புராணங்களின்படி ‘ஆதித்தியன்’ எனப்படும் சூரியர்கள் பன்னிரண்டு பேர்கள் ஆவர். சூரியனைச் சிவபெருமானின் வடிவமாகவே கூறுவது சைவநன்மரபாகும். சிவபெருமானின் ‘எட்டு வடிவங்களில்’ ஒன்றாகச் சூரியன் விளங்குகிறான். சைவர்கள் சூரிய வழிபாட்டைச் சிறப்புடன் போற்றுகின்றனர். சிவபூஜையின் ஒரு அங்கமாகச் சூரிய வழிபாடு விரிவுடன் செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அமைந்துள்ள அஷ்ட பரிவாரங்களில் ஒருவனாகச் சூரியன் திகழ்கின்றான். சிவபெருமானின் வடிவமான உருத்திரர் சூரிய மண்டலத்தில் இருந்தவாறு உலக உயிர்களுக்கு ஒளியையும் உயிர்ச்சத்தையும் அளிக்கின்றார் என்பர்.

ஆதலால் சூரியனைச் சிவசூரியனாகக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர். இந்த கட்டுரையில் சூரியனைச் சிவபெருமானாகக் கூறும் வேத, ஆகம புராணப் பகுதிகளையும் காணலாம். மேலும், சிவனருளால் அவருடைய அம்சமாகவே தோன்றிய சூரியர்கள், அவர்கள் சிவவழிபாடு செய்து பேறுபெற்றத்  திருத்தலங்கள், சூரியனின் ஒளிக் கதிர்கள் படர்ந்து சிவவழிபாடு செய்யும் திருத்தலங்கள் ஆகியவற்றை விரிவாகக் காணலாம். சூரியனைப் பற்றிய பல்வேறு செய்திகள் புராணங்களில் பரவலாகக் கிடைக்கின்றன.

சிவாலயங்களில் சூரியன் சந்நதி

சிவாலயங்களில் சிவசூரியனுக்குத் தனியே சந்நதி அமைக்க வேண்டுமென்பதைச் சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன. ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவசூரியன் எழுந்தருள்கின்றார். பாண்டிய, சோழ நாட்டுப் பெருங்கோயில்களில் சூரியனுடன், அவனுடைய மனைவியரான உஷா, பிரத்யுஷா ஆகிய இரு தேவியரும் எழுந்தருளியுள்ளதைக் காண்கிறோம். இவ்வாறு எழுந்தருளும் சூரியன் இரண்டு கரங்களைக் கொண்டு, அவற்றில் தாமரை மலர்களை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். இருபுறம் அமையும் தேவியர் ஒருகையில் தாமரை மலர் ஏந்தியும் மறுகையைத் தொங்கவிட்டவாறும் காட்சியளிக்கின்றார்கள். சில தலங்களில் சூரியனுக்கு நான்கு கரங்களும் அமைகின்றன.

இத்தகைய திருவடிவங்களில் மேற்கரங்கள் இரண்டில் தாமரை மலர்களும் கீழ்க்கரங்களில் அபய, வரத முத்திரைகளும் அமைகின்றன. சிவாலயங்களில் காலைசந்திப் பூஜையை சூரிய பூஜையில் இருந்து தொடங்குவதே வழக்கமாகும். சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசியில் பிரவேசிக்கும் ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியிலும், இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சூரியனுக்கு அமைய வேண்டிய சந்நதியைத் தனிக் கோயிலாக விநாயகர், சண்டீசர் உள்ளிட்ட பரிவார தேவர்கள் புடை சூழ அமைக்கலாம் என்று பூஜாபத்ததி நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் அத்தகைய சந்நதிகளைத் தமிழகத்தில் பரவலாகக் காணமுடியவில்லை. பெரும்பாலான சிவாலயங்களில் பிராகாரத்தின் தென்கிழக்கில் சிறு மேடையின் மீது சூரியன் தனியாகவோ, தேவியருடனோ எழுந்தருளியிருக்கவே காண்கிறோம். சில தலங்களில் சின்னஞ்சிறு சந்நதிகளும் அமைகின்றன. இந்த சந்நதிகள் சிறு விமானத்துடன் ஒற்றைக் கவசம் கொண்டதாக அமைகின்றன. சிவாலயங்களில் சூரியனுக்கென நாட்பூஜை – மாதப் பிறப்பு பூஜையைத் தவிர தனி விழாக்களே உலாத்திருமேனிகளோ அமைக்கும் வழக்கம் இல்லை.

