உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.
பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜை; மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜை; சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை; ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை; ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே பூவுலகிலும் செய்யப்படுகிறது.
இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்திர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.
நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷேகங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.