பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.
பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.
இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வணங்க வேண்டும்.
பின்னர் இடமாக சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும் போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டு வழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.