்கு கருணை வள்ளல்
பார்பூத்த பாரதத்தை மேரு வெற்பிற்
பறித்த மருப்பாணி கொடு பொறித்த நாதன்
கார்பூத்த கருணைமதம் பெருகு முக்கட்
கணபதியின் கமல பதம் கருத்துள் வைப்பாம்.

செம்பவளம் கொடு சிறந்த கல்களாக்கித்
திகழ் வயிரத்தாற் சட்டம் செறிய நாட்டி
அம்பொன்னினாற் பொலிந்த கயிறு பூட்டி
ஆடகப்பூண் மரகத்தாற் பலகை சேர்த்து
உம்பரெலாம் பணிந்து பதம் உச்சியேந்தும்
உனது புகழ் பாடியாம் ஆடல் காண
நம்பு மெமதுளங் களிப்ப நயினைமேவும்
நாயகியே காளியே ஆடீரூஞ்சல்

திருமகளும் கலைமகளும் வடந்தொட்டாட்டத்
திகழும் அரமாகளிர் சூழ்ந்திசையே கூட்டப்
பெருகு மன்பினொடு வள்ளி தேவயானை
பேணியே மலர்கொணர்ந்து திருமுன் வைக்க
உருகுமுளம் களிசிறப்ப உம்பர் கோனும்
உயர்மாலும் அயனுமுறு தேவர் தானும்
அமர் நினை மாகாளி ஆடீரூஞ்சல்

முழவிசைத்துக் கணநாதர் நந்தியாட
மூவுலகும் நாரதரின் இசையே நீட
அளவிறந்த அடியவர்கள் ஆர்த்து ஆட
அணி நயினை நகரிளுளார் பவமே வீட
எழவரு மிவ்வின்னிசையில் அயனும் மாலும்
ஏகமுமாய் எங்கணுமாய் ஆட ஆட
அழகர் சிவனொடு நிருத்தம் ஆடுங்காளி
அம்மை மகாதேவியே ஆடீரூஞ்சல்.

நாட்டிலுள்ள சராசரங்கள் ஆட்டுந்தெய்வ
நாயகியே இன்றுன்னை நாங்கள் ஊஞ்சல்
ஆட்டுதற்கு எமையாட்டும் அற்புதத்தை
ஆரறிவார் உயிர்க்குயிராம் அன்னை எம்மை
மீட்டுலகிற் பிறப்பிக்கும் வினை சேர்ந்தாலும்
மீளாது உணதூஞ்சற் காட்சிதன்னை
காட்டுதற்கு அருள் செய்வாய் உலகமெல்லாம்
காத்தளிக்கும் மாகாளி யாடீரூஞ்சல்.

மாதமொரு மும்மாரி பெய்து வாழி
மறையோர்கள் வேல்விதவம் மலிந்து வாழி
ஒது முலகுயர் நீதி செழித்து வாழி
உம்பருலகென வளமே ஓங்கிவாழி
ஆதிபரை தேவி யருள் வெள்ளம் வாழி
அதற்றிளைக்கும் அடியர் துயர் அகன்று வாழி
சோதிமுகம் பொலிகருணை வாழி வாழி
சுடர் வடிவாம் காளியம்மை வாழி வாழி.

ஆக்கியவர்: வித்துவான் சி. குமாரசாமி