நாகமணிப் புலவரின் பின் வெளிநாடுகளிலும் தன் கீர்த்தியைப் பரப்பிக்கொண்டிருந்தவர் கவிஞர் வைத்திய கலாநிதி திரு. ஆ. இராமுப்பிள்ளை அவர்களேயாகும். அறிஞருலகு மெச்சும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை யாத்துள்ளார்.

இலங்கை இந்திய நாளிதழ்களிலும் வாரயிதழ்களிலும் பன்னூற்றுக் கணக்கான இவரின் பாடல்கள் வெளிவந்துள்ளன. அன்னாரின் பாடல்கள் அனைத்தும் பொருளாளமும் இலக்கண வரம்பும் அமைந்த செறிவுற்ற பாடல்களாகும். அவர் தனது பாடல்களைப் பாடிக்காட்டும் பாணியே தனிரகம். கேட்கமிக இன்பமாக இருக்கும். வே.த.நாகேசு அவர்களுக்கு திரு.இராமுப்பிள்ளை அவர்களது பாடல்களை அவரைப்போலவே பாடிக்காட்டுவதில் ஒரு தனி ஆனந்தம். அவர் கவிஞரின் விசிறியாவர். சிலேடைவகை எதனுள்ளும் அடங்காத இரு கருத்துள்ள புதுமையான கவிகளாகும்.
வைத்திய கலாநிதி திரு.ஆ.இராமுப்பிள்ளை அவர்கள் சோதிடத்திலும் வல்லவர்.இவர் தனது உறவினர் வீடொன்றுக்குச் சென்றபோழுது அங்கு சோதிடம் பார்க்கவேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது.அவ்வீட்டில் சில பெண்கள் மிளகாய்த்தூள் இடித்துக்கொண்டிருந்தனர். சாதகம் பார்ப்பதில் கவனம் செலுத்திய புலவரின் மூக்கினுள் மிளகாய்க் காரம் புகுந்து இடைவிடாத தும்மலை ஏற்படுத்தியது. மிகவும்  கஷ்டப்பட்டதனால் சாதகம் பார்ப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு ஒற்றையில் ஒரு அரைப் பாட்டு எழுதியதும் மிகுதியை எழுத முடியாததாலும் அங்கிருந்து எழுந்துசென்றுவிட்டார். அந்த ஒற்றையில் எழுதிய பாடலின் இரு வரிகள்
பூமான் ஒருவரின் சாதகம் பார்க்கின்ற போதினிலே
கோமான் மகன் வந்து குடிகொண்டான் நாசிக் குகைதனிலே
மிளகாய்த்தூள் காரம் மூக்கில் புகுந்து விட்டதை எடுத்துச் சொல்ல கவிஞர் தனது மைத்துனர் கோமான் மகனையே எடுத்துக் கொண்ட நுட்பம் நம் நாட்டவர் மாத்திரமே அனுபவிக்கக் கூடிய  ஒன்று.
புலவர் ஒருநாள் தனது முச்சக்கர வண்டியில் ஏறிக் கோவிலடிக்கு வந்திருந்தார். அங்கு ஒருகடையில் முருங்கக்காய் விற்பனைக்கு இருப்பதைக் கண்டு திரும்பிப் போகும்போது அதில் இரண்டு முருங்கக்காயை வண்டியில் வைத்துக்கொண்டு வீடு சென்று கொண்டிருந்தார். அக்காலத்தில் முருங்கக்காய் கிடைப்பதரிது. புத்தகோவிலடியினைத் தாண்டவில்லை திரு.நா. காராளபிள்ளை அவர்கள் கையில் ஒரு முருங்கக்காயுடன் தன்னைத் தாண்டி கொண்டு துவிச்சக்கர வண்டியில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். கவிஞருக்கு ஒரே ஆச்சரியம். காராளபிள்ளையின் குடும்பமோ பெரிய குடும்பம் ஒரு முருங்கக்காயை கொண்டுபோய் என்ன செய்யப்போகிறார்.புலவரின் சிந்தனை இவ்வாறு எண்ண இடையில் ஒரு நாய் குறுக்கிடவே அவர் சிந்தனை தடைப்பட்டது. வீட்டுக்கு வந்த புலவர் முருங்கக்காயை மருகியிடம் கொடுக்க எண்ணி வண்டியை போய்ப் பார்த்தார். வண்டியில் ஒரு முருங்கக்காய் மட்டுமே இருந்தது. அப்பொழுதுதான் அவருக்கு விஷயம் விளங்கியது. தான் தவறவிட்ட முருங்கக்காயைத் தான் கராளபிள்ளையர் வழியில் கிடந்து எடுத்துச் சென்றுள்ளார். வழியில் கிடப்பதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே என நினைத்தார். இருந்தாலும் தான் ஆசைப்பட்ட பொருளை ஆக்கி தின்ன முடியவில்லையே என்ற கவலை. ஒருகாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? உடனே பக்கத்தில் திண்ணையில் கிடந்த பயிற்சிப் புத்தகத்தை எடுத்து அதில் ஒரு ஒற்றையைக் கிழித்து அதில் :-
கார்கண்டு நாணுமீகைக் காராளப்பிள்ளை நல்லோய்
நீர் இன்று வடக்கேவந்து நெடுவழி மீளும்போது
நேர்கொண்ட முருங்கைக்காயை நிலத்தில் கண்டெடுத்துப் போனீர்
ஆர் தம தெனினும் பொய் பொய் அதனை இங்கனுப்புவீரே
என எழுதி அதை அடுத்த வீட்டுப் பையனிடம் கொடுத்து காராளபிள்ளையிடம் கொடுத்தனுப்பி வைத்தார். சிறந்த வியாபாரியான காராளபிள்ளை தன் கடையில் இருந்த இரண்டு முருங்கக்காயையும் சேர்த்து மூன்று முருங்கக்காயாக அணுப்பி வைத்தார். புலவரின் பாட்டுக்கு மூன்றென்ன முப்பதாயிரமும் கொடுக்கலாமே.
எழுத்துருவாக்கம் – கோபாலசுந்தரம்