அமாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பெளர்ணமிகளில் சித்ரா பெளர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன. பூமியை சுற்றி வரும் சந்திரன் அன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார். அதாவது அன்றைய தினத்தின் சந்திர ஒளி (பூரண கலை) மற்ற பெளர்ணமிகளை விட பொலிவாக இருக்கும்.

சித்திரை மாதத்தில் பெளர்ணமி அன்று சிவபெருமாள், பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரகுப்தன். சித்திரகுப்தன் எமதர்மனின்  கணக்குப் பிள்ளை. நாம் செய்யும் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமது சொர்க்க நரகத்தையும் அடுத்த பிறவியையும் முடிவு செய்பவர்.   இறைவனை வழிபடும் அதே வேளையில் சித்திரகுப்தனையும் மனதில் நினைத்து இப்பிறவியும் அடுத்த பிறவியும் நல்ல பிறவிகளாக  அமையும் படி பிரார்த்திக்க வேண்டும்.
இந்த சித்ரா பெளர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம். மேலும் சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.




அதாவது புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இந்தத் தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

மேலும் அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பெளர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். இதையொட்டி சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.




சித்திரகுப்தன் ஏன் பாவ புண்ணிய கணக்குகளை சரி பார்க்கிறார் என்பதற்கு புராணத்தில் சொல்லப்படும் கதைகளில் ஒன்று இதோ:

இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள்.

அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் “என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து, தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார். இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி, மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு ‘சித்திர குப்தன்’ என்று பெயர் வைத்தாள்.

ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார். இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும்  என்று நீங்களும், விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?. ஆனால் யார் எவ்வளவு பாவ, புண்ணியங்கள் செய்தார்கள் என்று  தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா.

உன் கேள்விகளை, “அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய் கேள், இதற்கு தீர்வு சொல்வார் “என்று சிவபெருமான் கூறினார். பிரம்மாவிடம் சென்று தன் கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா.

பிரம்மா யமதர்மரிடம், சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன்  கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.

பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த  கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.

அன்றியிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார். ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும்.




முன்னரே குறிப்பிட்ட மாதிரி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமிதான் சித்ரகுப்தருக்கு திருவிழா நடத்தப்படும். சித்ரகுப்தனின் மனைவி கர்ணகி. இவர்களுக்கு திருமணம் நடந்ததும் சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான் என்று சொல்லப்படுகிறது. சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் பகலில் வினைகள் தீர்க்கும் விநாயகரை முதலில் வணங்கி (விரதம் நல்ல முறையில் அனுஷ்டிக்க) உப்பு சேர்க்காத உணவு உண்டு மாலை வேளையில் பெளர்ணமி நிலவு வானில் வந்ததும் தரிசித்து சித்ரகுப்த பூஜை செய்ய வேண்டும். பூஜையில் வைக்கும் பிரசாதங்களுடன் முடிந்த அளவில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

சித்ரகுப்தரை வழிபட ஸ்தோத்திரம்:

யமாய தர்மராஜாய ம்ருத்யவேச அந்தகாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஒளமதும்பராய தத்னா ய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்த காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் ப்ரச்சோதயாத்வ்

இவ்வளவு சிறப்புகள் கூடிய தினமான சித்ரா பெள்ர்ணமி அன்று நாமும் இறைவனை வழிபட்டு சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்.