விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.

நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன? கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது.
சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர் களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார். இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய் சிரித்தான் சந்திரன்.

பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,

‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.\

விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.