மனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது? – சீதை சொன்ன நீதி!

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ”தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்” என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ”அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.

அதற்கு அனுமன், ”தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ”அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே” என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்’ என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் பதிவுகளை வாசிக்க

ஐயப்பன் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வித... சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் யாத்திரையின் புனிதத் தன்மையை சிறப்பான முறையில் நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும். இதேவேளை, ஐயப்பன் விரதம் ...
முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா??... தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா? ...
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படிக் கடைப்பி... அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும்,  ஏகாதசி விரதத்துக்கு...
கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்... புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம். எந்தவொரு மன...
சனிதோஷம் எளிதில் நீங்கும் பரிகாரம்... சனி தோஷம் , ஏழரைச் சனி உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் செய்யவேண்டிய பரிகார முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் த...
திருநீறு பூசும்போது செய்யக்கூடாதது... திருநீறு பூசும்போது செய்யக்கூடாதது 1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேச...