ஈழத்தின் மணிவிளக்கெனத் திகழ்வது நயினாதீவு. இது சப்த தீவுகளில் ஒன்றாகும். ஸ்ரீ நாகபூஷணித் தாயின் பொன்னாடெனவும் தன்னாடெனவும் இந்துமதம் என்றென்றும் வேரூன்றி கார்காத்த வேளாண்குடிச் சைவமக்கள் இன்றும் கலப்பற்று வாழ்வதும் செந்தமிழ் நிலைபெற்று மிளிர்வதும், அகில உலகமும் ஆத்மீக ஒளிபரப்பிய புத்தர் பெருமான், மணிமேகலை போன்ற உத்தம உத்தமிகளால் தரிசிக்கப் பெற்றதுமான பல சரித்திரப் பெருமை வாய்ந்த இத்தீவின் கண்ணே கோயில் கொண்டேளுந்தருளியிருக்கும் ஸ்ரீ நாகபூஷணித் தாய்க்கு பூசை செய்த நயினாப்பட்டரென்னும் அந்தணர்க்கு முப்பதாந் தலைமுறையினராகத் தோன்றியவரும், ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தைப் புதுமை பெறச் செய்து மகிமை பெற்றவருமான உயர்திரு. இராமலிங்கர் இராமச்சந்திரர் அவர்களது ஏழாவது ஆண்வழித் தோன்றலாக உயர்திரு. நாகநாதர் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கனிஷ்ட புத்திரனாக அவதரித்தார் உயர்திரு. சிவப்பிரகாசம் அவர்கள்.

அவர் தனது பள்ளிவாழ்க்கையில் மிகுந்த ஆற்றலும் அறிவும் துடுப்பும் உள்ள மாணவராகத் திகழ்ந்தார். தனது உற்றோர் மற்றோரின் வாழ்வில் அவர்கட்கு முன்னோடியாக இருந்து அவர்கள் தம் துயர்களைந்து தன்னலம் கருதாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்தார். தம் வாழ்வில் பல்தொழிலும் தெரிந்து பலவானாக திகழ்ந்து தனது ஊக்கத்தாலும் முயற்ச்சியாலும் , கிராமசேவகர் பரீட்சையில் முதல்வராக சித்தியெய்தி அப்பணியையே தன் வாழ்வுப் பணியாகக் கொண்டு வாழ்ந்தார் திரு சிவப்பிரகாசம் அவர்கள். பெற்றோரும், உற்றோரும் மற்றோரும் இவருக்கு திருமணம் நிச்சயித்து, மேற்கூறிய நாகநாதர் பெண் நாகமுத்து (நாகரை) வின் சகோதரன் இராமகிருஷ்ணன் மகள் நாகமுத்து தையலம்மை தம்பதிகளின் நங்கை நல்லாள் கனகம்மா என்பவரே இவரது அன்புக்கும் பண்புக்கும் செயலுக்கும் அறிவுக்கும் அமைந்ததோர் துணையாள் எனத் துணிந்து,
“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”

யாக திருமணஞ் செய்து வைத்தனர். தன் மனைவி வழி மைத்துன மைத்துனிகள் உயர்திரு சபாரெத்தினம், திருமதி சிவக்கொழுந்து, உயர்திரு. இராசையா, திருமதி இராசம்மா, அமரர் உயர்திரு கோபாலபிள்ளை, உயர்திரு. கணபதிப்பிள்ளை, உயர்திரு. காராளபிள்ளை என்பவர்களின் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து, தன் சிறப்பிலும் அவர்கள் சிறப்பை அதிகம் நாடினார். நயந்தார்.

அங்ஙனம் இல்லறத்தை நல்லறமாக நடாத்திவரும் நாளில் தான் செய்த புண்ணியப் பலனாலும் அருந்தவப் பேற்றாலும் ஓர் பெண் குழந்தையை பெற்று, கலியுகவரதன் சஷ்டியில் பிறந்தமையால் ஸ்ரீஸ்கந்தகெளரி என திருநாமமிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தார். விநாயக தவத்தால் ஓர் ஆண்குழந்தையைப் பெற்று தவவிநாயகன் எனத் திருநாமமிட்டு வளர்த்துவரு நாளில் முந்தையோர் தவத்தினாலும் முருகன் கருணையினாலும் ஓர் ஆண்குழந்தை பிறந்திட முருகவேள் என்றே திருநாமமிட்டு வளர்த்து மகிழ்ந்து வந்தார். ஆடும் நாதனின் அருளாசியினாலும் தமது புண்ணியப்பேற்றினாலும் பின்னையவனாக ஓர் ஆண்மகனைப் பெற்று கனகசபேசன் என திருநாமமிட்டு,
“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”

என தம் அருமைக் குழந்தைகளுடன் வாழ்ந்து புத்திரர்களுக்கு வேண்டிய கல்வி, ஞானம், செல்வம் எல்லாவற்றையும் அளித்து சிறப்புற்று இருந்தார்.

