தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றும். இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அதனால் முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சியாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஏராளமான முருக பக்தர்கள் விரதமிருந்து, காவடியெடுத்து முருகப் பெருமானுக்கு வேண்டுதல் செலுத்துகின்றனர்.

பார்வதி – பரமேஸ்வரன், மீனாட்சி – சுந்தரேஸ்வரர், ஆண்டாள் – ரங்கமன்னார், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.

பங்குனி உத்திரம் வரலாறு

குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி முருகனிடம் கூறினார்.

இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு சென்று, தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். முருகனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன.

இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். அவர்கள் இருவருக்கும் கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான்.

இதைக்கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான். உடனே அங்கிருந்த முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் புகுந்துக் கொண்டான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.




பங்குனி உத்திர விரத முறை:

பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை  மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோயிலுக்குச் சென்று  தீபமேற்றி வழிபடவேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதம்: எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நன்னாளில் பன்னிரு கரங்கள் கொண்ட முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும், திருமண தடை அகன்று திருமணம் கை கூடும்.