விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள். பகவத்கீதையின் 10-வது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி யோகம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது.
விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.
விபூதி அணியும் முறை
விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன. விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ளவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும். சம்புடத்தில் இருந்து விபூதியை எடுக்கும்போது, ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் விபூதியை தரிக்கும்போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்கவேண்டும். விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும்.
விபூதி தரிக்கவேண்டிய நேரங்கள்:
காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன…!
அவை
1.தலை நடுவில் (உச்சி)
2.நெற்றி
3.மார்பு
4.தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5.இடது தோள்
6.வலது தோள்
7.இடது கையின் நடுவில்
8.வலது கையின் நடுவில்
9.இடது மணிக்கட்டு
10.வலது மணிக்கட்டு
11.இடது இடுப்பு
12.வலது இடுப்பு
13.இடது கால் நடுவில்
14.வலது கால் நடுவில்
15.முதுகுக்குக் கீழ்
16.கழுத்து முழுவதும்
17.வலது காதில் ஒரு பொட்டு
18.இடது காதில் ஒரு பொட்டு
#பலன்கள் :
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும்.
இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்…!!!
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.