ஒருவரது எண்ணம் அல்லது கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்கும் தகவல் தொடர்புகளுக்கு, குறியீடுகள் அல்லது சின்னங்களை பயன்படுத் தும் முறை பழங்காலம் முதலே நமது நாட்டில் இருந்து வந்துள்ளது. மன்னர்கள் தங்களது முத்திரை மோதிரங்களை பயன்படுத்தி, முக்கியமான செய்திகளை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினார்கள். சரித்திர ஆய்வுகளை மேற்கொள்பவர்கள், தங்களது முடிவுகளை உறுதி செய்ய சின்னங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆன்மிக சின்னங்கள் அல்லது குறியீடுகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆன்மிகம் தொடர்பான விஷயங்களுக்கு அவசியமானதாக இருப்பதோடு, தனி நபரது வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் இருந்து வருகிறது.

திரிசூலம் :

இந்து மதத்திலும், புத்த மதத்திலும் பண்டைய காலத்திலிருந்தே கடவுளர்களது ஆயுதமாக திரிசூலம் இருந்து வருகிறது. தெற்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் திரிசூலம் வெகு காலத்துக்கு முன்பே ஆன்மிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்து சமயத்தின் பிரதான தெய்வங்களான சிவன், காளி, துர்க்கை ஆகிய தெய்வங்களின் கைகளில் திரி சூலம் இருக் கிறது.

ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று வித இருளை நீக்கும் அடையாளமாகவும், தீய சக்திகளை அழிக்கும் என்ற தத்துவமாகவும் திரிசூலம் உள்ளது.

திரி சூலத்தில் உள்ள மூன்று கூர்மையான பகுதிகள், மனித வாழ்வின் மூன்று நிலைகளான விழிப்பு, கனவு மற்றும் தூக்கம் ஆகிய நிலைகளையும், மனம், வாக்கு, உடல் ஆகியவற்றையும் மறை பொருளாக குறிப்பிடுகிறது என்ற ஆன்மிக உள்ளர்த்தம் சான்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மூன்று நிலைகளிலும் மனிதர்கள் எப்போதும் ஒன்றுபட்ட நிலையில் இருக்கவேண்டும் என்பதை சூலத்தின் வடிவம் எடுத்துக்காட்டுகிறது.

அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்து வருபவர்களுக்கு ,அம்பிகையின் அருளால் வீடுபேறு என்ற முக்தி கிடைக்கும் என்பது ஆன்மிக தத்துவமாகும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதை சூலம் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

அதன் காரணமாக சூலத்தை கைகளில் வைத்திருக்கும் அம்பிகை ‘திரிவர்க்க தாத்ரீ’ என்று போற்றப்படுவது வழக்கம். பொதுவாக, சாக்த நெறிமுறையை கடைப்பிடிப்பவர்கள், தங்கள் இருப்பிடங்களில் திரிசூலத்தை ஒரு அடையாளமாக வைத்திருப்பதும், வீடுகளின் பூஜையறை மற்றும் கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம். அதன் மூலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஸ்ரீ சக்கரம்:

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி உபதேசம் பெற்று, உரிய நியமங் களுடன் வழிபட்டு வந்தால், பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும்.

ஆதிசங்கரர் பல்வேறு சாக்த தலங்களுக்கு சென்று, அங்கு உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்னர் அல்லது அந்த கோவில்களின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்து, அந்த தெய்வ மூர்த்தங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார்.

பிரபலமான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும், அவரால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஒற்றைக்காலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும் அர்த்த மேரு அமைப்பில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல கோவில்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடுகள் நடந்து வருகின்றன.

சிதம்பரத்தில் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த வடிவமாக இருக்கும் ஸ்ரீசக்கரம், சிதம்பர ரகசியமாக வழிபடப்படுகிறது. கயிலாய பிரஸ்தாரம், மஹாமேரு பிரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் என்று பலவகைகளில் இருப்பதாக பெரியோர்களால் சொல்லப்பட்ட ஸ்ரீ சக்கரம், எங்கு இருக்கிறதோ.. அங்கு லட்சுமி கடாட்சம் பெருகுவதாக ஐதீகம். அதனால் ஆன்மிக சின்னங்களில் இது முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது.

ஓம்காரம்:

‘ஓம்’ என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படு கிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ‘டோனோஸ்கோப்’ என்ற கருவியில் ‘ஓம்’ என்ற உச்சரிப்பை கச்சிதமான ஒலி வடிவத்தில் பதிவு செய்தால், அதில் ஸ்ரீ சக்கரம் உருவம் தென்படுவதை அறியலாம்.

பகவத் கீதையானது ஏக அட்சரமாக விளங்கும் ஓம்காரத்தை புகழ்வது குறிப்பிடத்தக்கது. தாயின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு தொப்புளின் வழியாக உணவு செல் கிறது. பிறகு குழந்தை வாய் வழியாக உணவை உட்கொள்கிறது. ஓம் காரத்தின் உச்சரிப்பை நாபிச்சுழியில் ஆரம்பித்து, வாயின் உதடுகளில் முடிப்பதை அதனுடன் ஒப்பிடுவது சுவார சியமானது.

