வற்றாத செல்வமருளும் வரலட்சுமி | Nainathivu | நயினாதீவு

வற்றாத செல்வமருளும் வரலட்சுமி

வரலட்சுமி விரதம்: 31 – 7 – 2020

ஆடி மாத அமாவாசையில் இருந்து ஆவணி மாத அமாவாசை வரை உள்ள காலத்துக்கு ச்ராவண மாதம் என்று பெயர். அந்த ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும், மாங்கல்ய பாக்கியம் என்றும் நிலைப்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.மகத தேசத்தைச் சேர்ந்த சாருமதி என்னும் பெண் தனது கணவனையும், கணவனின் பெற்றோர்களையும் நன்கு பேணி, மிகச்சிறந்த குடும்பப்பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தாள். அவளது நற்குணங்களைக் கண்டு வியந்த மகாலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கச் சொல்லி, அதை அனுஷ்டிக்கும் முறைகளையும் அவளுக்கு உபதேசித்தாள்.

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்.

இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

நிவேதனப் பொருட்கள்:
சர்க்கரைப் பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை

விரத முறை:

விரதத்துக்கு முந்தைய நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இடுவார்கள். பூஜைக்கான இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகுவார்கள். விரதத்தன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றுவார்கள்.ஒரு கலசத்தினுள் வாசனை திரவியங்கள் கலந்த நீரை நிறைத்து, அதன் மேல் மாவிலைக் கொத்து வைத்து, அதன் நடுவில் மஞ்சள் தடவிய தேங்காயை வைப்பார்கள். அந்தத் தேங்காயில் லட்சுமியின் உருவத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, அதன்மீது மஞ்சள் சரடை வைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளோடு ஒன்பதாம் லட்சுமியாக வரலட்சுமி திகழ்வதன் அடையாளமாக அந்தச் சரடில் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்டிருக்கும். மலர்களால் கலசத்தில் உள்ள லட்சுமிக்கு அர்ச்சனை செய்து, லட்சுமி அஷ்டோத்தரம், லட்சுமி ஸஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்ரம், ஸ்ரீஸ்துதி உள்ளிட்ட லட்சுமி தேவியைக் குறித்த ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வார்கள்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

 

வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான்.இவ்வாறு வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் பேறு பெறுவதோடு, அவர்களின் குடும்பங்களில் அனைத்து மங்கலங்களும் நிறையும்.

அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.