இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.

மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.

பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன.

கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும்.

சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,

“ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீடம் பாசமாகவும் கொள்ள வேண்டும்.




பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும்.

ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது. இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம். அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது.

இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன. அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.

பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும்,அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது. கும்பம் அண்டத்தையும்,அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் இறைவனையும் குறிப்பிடுகிறது.

அதையடுத்து நாகதீபம்,மயூரதீபம்,குக்குட தீபம்,ரிஷப தீபம்,கஜதீபம்,புருஷாமிருக தீபம்,புருஷ தீபம்,அஸ்திர தீபம் ஆகியவை காட்டப்படுகின்றன. இவை மூலம் முதலில் ஊர்வன,அடுத்து பறப்பன,அடுத்து மனிதனும் விலங்குமாகிய புருஷாமிருகம்,அடுத்து மனிதன்,இந்த வளர்ச்சிக்குப் பிறகு வாழ்வதற்கான ஆயுதம் ஆகியனவும் விஞ்ஞான முறையில் காட்டப்பட்டு வருகின்றன. இவை உருவத்தால் வேறுபட்டிருப்பினும் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு இயங்குவன என்னும் பொருள்பட அவற்றின்மீது பிரபையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.

இவ்வாறு ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றிய ஜீவன் பல நிலைகளைக் கடந்து அறிவால் இறைவனை  அறிந்து கொள்கிறது. இந்த ஆன்மா ஒரே ஆரத்தியாகக் காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அதன்மீது விபூதி தெளிக்கப்படுகிறது.

அடுத்து ஏழு கிளைகளையுடைய கர்ப்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. விபூதிகள் கைவரப்பெற்று உயிர் பத்துவித குணங்களைக் கொள்கிறது. குணங்கள் கூடிக்கொண்டு வருவதை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது,பத்து,பதினொன்று என்று வரிசையாக தீபங்களாகக் காட்டப்படுகின்றன.

பக்குவம் அடைந்த ஜீவன் இறைவனின் சாரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எனவே எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப்படுகிறது. கிழக்குத் திசையான இந்திரன் திசையிலிருந்து குடையும், தென்கிழக்கான அக்னி திக்கில் இருந்து அடுக்கு தீபமும்,தெற்கு திசையாகிய யம திக்கில் இருந்து சுவஸ்திகமும்,தென்மேற்கு திசையாகிய நிருதி திக்கில் இருந்து சாமரமும்,மேற்கு திசையான வருண திக்கில் இருந்து பூரண கும்பமும்,வடமேற்கு திசையான வாயு திக்கில் இருந்து விசிறியும்,வடக்கு திசையான குபேர திக்கில் இருந்து ஆலவட்டமும்,வடகிழக்கு ஈசான்ய திக்கில் இருந்து கொடியும் கொண்டு வரப்பட்டதாகக் கருதி அவை காட்டப்படுகின்றன.

“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;

விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!

என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம்

2. தத்புருடம்

3. அகோரம்

4. வாமதேவம்

5. சத்யோசாதம்

என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.




தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.

தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட
சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார்.

ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ?
ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை நாத! 
நீ நீக்க ஒரு ஞானவிளக்கு இல்லையோ?” (தாயுமானவர்).;

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.