நமது ஆலயங்களில் ஆமையின் வடிவம் ஏன்? – ஆமை நமக்கு புகட்டும் பாடம் என்ன ?

நாம் ஆலயங்களுக்கு வழிபாட்டுக்குச் செல்லும்போது ,நம் கண்களில் ஆமையின் சிற்பங்கள் கட்டாயம் படும் .

திருக்கோயில்களில் ஆமையின் சிற்பங்கள் நந்திதேவரின் முன்போ அல்லது பின்போ அமைக்கப்பட்டிருப்பதையும் தனியாக அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம் .

சில ஆலயங்களில் ஆமை மண்டபங்கள் உள்ளன.சில ஆலயங்களில் விளக்குத் தூண்களின் [கருடகம்பம் என்றும் சில இடங்களில் கூறுவார் ] அடிப்பாகம் ஆமைவடிவின் மேல் அமைந்திருக்கும் .

அவ்வளவு ஏன் ? மகாமேருவும் பூசனைக்குரிய பொருட்களும் ஆமையினை ஆதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம் .

ஆமை வடிவத்தினை அடிப் பீடமாகக் கொண்ட ஆலயங்களும் ஆமைவடிவ ஆலயங்களும் நம் நாட்டில் உள்ளன .

சரி ,ஆமைக்கு ஆலயத்தில் அவ்வளவு இன்றியமையாதத் தன்மை ஏன்? முகநூலில் இப்பொருள் பற்றி பலவாறு செய்திகள் உலவுகின்றன .
அடியேனுக்குக் கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இயன்றவரை கூற முயல்கின்றேன் .

இந்த பிரபஞ்சத்தில் எண்பத்துநான்கு இலட்சம் ஜீவ ராசிகள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன .

” ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் – சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.”

இதில் மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை , ஞானிகளிடம் ‘பச்சக்கென்று’ ஒட்டிக்கொண்டதெப்படி..?

பாற்கடலைக் கடையும்போது மேருமலைக்கு அடி ஆதாரமாக இருந்த ஆமை பற்றியும், தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதார ஆமை பற்றியும் , வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்கி, உணர வேண்டியதிருக்கிறது.
ஆமைகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வா ழக்கூடிய உயிரினம் எனச் சொல்லப்படுவதுண்டு.. கோவில்களில் காணப்படும் ஆமை உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உருவங்களின் மூலமாக மனிதனுக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது .

” ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து”
(திருக்குறள்- ௧௨௬ (126)

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

இந்த ஆமை உதாரணத்தை பகவத்கீதை ௨ – ௫௮ (2-58), மனு ஸ்மிருதி ௭ – ௧௦௫ (VII-105), திவ்வியப் பிரபந்தம் ௨௬௬௦ (2360), திருமந்திரம் ௨௨௬௪ , ௨௩௦௪ (2264, 2304), மகாபாரதம் ஆகிய எல்லா நூல்களும் கூறுகின்றன.

அதாவது இமயம் முதல் குமரி வரை இந்த உண்மை தெரிந்திருந்தது.

” யதா சம்ஹரதே சாயம் கூர் மோங்கானிவ ஸர்வச:
இந்த்ரியாணி இந்த்ரியார்த் தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டித ”
கீதை ௨ – ௫௮ (2-58)

”ஆமையானது தன் அங்கங்களை ஓட்டினுள் இழுத்துக் கொள்வது போல எப்போது இந்த யோகி புலன்களை, எல்லா இந்திரிய விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கின்றானோ அப்போது அவனுடய ஞானம் உறுதியாக நிலை பெற்றதாகும்.”

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் .

”ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ”.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று குதம்பை சித்தர் கூறுகிறார்.

ஆமையானது எவ்வாறு தனது ஐம்புலன்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறதோ , அதுபோல பக்தன் , திருக்கோயிலில் தனது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு புற நிகழ்வுகள் தன் மனத்தைத் தாக்காதவண்ணம் வைராக்கியாக இருந்து , இறைவன் மேல் முழு சிந்தனையைக் கொள்ள வேண்டும் என்பதே ஆமை நமக்குத் புகட்டும் பாடமாகும் .

அதுமட்டும் அல்லாது ஆமையின் விசித்திரமான நடத்தை என்னவென்றால் , முட்டைகளை இட்டுவிட்டு கடலுள் சென்று விடும் .ஆனால் சிந்தனை முழுதும் அம்முட்டைகளின் மீதே இருக்கும் . அது போல , ஆன்ம சாதக னொருவன் ,திருக்கோயிலை விட்டு புறத்தே சென்று விட்டாலும் ,தான் கண்டு இன்புற்ற பரம்பொருளின் நினைப்பிலேயே இருக்கவேண்டும் என்பதும் ஆமை நமக்குக் கற்றுத்தரும் பாடம்