சர்வ மத சன்னிதியாய் திகழும் நயினாதீவில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள் .இவர்கள் இந்த தீவுக்கு எப்பொழுது முதன் முதலில் வந்தார்கள் என்ற காலத்தை சரியாக கணிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் ,காலத்துக்கு காலம் முஸ்லீம்களின் வருகை என்பது ஈழ நாட்டில் இருந்து இருக்கிறது .ஈழத்தில் புராதன துறைமுகங்களில் ஒன்றாக நயினாதீவு துறை முகம் விளங்கியதால் ,நாகர்களின் கதிரை மலை அரசு சிறப்பு பெற்று இருந்த கி மு 3 , 4 ம் நூற்றாண்டு காலத்தில் அரபு நாட்டில் இருந்து கதிரை மலை(இன்றைய கந்தரோடை ) அரசர்கள் நாக வளைவாணன் ,ஈழ சேனன் தங்கள் தேவைகளுக்காக அரபு நாடுகளில் இருந்து குதிரை வருவிக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் இருக்கிறது .அதற்கு பின்னர் எல்லாளன் காலத்திலும் அரேபிய முஸ்லீம்கலோடான குதிரை வர்த்தக தொடர்புகள் நயினாதீவு துறைமுகம் ஊடாக இருந்ததாக கருதப்படுகின்றது .ஆனால் அந்த காலங்களில் வர்த்தகர்களாக வருபவர்கள் தங்கள் வியாபாரம் முடிந்ததும் நாடு திரும்பி விடுவார்கள் .இவர்கள் யாரும் இங்கு தங்கியதாக எந்த சான்றுகளும் இல்லை.இதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் அதாவது கி பி 10 நூற்றாண்டு அளவில் ஈழத்தை சோழர் ஆண்ட சோழர்காலத்திலும் இந்த அரேபியரோடான குதிரை வர்த்தகம் தொடர்ந்ததாக சோழர்க்கால வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன.
பிற்காலத்தில் தென்னிந்திய இராமநாத புரம் சேதுபதிகள் இராமேஸ்வரத்துக்கு கீழே உள்ள 8 தீவுகள் சார்ந்ததும் மற்றும் ஈழத்தின் பகுதி கிராமங்களை சேர்த்தும் 69 கிராமங்களிலும் முத்து குளிப்பதற்கும் மீன் பிடி தொழிலை மேம்படுத்துவதற்கும் வந்து தங்கி தொழில் செய்து விட்டு திரும்பி செல்வதாகவும் தென்னிந்திய குறிப்புக்கள் கூறுகின்றன. .இவ்வாறு வந்தவர்களில் முஸ்லீம்களும் இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது .ஆனால் அவர்கள் இந்த தீவுகளில் நிரந்தரமாக தங்கியதாக வரலாறுகளில் குறிப்பிடப்படவில்லை.பின்னர் ஒல்லாந்தர் ஆளுகைக்கு ஈழத்தின் வடபகுதியும், தீவுகளும் ,தென்னிந்தியாவும் உட்பட்டு இருந்த காலத்தில் அவர்களும் முத்து குளித்தலையும் கடல் பயன்பொருள்கள் வாணிபத்தையும்,கடல் வழி கப்பல் வாணிபத்தையும் மேற்கொண்டார்கள் என்றும் அந்த காலத்திலும் தென்னிந்தியர்களை அழைத்து வந்தார்கள் என்றும் அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் கீழக்கரையில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் முஸ்லீம்களையும் அழைத்து வந்தார்கள் என்றும் குறிப்புக்கள் சான்று பகர்கின்றன .இவ்வாறு ஒல்லாந்தர் கால இறுதிக்காலத்தில் வந்தவர்கள் மன்னார் பகுதியிலும் ,வேலணை பகுதியிலும் நயினாதீவிலும் யாழின் ஏனைய சில பகுதிகளிலும் சிலர் தங்கி இருக்கலாம் .பின்வந்த ஆங்கிலேயரும் கடல் திரவியங்களை சுரண்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள் அவர்களும் தொடர்சியாக இந்தியாவில் இருந்து தொழிலார்களை அழைத்து வந்தார்கள் .அவ்வாறு வந்தவர்களிலும் முஸ்லீம்கள் இருந்து இருக்கலாம். அவர்களும் இங்கு தங்கி இருந்து தங்கள் தொழிலை பிற்காலத்தில் மேம்படுத்தி இருக்கலாம் .
இவற்றை எல்லாம் வைத்து கணித்து பார்க்கும் பொழுது நயினாதீவில் முஸ்லீம்கள் ஒல்லாந்தர் கால இறுதி பகுதியிலும் ஆங்கிலேயர் கால ஆரம்ப பகுதியிலும் ஒரு சில குடும்பங்களாக வந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .இவர்களின் வம்சங்களே வளர்ந்து இன்று ஊரில் வாழும் முஸ்லீங்கள் என்ற முடிவுக்கு வரலாம் .பிற்காலத்தில் இவர்கள் மன்னார் நாச்சிகுடாவில் வாழ்ந்த தமது உறவுகளோடு திருமண தொடர்புகளை பேணி அவர்களும் சில குடும்பங்களாக இங்கும் இவர்களில் சில குடும்பங்கள் அங்கும் சென்று குடியேறினார்கள் .
