நயினாதீவு தபால், தந்தி, தொலைத்தொடர்புச் சேவைகள் போக்குவரத்துச் சாதனங்களிலேயே தங்கியுள்ளது எனலாம். ஆரம்ப காலங்களில் அலுப்பாந்தியிலிருந்து வந்த பெரிய வத்தைகளிலேயே தபால் பொதிகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் ஊர்காவற்றுறையிலிருந்து தீவுப் பகுதி ஐக்கிய மோட்டார் சங்கத்திற்குச் சொந்தமான பயணப் படகுகள் மூலமும், தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து இ.போ.சகுச் சொந்தமான பேருந்துகளின் மூலமும் புங்குடுதீவு-நயினாதீவு ப.நோ.கூ சங்கத்தினர் பொறுப்பேற்று நயினாதீவிற்கு தபால் பொதிகள் வந்து சேருகின்றன.

                முன்னர் அங்கீகாரம் பெற்ற உபதபாலதிபர்கள் (Sub-Post Master) பொதிகளைப் பொறுப்பேற்று தமது சொந்த வீடுகளையே உபதபாலகமாகப் பாவித்து வந்தனர் (அனுமதியுடன்).  தபால் சேவகர்கள் (Post Master) நியமனம் அரச நியமனங்களாகவே இருந்தன. அவர்களுக்கு அரச ஊழியர்களுக்கு இருந்த சலுகைகள் வழங்கப்பட்டன. தபாலகத்தில் வைத்தே கடிதங்கள் பிரித்து விநியோகிக்கப்பட்டன. மக்கள் தபாலகத்தில் கூடுவர். முதல் உபதபாலதிபராக அமரர் தம்பையா கார்த்திகேசு (கணேசர்) அவர்கள் கடமையாற்றினார். பின்னர் உபதபாலதிபராக வந்த சிவஸ்ரீ நடராச ஐயர் அவர்கள், நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலையின் தெற்குப் பக்கமாக அவரது வீட்டிலேயே உபதபாலகம் இருந்தது. அவ்வளவில் தொலைத்தொடர்புக்கான இயந்திர அறையும் கட்டப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தந்திகள் (Telegrams), தந்திக் காசுக் கட்டளைகள் (Telegram Money Order) என்பன தொலைபேசி மூலம் பெறப்பட்டன. இவரது காலத்தில் 7 தபால் சேவகர்கள் கடமையிலிருந்தனர். அமரர் செ.குற்றாலலிங்கம் அவர்கள் தொலைத் தொடர்பு இயக்குனராகக் (Telephone Operator) கடமையாற்றினார்.

                1973 இல் கௌரவ தபால் தந்தித் தொடர்பு அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியனால் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது. அப்பொழுது உபதபாலகத்தில் கடமை செய்த உபதபால் அதிபர் செல்வி திருமதி சிவகாமி மகாதேவா (Post Mistress) அவர்களும் அரச தபாலதிபர் சேவையில் இணைக்கப்பட்டார். தரமுயர்த்தப்பட்டதனால் தபால் அதிபராக திரு.எஸ் கருணராசாவும், கீழ் குறிப்பிட்டவர்களும் தபாலதிபர்களாக நற்சேவை செய்து வருகின்றனர்.

நயினையில் தபாலதிபர்களாக பதவி வகித்தவர்கள்

1.            1973 – 1974 திரு. எஸ். கருணராசா

2.            1973 – 1974 திருமதி. சிவகாமி மகாதேவா

3.            1974 – 1978 திரு. எஸ். சிவபாதம்

4.            1974 – 1978 திரு. வை. இராசரெத்தினம்

5.            1978 – 1982 திரு. எஸ். சண்முகராசா

6.            1978 – 1982 திரு. எஸ். அமிர்தலிங்கம்

7.            1982 – 1985 திரு. எஸ். குலசிந்தாமணி

8.            1985 – 1989 திரு. ப. யோகராசா

9.            1989 – 1992 திரு. ப.க. மகாதேவா J.P

10.          1992 – 1995 திரு. க. புஸ்பநாதன்

11.          1995 – 1999 திரு. நா.க. குமாரசூரியர் J.P

12.          1999 – 2001 திரு. மு. சபேசன்

13.          2001 – 2007 திரு. நா.க. குமாரசூரியர் J.P

14.          2007 – இன்றுவரை திரு. அ. அகிலன்