‘ஓம் அக்னிமீளே புரோஹிதம்..’ என்று தொடங்கி, இறுதியில் ‘ஹரி: ஓம்’ என்று ரிக் வேதமானது, ஓம்காரத்தில் தொடங்கி ஓம்காரத்திலேயே நிறைவடைகிறது. அதாவது, ஆரம்பமும், முடிவும் ஓம்காரமாக அமைந்து உலக இயக்கம் யாவும் வட்ட வடிவில் இயங்கி வருகின்றன என்பது தாத்பரியம்.

நமது உடல் இயக்க அதிர்வுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு வட்ட மடித்து மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிகின்றன. ஓம்கார சின்னம் வரி வடிவம் மற்றும் சப்த வடிவம் ஆகியவற்றில் உலக இயக்கத்தோடு ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கக் கூடியதாகும்.

ஷட்கோணம் :

ஆன்மிகத்தில் முக்கோணத்திற்கு தனிப்பட்ட சிறப்பு உண்டு. முக்கோணம் என்பது சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங் களை உணர்த்துகிறது.

முக்கோணத்தின் உச்சி கீழ்நோக்கி இருந்தால் அது சக்தியாகிய பெண் அம்சமாகவும், மேல்நோக்கி இருந்தால் சிவமாகிய ஆண் அம்சத்தையும் குறிப்பிடும். இரண்டும் இணைந்த அறுங்கோணமானது சிவசக்தி ஐக்கியத்தையும், உலகத்தின் தோற்றத்தையும் குறிக்கிறது.

ஷட்கோணமானது ‘சரவண சக்கரம்’ என்றும் அழைக்கப்படும். அந்த வடிவத்தில்தான் சித்தர் களின் பெரும்பாலான யந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நான்கு முக்கோண அமைப்புகளின் இணைப்பில் ஒரு பிரமிடு வடிவம் உருவாகிறது.

அந்த வடிவமானது தரையில் அழுந்தும்போது சதுரமாக மாறுகிறது. யந்திரங்கள் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அறுங்கோணம் எனப்படும் ஷட்கோணமானது சக்திகளின் சங்கமமாக இருப்பதால், புதியதாக ஒன்றை அடைய விரும்புபவர்கள் தங்களது லட்சியங்கள் பூர்த்தி அடைய பயன்படுத்தப்படும் சின்னமாக இது உள்ளது.

பூரண கலச சின்னம்:

மண்ணால் ஆன அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங் களால் செய்யப்பட்ட, நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு ‘கலசம்’ எனப்படுகிறது.

இந்த கலசத்தின் உள்ளிருக்கும் நீர் புனித நதிகளின் நீராகவும், அதில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்டதாகவும் இருக்கும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல், பானையின் மேலிருந்து கீழாக நுணுக்கமாக சுற்றப்படும். பானையின் மேல் புறத்தில் அழகான வடிவங்கள் குங்குமத்தால் வரையப்படும். இவ்வாறு சகல அலங்கார அமைப்புடனும் உள்ள பாத்திரம் ‘பூரண கும்பம்’ என்று அழைக்கப்படுகிறது.

கிரகப்பிரவேசம், திருமணம், தினசரி பூஜை, கோவில்களின் கும்பாபிஷேகம் மற்றும் இதர ஹோம பூஜைகளுக்கும் இந்த கும்ப அமைப்பு முக்கியமான ஒன்றாக இருக்கும். மேலும், பல்வேறு சமூக மற்றும் குடும்ப விழாக்களின் நுழைவு வாசலில் வருவோரை வரவேற்கும் வகையில் கலசம் வைக்கப்படுகிறது.

பூரண கலசமானது உயிருள்ள ஒரு தேவதையின் வடிவமாக கருதப்படுகிறது. அதனை வீட்டின் தலைவாசலில் வைக்கப்படும்போது, அது மனிதர்களை வரவேற்பதோடு மட்டுமல்லாமல், மங்கலங்களை தரும் இதர தேவதை களையும் வரவேற்பதாகவும் ஐதீகம்.

ஹம்ஸா:

கண் திருஷ்டி என்பது, பல காலமாக மனித சமூகத்தின் பல்வேறு வீழ்ச்சிகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றைய நாகரிக உலகிலும் கூட, சாதாரண பெட்டிக்கடை முதல், பெரும் தொழில் நிறுவனங்கள் வரை கண் திருஷ்டிக்கான பொருட்கள் அல்லது சின்னங்களைப் பயன் படுத்தி வருகின்றன.

ஆன்மிக குறியீடாக உள்ள ‘ஹம்சா’ என்று சொல்லப்படும் இந்தச் சின்னம் பல நாடுகளில் கண் திருஷ்டிக்கான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலோகத்தால் செய்யப்பட்ட இந்தச் சின்னம் கழுத்தில் டாலராக அணியப்படுகிறது அல்லது வீடுகளின் முன்புறம் கதவுக்கு அருகில் தொங்கவிடப்படுகிறது. அதன் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படுவதோடு, கண் திருஷ்டிகளுக்கு தக்க தடுப்பு உண்டாவதாகவும் நம்பிக்கை உண்டு.