புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.

எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன. ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.

அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி’யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.

ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.

வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.

கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.

வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை இல்லத்தை மட்டுமல்ல நமது உள்ளத்தையும் புனிதமாக்கும் மூலிகைகளாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு கண் திருஷ்டி இருந்தாலும் தீபத்திற்கு அதை மாற்றும் ஆற்றல் உண்டு. வீடு எப்பொழுதும் லட்சுமிகரமாக இருந்தாலே நம்மை எந்த எதிர்ப்பு சக்தியும் அணுகாது.

பூஜை அறைக்குள் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது. சிலர் படங்களை மாற்றி அமைக்க யோசனை சொல்வார்கள். யாருக்காகவும், எதற்காகவும் அதையெல்லாம் மாற்றியமைக்கக் கூடாது. நம் வீட்டு பாரம்பரியப்படி தான் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர். பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத் திருப்பதற்காகத்தான் செய்கின்றோம்.
மணமக்களுக்கு மஞ்சு நீராடல் என்ற ஒரு சடங்கு இருக்கிறது. இது மணமகன், மணமகளுக்கு இருக்கும் திருஷ்டியைப்போக்குவதற்காக வைத்ததாகும். மஞ்சளுக்கு திருஷ்டி தோஷம் போக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அழகான தம்பதியர் திருஷ்டி தோஷத்தால் உடல்நலம் பாதிக்காமல் இருக்க இந்த சம்பிரதாயம் நடத்துவர்.

வீட்டில் எல்லா அறைகளையும் திறந்து வைக்கக்கூடாது. சரியான முறையைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எப்படிப்பட்டவர்கள் பார்வை நம்மீது பட்டாலும் அது நம்மை பாதிக்காது. முருகப்பெருமானைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வழிபடுவது, எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். மேலும் கணபதி ஹோமத்திலிருந்து கிடைக்கும் சாம்பலை வீட்டு பூஜையறையில் வைக்கலாம்.

எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் ஏழைகளுக்கு உதவுதல், முதியோர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தல், வறுமையில் வாடுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அவை நமக்கு நல்ல வழிகாட்டும். அதனால் தான் ‘தர்மம் தலைகாக்கும்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருஷ்டி தோஷம் போக்கும் வல்லமை, முதியோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் உண்டு.