நமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா? நம்முடைய வேண்டுதலுக்கு நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் செய்வதால் நமது வேண்டுதல் நிறைவேறிவிடாது.
அம்மன் உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருக்கிறேன், எனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது, அதனால் நீங்கள் செல்லும்போது இந்த நூறு ரூபாயை உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று மற்றவர்களிடம் கொடுத்த அனுப்புவது கூடாது. அவ்வாறு கொடுத்தனுப்பினால் வேண்டிக் கொண்டவர்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டதாகக் கருத முடியாது. நாம் அனுப்பும் நூறு ரூபாயை இறைவன் எதிர்பார்ப்பதில்லை.
நம்முடைய சிரத்தையையும், உண்மையான பக்தியையும்தான் எதிர்பார்க்கிறார். நாம் நேரில் சென்று இறைவனை தரிசித்து அவனது அருட்கொடைக்கு நன்றி கூறி அதன் பின்பு அந்த உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதால் மட்டுமே நம்முடைய வேண்டுதல் என்பது முழுமையாக நிறைவேறும். ஆக, நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்வது என்பது கூடாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.