சித்தர் ஒருவர் கூறியதாக செவி வழி கதையில் கூறப்படும் கருத்தின் படி நயினாதீவு வெள்ள மண் என்ற இடத்தில் 2 இறந்த முஸ்லீம்களின் உடல் தகனம் செய்யப்பட்டு சிறு சமாதி இருப்பதாக அவர் ஞான சக்திக்கு அவை தெரிந்ததாக அவர் கருத்து கூறியதாக கூறுகின்றார்கள் . இது எழுதப்படாத ஒரு கருத்தாக இருந்தாலும் ,எம் ஊர் பெரியவர்கள் உறுதிபடுத்துவார்கள் என்ற பார்வையில் இந்த தகவலை அவர்கள் மீளாய்வுக்கு விட்டு விடுகின்றேன் .
பிற்காலத்தில் இங்கு வாழ்ந்த முஸ்லீம்கள் தங்கள் மத தொழுகைக்காகவும் தங்கள் ஏனைய மத கிரியைகளுக்காகவும் 1915 ஆண்டளவில் இன்றைய பள்ளிவாசல் இருக்கும் இடத்துக்கு அண்மையில் ஒரு சிறு பள்ளிவாசலை அமைத்ததாகவும்,1919 ம் ஆண்டில் இன்று இருக்கும் பள்ளிவாசலை சிறப்பாக அமைத்ததாகவும் ,1923 ம் ஆண்டில் உம்மா பள்ளிவாசல் என்றும் சிறு கட்டிடம் அருகில் அமைத்ததாக அறியப்படுகின்றது .இங்கு அவர்கள் தங்கள் தொழுகைகள் நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றார்கள் .
இங்கு வாழ்ந்த முஸ்லீம்கள் இங்குவாழும் பெரும்பான்மை சைவ மக்களோடு சுமூகமான முறையில் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்துவருகின்றார்கள் .ஒருவருக்கு ஒருவர் உதவுவதிலும் துன்ப இன்பங்களில் கலந்து கொள்வதிலும் ,கலை விழாக்கள் விளையாட்டு போட்டிகள் என சகல வழிகளிலும் தங்கள் பங்கையும் வழங்கி தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தி ஊரின் பெருமையை வளர்த்து வருகின்றார்கள் .ஊரின் மாணவர்களின் கல்வி வளர்சியிலும் குறிப்பாக முஸ்லீம் மாணவர்களின் சமயபாட கல்வி வளர்சியிலும் .ஊரிலேயே கல்வி பெற்று தகமை பெற்று நியமிக்கபட்ட முஸ்லீம் ஆசிரியர்களும் காலத்துக்கு காலம் சேவை ஆற்றி இருக்கின்றார்கள். இன்றும் சேவை ஆற்றி வருகின்றார்கள் .
இந்திய இராணுவம் ஈழத்தில் கோரத்தாண்டவம் ஆடிய காலத்தில் உணவு கஷ்டத்தின் பொழுது நயினாதீவில் அனேகமாக சகல கடைகளிலும் உணவு பொருட்கள் தீர்ந்த நிலையில் மக்கள் பசியால் வாடிய நேரத்தில் தனது கஷ்டத்தையும் நஷ்டத்தையும் உயிர் ஆபத்தையும் பார்க்காமல் கடலில் படகு எடுத்து சென்று பொருள் பெற்றுவந்து பங்கீட்டு அடிப்படையில் வழங்கி ஊர் உறவுகளின் உணவு கஸ்ரத்தை போக்கியவர்களில் ஒருவர் தாகீர் அவர் தற்பொழுது ஊரைவிட்டு பிள்ளைகளின் வளர்சிக்காக இடம்பெயர்ந்து சென்றுவிட்டார் என்றாலும் இன்று எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை எங்கிருந்தாலும் நலமாக வாழவேண்டும் ,,,இவ்வாறாக ஊர் மக்கள் வாழ்விலும் சாவிலும் ஒன்றிணைந்து வாழ்ந்த இந்த முஸ்லீம் மக்கள் வாழ்விலும் ஒரு கசப்பான காலம் 1990 களில் வந்தது ,ஆனால் ஊர் பெரியவர்கள் அவர்கள் ஊரைவிட்டு போவதற்கு அனுமதிக்கவில்லை .அந்த நாட்களிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறி தொடர்ந்தும் அவர்களை நயினை மக்களாக அங்கு வாழ உறுதுணையாய் நின்றார்கள் .அதனால் இன்றும் அவர்கள் தங்கள் சிறப்பான வாழ்வை இந்த தீவில் வாழ்ந்து வருகின்றார்கள் .
எமுத்துருவாக்கம் :சிவமேனகை