1956 இல் இருந்து கிராமசேவகராக கடமையாற்றிய காலம் வரை அரசாங்க விடயங்கள் ஒவ்வொன்றிலும் ஒழுங்கையும் சட்டத்தையும் கடைப்பிடித்த ஒரேயொரு சேவையாளனாக திகழ்ந்தார். நேர்மை, சத்தியம், உண்மை, சட்டம், ஒழுங்கு, நீதி என ஒவ்வொரு காரியத்தையும் தனித்து நின்று செயலாற்றும் ஒரு செயல்வீரர். ஜீவசேவையில் பெருங்கருணை கொண்ட மகாத்மாவாக திகழ்ந்தார் திரு. சிவப்பிரகாசம் அவர்கள். “அன்னை நாகமுத்து தாகசாந்தி நிலையத்தை” தாபித்து இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாக வாழ்ந்தார். பொதுப்பணிகள் செய்வதில் பொதுவுடமைவாதியாக திகழ்ந்த அமரர் அவர்கள் தனது குலதெய்வமாம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தை மேம்பாடுற செய்வதற்கு அல்லும் பகலும் அயராது உழைத்தார். ஆலயத்தின் தலைவராகவும், தேர்த் திருப்பணிச் சபைக் காரியதரிசியாகவும் இருந்து கும்பாபிடேகம், தேர்த்திருப்பணி முதலாக அரும்பெருங் காரியங்களை செய்து முடித்த பேரறிவாளர்.

பகவான் கண்ணன் கீதையில் கூறும் ‘அவதர்மம்’ தனக்கு சரியென்று தோன்றுவதை செய்து முடிப்பவனே நிறைஞானி, அவனே ஆத்மபலம் கொண்டவன், அவ்வகையில் வாழ்ந்தவர் உயர்திரு. சிவப்பிரகாசம் அவர்கள். அமுதசுரபி அன்னதான சபை ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவராக இருந்து தம் உடல் பொருள் ஆவி அத்தனையையும் அன்பர்க்கு உணவளிக்கும் அன்னதானத் தொண்டில் செலுத்தி அயராது உழைத்தார். ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற நாவுக்கரசர் வாக்குக்கமைய மக்கட் பணியையே மகேசன் பணியாக வாழ்ந்த அன்னாரது வாழ்வும், செயற்கரிய சேவைகளும், உயர்ந்த சிந்தனைகளும் ஒருசில தீயசக்திகளுக்கு விருப்பற்றவையாக அமைந்தன. அவருடைய சேவைகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் வாழ்வுக்கும் போட்டிகள் பொறாமைகள் பகைகள் சூழ்ந்தன. எத்தனை இடர்வரினும் அஞ்சா நெஞ்சினனாக ஆண்மையாளனாக திகழ்ந்தார் திரு. சிவப்பிரகாசம் அவர்கள்.

உற்றார் உறவினர் வாழ்வில் அவர்கட்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்காக திகழ்ந்த அமரர் அவர்கள் தம்வாழ்வில் பெற்றதிலும் பெருமகவாக அருமை மருமகளாக, மைத்துனர் உயர்திரு. சபாரெத்தினம் அவர்களுடைய சிரேஷ்ட புத்திரி கமலேஸ்வரியின் வாழ்க்கை வாழ்வாங்கு வாழ, உயர்திரு. முருகேசு அவர்களின் கனிஷ்ட புதல்வன் உயர்திரு தாமோதரம்பிள்ளை அவர்களை மங்கை மணாளனாக சூட்டி அவர்கள் தம் வாழ்வில் தாரணி, நாரணி, குமரேசன், கார்த்திகா, சந்திரிகா என்ற ஐவரை அன்புப் பேரர்களாகவும் கண்டு களிசிறத்திருந்தார்.

அன்னாரது வாழ்வில் அவரோ அல்லது எவருமோ நினைக்காத வகையில் அவருடைய வாழ்வு இப்பூவுலகில் நீங்காப் புகழுடன் நின்றுவிட்டது. அவரது வழிபாடும் உயர்ந்த சிந்தனையும் ஜீவகாருண்யமும் பரிபூரண பக்குவ நிலைக்கு வெகு விரைவில் உயர்த்திவிட்டன. மாணிக்கவாசகப் பெருமான் சிவசோதியுள் கலந்த ஆதிரை திங்களில் (26-12-1986) யாவரும் பெறற்கரிய பேறாக ஆடும் நாதனின் அடிக்கமலங்களில் மாறிலா மகிழ்ச்சியில் அமர்ந்து விட்டார்.

வாழ்க இவர் தம் பெருமைகள்
வாழ்க இவர் இலட்சியங்கள்
வாழ்க இவர் நாமம்

இவ்வையத்துள் எல்லாம் சிவப்பிரகாசம்
வாழிய வாழியவே.