சிவசூரிய லிங்கம்

ஆகமங்கள் காட்டும் சிவசூரியனைக் காணலாம். சிவசூரியன் நான்கு முகமும், எட்டு தோள் களும் உடையவராய் சிவந்த ஆடைகள் அணிந்து கமலாசனத்தில் வீற்றிருக்கின்றார். இவரைச் சுற்றி கிழக்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர், தெற்கில் அகோரர், மேற்கில் சத்யோஜாதர் ஆகிய மூர்த்திகள் அமர்ந்துள்ளனர். மேலும் இவருடைய முன்புறம் பாஸ்கரனும், வலப்புறம் பானுமூர்த்தியும் பின்புறம் ஆதித்யனும், இடப்புறம் ரவியும் ஆகிய சூரியர்கள் வீற்றிருக்கின்றனர். இந்தச் சூரியர்கள் நால்வரும் நான்கு முகமும் நான்கு கரங்களும் கொண்டவர்கள். இவர்களுடன் இவர்களுடைய தேவியரான வித்தாரை, சுதாரை, போதினி, யாப்யாயனி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

இவற்றையும் அறிந்து கொள்ளலாமே!

மேலும், சூரியனின் தாமரை மலர்போன்று அமைந்துள்ள பிரபூதம் எனும் ஆசனத்தையும் அதனைத் தாங்கும் விமலம், சாரம், ஆராத்யம் பரமசுகம் எனும் நான்கு சிங்கங்களையும் காண்கிறோம். இந்தப் பீடத்தைச் சுற்றி 1. தீப்தை 2. சூட்சுமை 3. ரூஜா 4. விபூதி 5. விமலை 6. அமோகை 7. நான்கு கரத்துடன் கூடிய வித்துயுதா 8. பத்தரை ஆகிய அஷ்டசக்திகளும் நான்கு முகமுடைய சர்வதோமுகி ஆகிய பீடசக்தியும் எழுந்தருளியிருப்பர். இதனை விளக்கும் வகையில் வடநாட்டில் பல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சூரியலிங்கம் எனப்படும்.

இதன் மையப் பகுதியில் சிவசூரியன் லிங்கமாக விளங்குகின்றார். இதன் நான்குபுறங்களிலும், நான்குமுகங்களும், நான்கு தோள்களும் கொண்டவர்களான ஆதித்யன், பானு, பாஸ்கரன், ரவி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அவர்களுக்கு மேலே உச்சியில் அகோரர், வாமதேவர், சத்யோஜாதர், தத்புருஷர் ஆகியோர் சின்னஞ்சிறு விமானங்களில் எழுந்தருளியுள்ளனர். இவர்களைச் சுற்றி அஷ்டசக்தி, பீடசக்தி, கந்தவர்கள், முனிவர்கள் ஆகியோரைக் காண்கிறோம். இத்தகைய சூரியலிங்கத்தையே அருகில் உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

சூரியன் வழிபட்ட திருத்தலங்கள் 

சூரியன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற திருத்தலங்கள் அவன் பெயராலும் அவனுடைய பரிபாயப் பல்வகைப் பெயர்களாலும் அழைக்கப் படுகின்றன. இவ்வகையில் ஆதித்திய புரங்கள், பாஸ்கரபுரிகள், பருதிபுரம், சூரிய க்ஷேத்திரம் ஞாயிறு, தலைஞாயிறு என்று பல திருத்தலங்கள் விளங்குகின்றன. இவை இரண்டு வகைப்படும். இவற்றில் முதல் வகையான திருத்தலங்கள் சூரியன் தேவவடிவில் இருந்து ஆகமங்களில் கூறியபடி சிவலிங்கத்தை அமைத்து வழிபட்டு பேறுபெற்றத் திருத்தலங்களாகும். இவை மங்கலக்குடி, பருதிநியமம், திருநாகேஸ்வரம் போன்றவைகளாகும். இரண்டாவது வகையில் அமைபவை ஆண்டின் சில நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கோபுரவாயில், பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றைத் தாண்டிச் சென்று மூலவராகிய லிங்கத்தை ஜோதிமயமாக்கும் திருத்தலங்களாகும்.